திரை விமர்சனம்

‘மனிதன் தெய்வமாகலாம்’ திரை விமர்சனம்!

சேலம் மாவட்டத்தின் பொன்வயல் மலைகிராமம். அடிப்படை வசதிகள் இல்லாத இந்த கிராமத்திற்கு சாலை வசதி கேட்டு அலையாய் அலைகிறார் ஒரு முதியவர். இந்த கிராமத்தில் நுங்கு வியாபாரம் செய்யும் செல்வராகவன் அன்பின் அடையாளமாக திகழ்பவர். அதற்காகவே இவரை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார் அழகு தேவதையான குஷி ரவி. திருமணமும் நடக்கிறது. இல்லறமும் மகிழ்ச்சியாக தொடர்கிறது.

வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு போக ஆசைப்படும் செல்வராகவன் – குஷி ரவி தம்பதி, ஹோட்டல் ஒன்றை தொடங்குகின்றனர். செல்வராகவன் மீது பாசமாக இருக்கும் பக்கத்துவீட்டு சிறுமி ஒருநாள் செல்வராகவனின் ஹோட்டலுக்கு வந்து திரும்பும்போது வழியில் பாம்பு கடித்து இறக்கிறாள். அது செல்வராகவனை வேதனைக்கு உள்ளாக்குகிறது. இதுவும் கடந்துபோகும் என்ற சூழ்நிலையில் செல்வராகவனின் மனைவி குஷி ரவி தற்கொலை செய்துகொள்ள உடைந்துபோகிறார் செல்வராகவன்.

ஒருகட்டத்தில் சிறுமியின் இறப்பும் குஷி ரவியின் தற்கொலையும் தற்செயலானது அல்ல அவை இரண்டும் கொலைகள் என்று தெரிந்ததும் கொதித்துப்போகிறார் செல்வராகவன். அந்த கொலைகளை செய்தது யார்? ஏன்? செல்வராகவன் எடுத்த முடிவு என்ன? என்ற கேள்விகளுக்கு அதற்கு பின்பு வரும் கட்சிகள் விடை சொல்கின்றன.

ஒரு மனிதன் செய்யும் நல்ல செயலும் நல் எண்ணமுமே உண்மையான அழகு என்பதற்கு உதாரணமான கதாபாத்திரத்தில் செல்வராகவன், நாயகி குஷி ரவியின் இதயத்தில் மட்டுமல்ல படம் பார்ப்பவர்களின் மனதிலும் நிறைகிறார். படத்தில் பெரும்பங்கு சாதுவாக வருபவர், மனைவி இறப்பின் பின்னணி தெரிந்ததும் ஆவேசமாகி எடுக்கும் நடவடிக்கைகள் சீட்டு நுனிக்கு தள்ளுகிறது.

செல்வராகவனின் மனைவியாக வரும் குஷி ரவி அழகு, நடிப்பு இரண்டிலும் ஈர்க்கிறார். கணவனின் அக்கா கெளசல்யாவுக்கு நடக்கும் கொடுமையை தட்டி கேட்கும் இடத்தில் துணிச்சலின் உச்சமென்றால், தூக்குப்போட்டு சாகும் இடத்தில் சோகத்தின் உச்சம்.

அரசியல்வாஅதி ஒய்.ஜி.மகேந்திரனின் தங்கை கணவராக வரும் மைம் கோபி உச்சபட்ச வில்லத்தனத்தில் “பாவி இவன் நல்லா இருப்பானா” என பார்வையாளர்களின் சாபத்திற்கு உள்ளாவதே அவரது கதாபாத்திரத்திற்கும் நடிப்பு திறமைக்கும் கிடைத்த வெற்றி!

முன்னாள் கதாநாயகி நடிகை கெளசல்யா செல்வராகவனின் அக்காவாக நடித்திருக்கிறார் . குறைந்த காட்சிகளில் வந்தாலும் சில காட்சிகளில் கவனம் பெறுகிறார்.அவரது கணவராக நடித்திருக்கும் ஆர்.எஸ்.சதீஷ்,குறை சொல்லாத நடிப்பை வழங்கியுள்ளார்.

சிறுமி லிர்த்திகா, சேலம் தீபக் மற்றும் பல புதுமுகங்கள் அந்த ஊர் மனிதர்களாகவே இடம் பெற்றுள்ளார்கள்.அந்த வகையில் அவர்களது நடிப்பு இயல்பாக இருக்கிறது.

சாலை வசதி இல்லாத அந்த மக்களின் உணர்வுகளையும் ஊரின் நிலைமையையும் எடுத்துச் செல்லும்படி அமைந்துள்ளது ரவி வர்மாவின் ஒளிப்பதிவிலான காட்சிகள்..

இசையமைப்பாளர் ஏ.கே.பிரியனின் இசையில் பாடல்கள் பதியும் ரகம்.பின்னணியிலும் பிழையில்லை.
கிராமத்துப் பின்னணி கொண்ட இந்தப் படத்தில் காட்சிகளை சில இடங்களில் அலுக்க வைத்தாலும் பல இடங்களில் தொய்வின்றித் தொகுத்துள்ளார் படத் தொகுப்பாளர் தீபக்.எஸ்.

எழுதி இயக்கியிருக்கும் டென்னிஸ் மஞ்சுநாத், அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் சொல்ல முயன்றுள்ளார்.அத்துடன் கந்து வட்டி பிரச்சனை,அதை எதிர்கொள்ளும் பெண்களின் அவலங்களையும் காட்சிகள் ஆக்கியுள்ளார்.

ஆனால் வன்முறையில் கோரத்தாண்டவம் ஆடுவதை குறைத்திருக்கலாம். மற்றபடி ‘மனிதன் தெய்வமாகலாம்’ பார்க்கலாம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE