‘சட்டென்று மாறுது வானிலை’ திரை விமர்சனம்!
சட்டென்று கிடைத்த ஒரு காதல்; சட்டென்று அமையும் ஒரு கல்யாணம்; சட்டென்று அதில் ஏற்படும் மாற்றங்களை அடுக்கினால் ‘சட்டென்று மாறுது வானிலை’.
ஜெய் ஒரு ஐடி ஊழியர். பார் ஒன்றில் ஹீரோயின் மீனாட்சியை பார்த்த நொடியில் மனதை பறிகொடுக்கிறார். ஆனால் மீனாட்சிக்கு ஒரு பணக்கார இளைஞன் நண்பராக இருக்கிறார். ஜெய்யுடன் மீனாட்சி பேசியதை நண்பர் சந்தேகப்பட இருவருக்கும் முட்டலாகிறது. அதேநேரத்தில் ஜெய்யின் தூய அன்பால் ஈர்க்கப்படும் மீனாட்சி ஜெய்யை திருமணம் செய்துகொள்கிறார். அட காதலர்களுக்குள் எந்த ஈகோவும் இல்லை; காதலுக்கு குறுக்கே எந்த வில்லனும் இல்லையே என்று நினைக்கும்போதே திடுக் டிராக்கில் மாறுகிறது கதை. அந்த திடுக் டிராக் என்ன என்பதை அறிய தியேட்டருக்கு போங்க.

சொட்ட சொட்ட ரொமான்ஸ் என்றால் ஜெய்க்கு சொல்லவே வேண்டாம். இதிலும் அப்படியொரு சந்தர்ப்பம் ஜெய்க்கு. அதை சரியாக பயன்படுத்தி விளையாடியிருக்கிறார் கேரக்டரில். பதற்றம், இழப்பு, கதறல், அதிர்ச்சி என அந்தந்த உணர்வுகளுக்கு ஏற்றார்போல உயிர்கொடுத்திருக்கிறார் கதாபாத்திரத்தில்.
அழகு, க்ளாமர், ரொமான்ஸ் என மீனாட்சியின் நடிப்புக்கும் அழகுக்கும் பறிபோகிறது இதயம். ஆசை ஆசையாய் ஜெய்யை கல்யாணம் செய்தும் ஒருகட்டத்தில் ஜெய் தன்னை கண்டுகொள்ளாமல் இருக்கும்போது மனம் வாடும்போது கேரக்டருடன் ஒன்றிவிடுகிறார்.
கெட்டவரா நல்லவரா என்ற புரியாத ஒரு கதாபாத்திரத்தில் யோகிபாபு. ஜிப்பு வாயன், அந்த மண்டையன் என்று மற்ற கேரக்டர்களை உருவ கேலி செய்வதை யோகி நிறுத்திக்கொள்வது நல்லது. யோகியின் உருவ கேலி டயலாக்குகள் காமெடி இல்லை; கடுப்பு.
ஜெய்யின் நண்பர்களில் ஒருவராக ஆதித்யா கதிர். சில இடங்களில் சிரிக்க வைப்பவர், பல இடங்களில் எரிச்சலூட்டுகிறார்.
வில்லனாக கருடா ராம் கதாபாத்திரம் அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால் அவரது மேனரிசம் செம எரிச்சல். போலீஸ் அதிகாரியாக ஸ்ரீமன், ஐடி நிறுவன இயக்குநராக சத்யன் என ஒரு சில அனுபவ நடிகர்கள் ஆங்காங்கே ஆஜராகி போகிறார்கள். மினிஸ்டர் உள்ளிட்ட மற்ற கேரக்டர்களின் நடிப்பில் அப்பட்டமான செயற்கை.
கதைக்கும் களத்திற்கும் பொருத்தமான ஒளிப்பதிவை திறம்பட செய்திருக்கும் ரிச்சர்ட் எம்.நாதன் காவல்துறை அதிகாரியாகவும் நடித்திருக்கிறார். நடிப்பில் இன்னும் பயிற்சி தேவை.
கிரிஷ் கோபாலகிருஷ்ண இசையில் பாடல்களில் புதிய சாயல். பின்னணி இசையும் தரம்.
படத்தை எழுதி இயக்கி, தயாரித்தும் இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸின் சிஷ்யரான பாபு விஜய். கதைக்கரு அரத பழசென்றாலும் டைட்டிலுக்கு பொருத்தமாக அடுத்தடுத்து மாறும் காட்சிகளும் திடீர் திருப்பங்களும் திரைக்கதை வலுவாக்கியுள்ளது.
‘சட்டென்று மாறுது வானிலை’ பார்க்கலாம்!

