திரை விமர்சனம்

‘நீ ஃபாரெவர்’ விமர்சனம்!

சென்னையில் வசிக்கும் அஜய் (சுதர்சன் N​காவிந்த்) ஒரு ஸ்டார்ட்அப் மென்பொருள் உருவாக்குநர் (App Developer). அவர் “நீ ஃபாரெவர் ” (Nee Forever) என்ற பெயரில் ஒரு புதிய உரையாடல் செயலியை (Chatting App) உருவாக்கி வருகிறார். இந்த செயலியின் வெற்றிக்காக, நிஜ வாழ்க்கையில் காதலர்கள் எப்படிப் பழகுகிறார்கள், அவர்களின் உரையாடல்கள் எப்படி இருக்கும் என்பதை ஆராய (App Research) ஒரு பெண்ணைக் காதலிக்கத் திட்டமிடுகிறார். இவ்வாறு திட்டுமிட்டு உருவாக்கினால் அதை ஏற்றுக்கொள்வதாக ஒரு மென்பொருள் நிறுவனர் பிரபாகர் (எம்.ஜே.ஸ்ரீPராம்) உறுதி அளிக்கிறார்.அதே சமயம், மதி (அர்ச்சனா ரவி) சினிமாவில் ஒரு பெரிய இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஒரு உதவி இயக்குநர். தனது முதல் படத்திற்கான திரைக்கதையை (Screenplay) எழுதிக்கொண்டிருக்கும் அவருக்கு, ஒரு யதார்த்தமான காதல் கதையை உருவாக்க நேரடி அனுபவம் தேவைப்படுகிறது. இதற்காக ஒரு இளைஞனை காதலிப்பது போல நடித்து, அவனது உணர்ச்சிகளைத் தனது கதைக்கு மூலப்பொருளாகப் பயன்படுத்த நினைக்கிறார்.

இவ்வாறு தன்னை கவரும் காதல் கதையை கொண்டு வந்தால் அதை தயாரிப்பதாக (மகாலட்சுமி) ரெத்திகா ஸ்ரீனிவாஸ் உறுதி அளிக்கிறார். அஜய்யும், மதியும் டிராபிள் செயலி (Trouble App) மூலம் இப்படித் தத்தமது சுயலாபத்திற்காக, உண்மையான நோக்கங்களை மறைத்துக்கொண்டு அஜய்யும் மதியும் ஒரு போலி காதலில் இணைகிறார்கள். ஆரம்பத்தில் ஜாலியாகவும், Gen-ணு காலத்து நவீன வசனங்களுடனும் இவர்களது “ஆராய்ச்சி காதல்” நகர்கிறது. இந்நிலையில் அஜய் உண்மையான காதலில் விழ நன்றாக பழகும் மதி திடீரென்று சொல்லாமல் சென்று விடுகிறார். கதை இரண்டாம் பாதியில் எதிர்பாராத விதமாக அதீத சென்டிமென்ட் பாதைக்குத் திரும்புகிறது. அஜய்யின் குடும்பப் பின்னணி மெல்ல அவிழ்கிறது. அஜய்யின் அம்மா ரேவதி (வித்யா), பாரம்பரியத்தை மீறிக் காதல் திருமணம் செய்தவர். ஆனால் ஒரு கட்டத்தில் கணவனைப் பிரிந்து, கையில் குழந்தையுடன் தனது தந்தை ஆறுமுகத்தின் (ஒய்.ஜி. மகேந்திரன்) வீட்டிற்கே வந்துவிடுகிறார். ஒரு கண்டிப்பான ஆனால் பாசமிக்க தாத்தாவின் அரவணைப்பில், பல கட்டுப்பாடுகளுக்கு இடையே அஜய் வளர்ந்து படித்து வேலைதேடி சென்னை சென்றதாக இருக்க இந்நிலையில் அஜய்யிக்கு திருமணம் செய்து வைக்க தாத்தா முடிவு செய்து சென்னையிலிருந்து வரவழைக்கிறார். காதல்முறிவிலிருந்து மீளாத அஜய் தன் சொந்த ஊருக்கு வர அங்கே காதலி மதி இருக்க இதனை விரும்பாத அஜய்யின் தாத்தா மனமுடைந்து தற்கொலைக்கு முயலும் அளவிற்குச் சில சம்பவங்கள் நடக்கின்றன. இதனைத் தொடர்ந்து அஜய்யின் அம்மா, தாத்தா, மற்றும் மதியின் கடந்த கால கசப்பான நினைவுகள் எனப் பல பிளாஷ்பேக் காட்சிகள் அணிவகுக்கின்றன. இந்த உணர்ச்சிகரமான சூழலில், அஜய்யும் மதியும் ஒருவரை ஒருவர் ஏமாற்றி காதலித்தது தெரிய வரும்போது பெரிய விரிசல் விழுகிறது. லட்சியத்திற்காகத் தொடங்கிய இந்த போலி நாடகம், குடும்பப் பாசம் மற்றும் உண்மையான காதலுக்கு இடையே சிக்கித் தவிக்கிறது. இறுதியில், இருவரும் தங்கள் தவறுகளை உணர்ந்து, லட்சியத்திலும் காதலிலும் எப்படி இணைந்தார்கள்? பிரிந்த அஜய்யின் பெற்றோர் இணைந்தார்களா? பல வருடங்களாக மனக்கசப்பில் பிரிந்த இன்னொரு பணக்கார தம்பதி இவர்களால் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் நெகிழ்ச்சியான முடிவு.

சுதர்சன் கோவிந்த், அஜய் என்ற கதாபாத்திரத்தில் ஒரு மென்மையான மற்றும் உணர்ச்சிகரமான இளைஞனாகத் தனது பங்களிப்பை நேர்மையாக வழங்கியுள்ளார். குறிப்பாக, குடும்பப் பாசம் மற்றும் காதல் வலியை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது நடிப்பு எதார்த்தமாக உள்ளது.

நாயகி அர்ச்சனா ரவி, மதியாக ஒரு நவீன காலத்துத் துணிச்சலான பெண்ணாகத் தனது கதாபாத்திரத்திற்குப் பொருந்துகிறார். ஆரம்பக் காட்சிகளில் ஜாலியாகவும், பின்னர் உணர்ச்சிகரமான காட்சிகளிலும் ஒரு அறிமுக நடிகைக்குரிய தடுமாற்றமின்றிச் சிறப்பாகச் செய்துள்ளார்.  இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகள் திரைக்கதைக்கு உதவிகரமாக உள்ளது.

 

கண்டிப்பு மிகுந்த தாத்தாவாக வரும் ஒய்.ஜி. மகேந்திரன், அனுபவம் வாய்ந்த நடிப்பால் படத்தின் இரண்டாம் பாதியைத் தாங்கிப் பிடிக்கிறார். அவரது தற்கொலை முயற்சி மற்றும் பிளாஷ்பேக் காட்சிகள் படத்தில் ஒரு கனமான உணர்வை ஏற்படுத்துகின்றன.

நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், மற்றும் ரெத்திகா ஸ்ரீPனிவாஸ் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட சிறிய கதாபாத்திரங்களிலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அஜய்யின் அம்மாவாக வித்யா தனது பாசமான நடிப்பால் கவர்கிறார். நண்பர்களாக வரும் பிராது மற்றும் நோபல் ஜேம்ஸ் நகைச்சுவைக்கு முயன்றாலும், அவை பல இடங்களில் எடுபடாமல் சராசரி அளவிலேயே உள்ளன.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி, இரண்டு வித காலகட்டத்தின் காதல் கதைக்குத் தேவையான வண்ணமயமான காட்சிகளைத் தனது கேமராவால் அழகாகப் படம்பிடித்துள்ளார். படத்தின் தரம் ஒளிப்பதிவால் மெருகேறியுள்ளது.

இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமநாத், இளமைத் துள்ளலான பாடல்களையும், உணர்ச்சிகரமான பின்னணி இசையையும் கொடுத்துள்ளார். பின்னணி இசை சில இடங்களில் கதைக்கு வலு சேர்க்கிறது.

படத்தொகுப்பாளர் எஸ்.ஏ.நாகார்ஜுன், இரண்டாம் பாதியில் வரும் நீளமான பிளாஷ்பேக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்;.

கலை இயக்குனர் வர்ணாலயா ஜெகதீசன்; பணிகள் கதைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன.

இயக்குனர் அசோக்குமார் கலைவாணி, நவீன தொடக்க காலத்து ‘ஆப்’ கலாச்சாரத்தையும், பாரம்பரியமான குடும்ப உறவுகளையும் இணைக்க ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ளார். முதல் பாதியை ஜாலியாகவும், இரண்டாம் பாதியை அதீத சென்டிமென்ட் காட்சிகளுடனும் வடிவமைத்துள்ளார். இருப்பினும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி பிளாஷ்பேக் வைத்து பல கிளைக்கதைகளை கொடுத்துள்ளார் இயக்குனர் அசோக்குமார் கலைவாணி. ஆராய்ச்சி காதலில் தொடங்கி உண்மையான பாசப் போராட்டத்தில் முடியும் ஒரு நவீன காலத்து மிதமிஞ்சிய சென்டிமென்ட் கலந்த எமோஷனல் டிராமா. இருப்பினும், திருமணத்திற்கு பிறகு ஈகோ, சண்டை என்று பிரிந்த தம்பதியினர் கடந்த கசப்பான சம்பவங்களை மறந்து நிகழ்காலத்தில் அவர்கள் தவறை உணரும் போது சேர்த்து வைக்க முயலும் ஒரு வண்ணமயமான உணர்ச்சிகரமான பயணத்தை இளைஞர்களுக்குப் பிடித்தமான பாணியில் வழங்க முயற்சித்த இயக்குனரின் உழைப்பு தெரிகிறது.

மொத்தத்தில் ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரித்திருக்கும் நீ ஃபாரெவர் (Nee Forever) லட்சியமா? காதலா? என்ற கேள்விக்கிடையே நடக்கும் இரு துருவங்களின் போராட்டம்.

thanks : kalaipoonga.net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE