திரை விமர்சனம்

‘ஹாய்’ – திரை விமர்சனம்!

காதலித்துத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை ஒருபக்கம்… திருமணமே வேண்டாம், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் மறுபக்கம். இந்த இரண்டு பிடிவாதங்களும் ஒரே இடத்தில் சந்தித்தால் என்ன ஆகும்? அதுதான் ‘ஹாய்’!

பெற்றோரைப் போலவே காதல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார் கவின். காதல் கை கூடாததால் வீட்டில் பெண் பார்க்கத் தொடங்குகிறார்கள். “காதலித்துத்தான் கல்யாணம்” என்பதில் கறாராக இருக்கும் கவின், குடும்பத்தினரை கடிதம் மூலம் மிரட்டிவிட்டு வீட்டை விட்டு ஓடுகிறார்.

மறுபுறம், அம்மாவின் முகத்தையே பார்க்காமல், அப்பாவின் அன்பையும் அரவணைப்பையும் முழுமையாகப் பெறாமல் வளர்ந்த நயன்தாராவுக்கும் திருமணம் என்றாலே அலர்ஜி. வாழ்க்கையில் சாதிக்க வேண்டும்; கல்யாணம் என்ற பெயரில் கூண்டுக்குள் சிக்கிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். ஆனால், அவருக்கும் திருமண ஏற்பாடு நடக்க… அவரும் வீட்டை விட்டு எஸ்கேப்!

இப்படி இரண்டு ‘திருமண எதிர்ப்பாளர்களும்’ சென்னையில் சந்திக்கிறார்கள். நட்பு மலர்கிறது. அந்த நட்பு கவினுக்கு காதலாக மாறுகிறது. தான் தேடிய காதலி இவர்தான் என்று முடிவு செய்துவிடுகிறார். ஆனால், காதல், திருமணம் மீது நயன்தாராவுக்கு நம்பிக்கையே இல்லை என்பது தெரிந்ததும், காதலைச் சொல்லாமல் மனதுக்குள் பூட்டி வைக்கிறார்.

அதன்பிறகு, இருவரும் சில மாதங்கள் கணவன்–மனைவியாக நடிக்க வேண்டிய சூழல். காதலே வேண்டாம் என்று சொல்லும் பெண்ணிடம், காதலைச் சொல்லாமலேயே காதலை விதைக்க கவின் போடும் திட்டங்கள்தான் படத்தின் சுவாரஸ்யமான பகுதி.

பெரிய திருப்பங்கள் இல்லை. அடுத்து என்ன நடக்கும் என்பதும் ஓரளவுக்கு யூகிக்க முடியும். ஆனால், என்ன நடக்கும்?” என்பதைக் காட்டிலும் “எப்படி நடக்கிறது?” என்பதில்தான் ‘ஹாய்’ ஜெயிக்கிறது.

கோவை மண்ணின் கொங்கு தமிழோடு வரும் கவின், காதல் மீது இருக்கும் ஏக்கத்தையும், கிடைக்காத காதலின் ஏமாற்றத்தையும் இயல்பாக வெளிப்படுத்துகிறார். நயன்தாராவுடனான வயது வித்தியாசத்தை தனது முதிர்ச்சியான நடிப்பால் பெரும்பாலான காட்சிகளில் சமாளித்திருக்கிறார். குறிப்பாக, காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் தருணங்களில் கவினின் நடிப்பு கண்ணுக்கும் மனதுக்கும் நெருக்கமாக இருக்கிறது. காமெடி காட்சிகளிலும் ஓவர் ஆகாமல் அளவாக விளையாடுகிறார்.

நயன்தாரா, வழக்கமான நயன்தாரா ஸ்டைலிலேயே வருகிறார். கொங்கு பகுதி பெண்ணாக கதாபாத்திரம் அமைந்திருந்தாலும், அவரது வசன உச்சரிப்பும் உடல்மொழியும் தனக்கே உரிய பாணியில் இருக்கிறது. கிராமத்து பின்னணியில் இருந்து வந்த பெண் என்ற அடையாளத்தைவிட, நவீன தோற்றமே அதிகமாகத் தெரிகிறது. திரையில் வழக்கம்போல் பளிச்சென்று இருக்கிறார். நடிப்பிலும் முதிர்ச்சி தெரிகிறது. ஆனால், சில காட்சிகளில் அந்த முதிர்ச்சி கதாபாத்திரத்துடன் ஒட்டாமல் இருப்பது சின்ன நெருடல்.

கவினின் அம்மாவாக ராதிகா, அப்பாவாக கே.பாக்யராஜ், நயன்தாராவின் அப்பாவாக பிரபு என அனுபவம் வாய்ந்த நடிகர்கள் படத்துக்கு நல்ல பலம். சிறப்புத் தோற்றத்தில் வரும் சுஹாசினி மணிரத்னமும் தன் பங்குக்கு கவனம் ஈர்க்கிறார்.

காமெடி டிராக்கில் சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி கூட்டணி காட்சிகளை கலகலப்பாக்குகிறது. குறிப்பாக சத்யனின் மைண்ட் வாய்ஸ், பெரிய காமெடி வசனங்கள் இல்லாமலேயே சிரிப்பை வரவழைக்கிறது. விடிவி கணேஷ், ஃபெப்சி விஜயன், காவியா அறிவுமணி, மிர்ச்சி கெமி, அம்ருதா சீனிவாசன் ஆகியோர் குறைவான நேரமே வந்தாலும் கதையோட்டத்துக்கு துணை நிற்கிறார்கள்.

ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவு படத்துக்கு வண்ணம் சேர்க்கிறது. காட்சிகள் கலர்ஃபுல்லாக இருக்கின்றன; நயன்தாராவை இன்னும் பளிச்சென்று காட்டுவதிலும் கேமரா தன் வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறது.

ஜென் மார்ட்டினின் இசையில் பாடல்கள் கொண்டாட்ட மனநிலையை உருவாக்குகின்றன. பின்னணி இசை காதல் காட்சிகளுக்கு தேவையான மென்மையைச் சேர்க்கிறது.

பிலோமின் ராஜின் படத்தொகுப்பு படத்தின் இலகுவான தன்மையை காப்பாற்றுகிறது. நீண்ட இழுவைகள் இல்லாமல் கதை நகர்வது படத்துக்கு ப்ளஸ்.

எழுதி இயக்கியிருக்கும் விஷ்ணு எடவனின் பெரிய பலமே எளிய கதையை சிக்கலாக்காமல் சொல்வது. காதல் படங்களில் வழக்கமாக வரும் பெரிய பிரச்னைகள், அதிரடி திருப்பங்கள், எதிர்பாராத அதிர்ச்சிகள் என எதையும் அதிகம் நம்பாமல், கதாபாத்திரங்களின் இயல்பான நடவடிக்கைகளிலேயே சுவாரஸ்யத்தை உருவாக்கியிருக்கிறார்.

படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதன் பயணம் எந்த திசையில் செல்லும் என்பது தெரிந்துவிடுகிறது. ஆனாலும், வழியில் வரும் கேரக்டர்களும், காமெடியும், காதல் தருணங்களும் பயணத்தை சலிப்பில்லாமல் வைத்திருக்கின்றன.

ஒரு பக்கம் நயன்தாராவின் வயது முதிர்ச்சி சில காட்சிகளில் கவினுடன் இருக்கும் கெமிஸ்ட்ரியை கொஞ்சம் தள்ளி நிறுத்துகிறது. ஆனால், மறுபக்கம் கவினின் இயல்பான நடிப்பு அந்த இடைவெளியை பெருமளவு நிரப்பிவிடுகிறது.

காதல் கதைக்கு பெரிய ‘ட்விஸ்ட்’ வேண்டாம்… காதலிக்க வைக்கும் சின்னச் சின்ன தருணங்களே போதும்!

அந்த வகையில், பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், காதலை கொஞ்சம் காமெடியுடனும், கொஞ்சம் ஏக்கத்துடனும், நிறைய இதத்துடனும் சொல்லி முடிக்கிறது இந்த ‘ஹாய்’.

ஹாய்’ – கதை புதுசில்லை… ஆனால், சொல்லிய விதத்தில் ஒரு சின்ன ஹாய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE