‘கிராணி’ திரை விமர்சனம்!
டைட்டில் குறித்து சிலருக்கு வரும் கேள்விக்கு முதலில் பதில் சொல்லிடலாம். கிராணி என்பதற்கு பாட்டி என்று பொருள். ஒரு கிழவிதான் கதையின் நாயகியே என்பதால் படத்திற்கு பொருத்தமான தலைப்பை வைத்திருக்கிறார் இயக்குநர்.
கதை என்ன?
ஐடி துறை வேலையை உதறிவிட்டு தங்களது பாரம்பரிய பங்களாவுக்கு குடியேறுகிறது ஹீரோ ஆனந்த் நாக்கின் குடும்பம். விவசாயம் செய்து நிம்மதியான வாழ்வு வாழலாம் என்பதுதான் ஹீரோவின் திட்டம். ஆனால் விதி வேறு மாதிரி விளையாடுகிறது. அதாவது அந்த பங்களாவில் அமானுஷ்யமான சம்பவங்கள் நேர்கிறது. வீட்டுக்கு வெளியே மயங்கி விழும் கிழவியை (வடிவுக்கரசி) பங்களாவுக்குள் அழைத்து வந்து உதவுகிறது ஆனந்த் நாக்கின் குடும்பம். ஆனால் அந்தக் கிழவிதான் வில்லி என்று தெரியவரும்போது காத்திருக்கிறது அதிர்ச்சி. கிழவி வடிவுக்கரசி கிட்டத்தட்ட சூனியக்காரிதான். அந்தக் கிழவியின் பின்னணி என்ன? ஹீரோவின் குடும்பம் என்னவாகிறது என்பதற்கெல்லாம் விடை சொல்கிறது மிச்ச கதை.

வடிவுகரசிக்கு மற்றொரு மாறுபட்ட கதாபாத்திரம். அதில் கச்சிதமாக பொருத்திக்கொண்டு சிக்ஸர் அடித்திருக்கிறார். முகம், செயல் எல்லாமே டெரரக இருக்க, படம் பார்ப்பவர்களை அடிக்கடி பயமுறுத்தி அப்ளாஸ் அள்ளுகிறார். ஆனாலும் மேக்கப் கொஞ்சம் தூக்கலாக இருப்பது உறுத்தல்.
அமானுஷ்ய அதிர்ச்சியின் பின்னணியை ஆராயும் காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் திலீபன், போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் சிங்கம்புலி, ஊர் தலைவராக நடித்திருக்கும் கஜராஜ், வீட்டின் உரிமையாளராக நடித்திருக்கும் ஆனந்த் நாக், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபர்ணா மற்றும் குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் கன்ஷியாம், பேபி சாண்ட்ரியா என அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்
ஏ.மணிகண்டனின் ஒளிப்பதிவும், டாக்டர் செல்லையா பாண்டியனின் பின்னணி இசையின் கதைக்கும் களத்துக்கும் பொருத்தமாக கூடுதல் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
பாட்டி என்றால் குழந்தைகளுக்கு சோறூட்டியும் கதை சொல்லியும்தான் வளர்ப்பாள். ஆனால் இயக்குநர் விஜய குமாரன் காட்டும் பாட்டியோ குரூரத்தின் உச்சமாக இருக்கும் அளவுக்கு மாற்றி யோசித்திருக்கிறார். அதுவே அவரது வெற்றியாக அமைந்துள்ளது.
‘கிராணி’ மிரட்டல்!

