‘MR. X’ திரை விமர்சனம்!
சக்திவாய்ந்த ஒரு நியூக்ளியர் டிவைஸ். நந்தா தேவி மலை உச்சியில் இதனை மறைத்து வைப்பதற்காக எடுத்துச்செல்லும்போது பனிச்சரிவு ஏற்பட்டு காணாமல் போகிறது. இதனை பல வருடங்களுக்கு பின் கண்டுபிடிக்கிறார் ரா உளவாளியான சரத்குமார். இவர்தான் மிஸ்டர் எக்ஸ். ஆனால் நியூக்ளியர் டிவைஸின் ரகசியம் ரஷ்யாவுக்கு தெரிந்து அதனை கைப்பற்றுவதோடு சரத்குமாரையும் கட்டுப்பாட்டில் எடுக்கிறது. இந்த டிவைஸையும் மிஸ்டர் எக்ஸையும் மீட்டு வரும் அசைன்மெண்ட்டை மற்றொரு உளவாளியான ஆர்யாவிடம் ஒப்படைக்கிறார் ராவின் தலைமை அதிகாரி மஞ்சுவாரியர். ஆர்யா அதை செய்து முடிக்கிறாரா இல்லையா என்பதே கதை.

தமிழில் இதற்கு முன் எத்தனையோ உளவாளி கதைகள் வந்துவிட்டது. ஒருத்தரும் உருப்படியாக இதுவரை செய்ததில்லை. மிஸ்டர் எக்ஸும் அந்த சாதனையிலேயே சவாரி செய்துள்ளது. சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுவரும் ‘துரந்தர்’ படத்தில் ஒரு சதவீதம்கூட தொட்டுப்பார்க்கமுடியவில்லை மிஸ்டர் எக்ஸால்.
ஹல்க்கின் ஒன்னுவிட்ட தம்பி போல தோற்றத்தில் மிரட்டுகிறார் ரா உளவாளியாக வரும் ஆர்யா. ஆனால் நடிப்பில் அடித்த அடியை எடுத்துவைக்க முடியாமல் திணறியுள்ளது அந்தோ பரிதாபம். காதலியின் வீட்டில் வில்லனிடம் மாட்டிக்கொள்ளும் தங்கையை மீட்பதற்காக ஆர்யா ஓட்டமாய் ஓடி வருவதுபோல ஒரு சீன். ஓலா, ஊபர் போட்டு வருவதற்கெல்லாம் நேரம் இருக்காது என்பது உண்மைதான் ஆனால் பக்கா சிட்டியில் ஒரு ஆட்டோகூடவா கிடைக்காது என்று கேள்வி படம் பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது.
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் கதாபாத்திரத்தில் முதல்முறையாக வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார் கெளதம் ராம் கார்த்தி. நடிப்பில் அடக்கி வாசிப்பதாக நினைத்துக்கொண்டு நடித்திருப்பதே எதார்த்தத்தை மீறிய ஓவர் லோடாகியுள்ளது.
ரா அமைப்பின் தலைமை அதிகாரியாக மஞ்சு வாரியர் மட்டும் வழக்கம்போல் அசத்துகிறார். மீட்டருக்கு பொருந்துகிறார் என்று சொல்வதை போல இடத்திற்கு தகுந்தவாறு நடிப்பில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
மிஸ்டர் எக்ஸாக அவ்வப்போது வருக்கிறார். அவ்வப்போது ஆப்செண்ட் ஆகும் சரத்குமார் கேரக்டரிலும் சுரத்தை இல்லை. அதிலும் எதிரிகள் கண்களுக்கு புலப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கெட்டப் மாற்றம் செய்வதெல்லாம் ஹா.. ஹா.. ஹா…
இவர்களைத் தாண்டி அனகா, ரைசா வில்சன், அதுல்யா ஆகியோர் கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்திருக்கிறார்கள். மூவரின் கதாபாத்திரங்களிலும் இன்னுமே ஆழம் சேர்த்திருக்கலாம்.
கடல், பாலைவனம், ரகசிய கூடங்கள் என ரா உளவாளிகளுடன் ஏழு கடல் ஏழு மலை ஏறியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட். ஆக்ஷன் காட்சிகளுக்கு இவர் கையாண்டிருக்கும் யுக்தியும், அதனை மெருகேற்றிக் காட்டியிருக்கிறது.
படத்தின் வேகத்தைச் சீரான நிலையிலேயே வைத்திருக்கும் படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே, குழப்பமூட்டும் கதை சொல்லலைக் கவனித்திருக்கலாம்.
ஆக்ஷன் காட்சிகளில் இடம்பெறும் கிராபிக்ஸின் தரத்தையும் கூர் நோக்கியிருக்கலாம். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், ‘ஹையோடி’ பாடலில் மென்மையான வைப் தந்திருக்கிறார்.
பாதுகாக்கப்படும் அணு சாதனம், அதனை அடைய நினைக்கும் மிஸ்டர் எக்ஸ் டீம், இவர்களின் ஆட்டத்திற்கு முடிவு கட்டும் கௌதம் & டீம் என்பதாக இந்த ஸ்பை ஆக்ஷன் படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் மனு ஆனந்த். ஆனால் படம் தொடங்கி முப்பது நிமிடங்களுக்குப் பிறகு பொறுமையை சோதிக்கும் திரைக்கதையால் சோர்வடையவைப்பது படத்தின் மைனஸ்.
’மிஸ்டர் எக்ஸ்’ ஏமாற்றம்!

