‘மை லார்ட்’ திரை விமர்சனம்!
ஏழைகளை, எளியவர்களை கிள்ளுக்கீரையாக நினைக்கும் அதிகாரவர்க்கத்தின் கண்களில் விரலைவிட்டு ஆட்ட ஒரு சாமானியனுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் என்ன நடக்கும் என்பதை சித்தரிக்கும் சித்திரமே ‘மைலர்ட்’
கோவில்பட்டயை சேர்ந்த தொழிலாளி சசிகுமார். இவரது மனைவி சைத்ரா. அரசு ஆவணங்கள் சொல்வதுபடி இவர்கள் இருவரும் இறந்தவர்கள் பட்டியலில் இருப்பவர்கள். இதனை எதிர்த்துப்போராடும் சசிகுமாருக்கு கிடைக்கும் பரிசு அடி, உதை
இந்த நிலையில்தான் ஆண்டவன் இருக்கான் குமாரு என்பதுபோன்ற சந்தர்ப்பம் கிடைக்கிறது சசிக்கு. அதாவது மத்திய அமைச்சரான ஆஷா சரத்துக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி உயிருக்கு போராடும் நிலை ஏற்படுகிறது. இதனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் முயற்சியில் ஈடுபடும் அவர், வெளி உலகத்திற்கு தான் ஆரோக்கியமாக இருப்பதாக காட்டிக் கொண்டு, அறுவை சிகிச்சையை ரகசியமாக செய்து முடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதே சமயம், அவரது இரத்தப் பிரிவு அரிதானது என்பதால், அவருக்கான மாற்று சிறுநீரகம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்திய அளவில், அவருக்கான மாற்று சிறுநீரகத்தை தேட, இருவர் அதற்கு பொறுத்தமானவர்களாக இருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் சசிகுமார்.

சசிகுமாரை தேர்வு செய்யும் அமைச்சர் தரப்பு, அவரை ரகசியமாக சென்னைக்கு அழைத்து வர முயற்சிக்கிறது. அவர்களது வழியில் சென்று தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அரசு இயந்திரத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும் சாமானியனான சசிகுமார் எழுதும் தீர்ப்பே ‘மை லார்ட்’.
அதிகாரவர்க்கத்தாலும் பண பலத்தாலும் தான் நசுக்கப்படும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களுக்கே வலி கடத்தும் அளவுக்கு அந்த கதாபாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார் சசிகுமார். காதல், கோபம்,இயலாமை, அச்சம், தயக்கம், எமோஷன் என நடிப்பில் அத்தனை ரசங்களையும் சசிகுமார் பகிர்ந்தாலும் அவ்வப்போது ‘நந்தன்’ சசிகுமாரும் நினைவுக்கு வருவது மைனஸ். இதற்கு முந்தைய சசிகுமார் படங்களிலும் ராஜுமுருகனின் முந்தைய பட நாயகர்களிடம் பார்த்த உடல்மொழியும் சலிப்பு.
நாயகியாக நடித்திருக்கும் சைத்ரா அருமையான தேர்வு. நடிப்பு என்பது தெரியாத அளவுக்கு அத்தனை எதார்த்தம். தமிழ் சினிமா இயக்குநர்கள் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து இவரை பயன்படுத்தவேண்டும்.

சக்கர நாற்காலியில் இருந்தாலும் நடிப்பை பொருத்தவரை படம் பார்ப்பவர்களின் இதயத்தில் எழுந்து நிற்கிறார் ஆஷா சரத். ஆணவம், அதிகார பலத்தை பார்வையினாலே வெளிப்படுத்தும் இடங்கள் பிரமாதம். நேர்மையான பத்திரிகையாளராக குரு சோமசுந்தரம் வழக்கம்போலவே கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். மண்ணையும் மண் சார்ந்த மனிதர்களின் உணர்வுகளையும் தன் பங்குக்கு பிரதிபலித்திருக்கிறது நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு. கதை போக்கின் தடம் மாறாத பாடல்கள், பின்னணி இசையை கொடுத்திருக்கும் ஷான் ரோல்டனுக்கு வாழ்த்துகள்.
வழக்கம்போலவே சமூக அவலத்தை சாடும் கதையை கையிலெடுத்திருக்கும் இயக்குநர் ராஜூமுருகனுக்கு பாராட்டுகள். இருப்பினும் படத்தில் வரும் கொசுறு கேரக்டர்கள்கூட கருத்து கந்தசாமியாய் வசனம் பேசுவதெல்லாம் செயற்கையின் உச்சம்.
திரைக்கதையில் ஆங்காங்கே ஏற்படும் தொய்வுகளையும், கதாநாயகனின் குணாதிசயங்கள் திடீர் திடீரென மாறும் லாஜிக் ஓட்டைகளும் அயற்சியை ஏற்படுத்துகின்றன. இந்த குறைகளை கவனித்திருந்தால் ‘மை லார்ட்’ வெகுஜன மக்களின் மனதில் பதிந்திருக்கும்.

