‘ஹேப்பி ராஜ்’ விமர்சனம்!
சாதி, மதம், பணம், அந்தஸ்து, ஈகோ இதுதான் காதலுக்கு குறுக்கே வில்லனாக நிற்கும் காரணிகளாக இருக்கும். ஆனால் இது எதுவும் இல்லாத ஒன்று ஹீரோ- ஹீரோயின் காதலுக்கு குறுக்கே வில்லனாக வந்து நின்றால்?.. அதுதான் ‘ஹேப்பிராஜ்’.
கிராமத்து வாத்தியாரான மரியம் ஜார்ஜின் மகன் ஜி.பிரகாஷ்குமார். வேலைக்காக பெங்களூர் செல்பவர், தான் வேலை செய்யும் கம்பெனி முதலாளியான கெளரி பிரியாவுடன் காதலாகிறார். இருதரப்பு வீட்டாரும் இவர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட உருவ கேலி என்னும் விஷயம் கல்யாண கலாட்டாவாகிறது. ஜீ.வி.பிரகாஷ் – ஸ்ரீ கெளரி காதல் நிறைவேறுகிறதா இல்லையா என்பதே மிச்ச கதை.

தன்னைவிட தன் மகன் ஜீ.வி.பிரகாஷ் அழகாக இருப்பதால் பெருமிதமாக இருக்கிறார் ஜார்ஜ் மரியான்.ஒருகட்டத்தில் ஜார்ஜ் மரியானாலேயே ஜீ.வி.பிரகாஷின் காதல் திருமணம் தடைபடுகிறது.அதன்பின் அந்தத் திருமணத்தை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்று போராடுகிறார் ஜி.வி.பிரகாஷ்.அந்தப் போராட்டத்தில் அவர் வென்றாரா? இல்லையா? என்பதைக் கலகலப்பாகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.
நாயகன் ஜி.வி.பிரகாஷின் தோற்றத்திலேயே மாற்றம் காட்டி இரசிக்க வைத்திருக்கிறார்.ஜாலியான இளைஞராகச் சுற்றித்திரிந்து அனைவரையும் ஈர்ப்பது அவருக்குக் கைவந்தகலை.இந்தப்படத்திலும் அதைச் சரியாகச் செய்திருக்கிறார்.அதோடு அப்பா பாசத்தில் தவிக்கும் மகனாக அவருடைய நடிப்பு சிறப்பு.அவர் கண்ணீர்விடும்போது நம் கண்களிலும் கண்ணீர் வரவைத்திருக்கிறார்.
நாயகியாக ஸ்ரீ கெளரி பிரியா நடித்திருக்கிறார்.கமர்ஷியல் படங்களில் ஒரு கதாநாயகிக்கு என்னென்ன வேலையெல்லாம் இருக்குமோ அவை இந்தப்படத்தில் ஸ்ரீகெளரிபிரியாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.அந்த வேலையைச் சரியாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.
ஜி.வி.பிரகாஷின் தந்தையாக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன் இந்தப்படத்தில் இன்னொரு நாயகன் போல் இருக்கிறார்.மிக முக்கியமான இந்த வேடத்துக்கு மிகப்பொருத்தமான நடிகராக இவர் கிடைத்திருக்கிறார்.அவரும் ஏற்றுக் கொண்ட வேடத்துக்கு ஏற்ப நடித்திருக்கிறார்.அப்பாஸுக்கு அவர் பாடம் புகட்டும் காட்சியில் கைதட்டல் பெறுகிறார்.
நாயகியின் தந்தையாக நடித்திருக்கிறார் அப்பாஸ்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் அவர், அவருடைய முந்தைய பிம்பத்துக்கேற்ற வேடத்தை ஏற்று இய்ல்பாக நடித்திருக்கிறார்.
நாயகனின் அம்மாவாக கீதா கைலாசம் நடித்திருக்கிறார்.இந்த வேடம் அவருக்குப் பழக்கமானதுதான் என்றாலும் வழக்கத்துக்கு மாறான கதாபாத்திர வடிவமைப்பை சரியாக உள்வாங்கி நிறைவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

மதுரை முத்து,அதிர்ச்சி மதன் ஆகியோருக்கு இரசிகர்களைச் சிரிக்க வைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
கதாநாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் தேவி மகேஷ், ஜி.வி.பிரகாஷின் கல்லூரிக் காதலி பிரார்த்தனா நாதன் ஆகியோரும் அளவாக நடித்து வளம் சேர்த்திருக்கிறார்கள்.
மதன் கிரிஸ்டோபரின் ஒளிப்பதிவில் படம் வண்ணமயமாக அமைந்திருக்கிறது.ஜி.வி.பிரகாஷின் தோற்றமாற்றம் மற்றும் ஒயிலான நடை உடை பாவனைகளை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.கதாநாயகியும் அவரால் பலன் பெற்றிருக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் கேட்டு இரசிக்கவைக்கின்றன.பின்னணி இசை,காதல்,ஜாலி,சோகம் என திரைக்கதையில் இருக்கும் உணர்வுகளை இசையிலும் மொழிபெயர்த்திருக்கிறது.
முன்பாதியில் சில தொய்வுகள் இருந்தாலும் போகப்போக வேகம் பிடித்து நிமிரவைக்கும் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் செல்வா.ஆர்.கே.
அப்பா மகன் பாசத்தைச் சொல்லும் நிறையப்படங்கள் வந்திருக்கின்றன.அவற்றிலிருந்து மாறுபட்ட அப்பா மகன் உறவைச் சொல்லி அதன்மூலம் இன்றைய இளைஞர்களுக்கு விரல்நீட்டாமல் கதைப்போக்கிலேயே அறிவுரை சொல்லி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன்.

