3.15 மணி நேரம் மூச்சு திணற திணற.. ‘டாக்ஸிக்’ விமர்சனம்!
யாஷ் என்ற பெயரைப் போட்டாலே திரையரங்கில் விசில் பறக்கும் என்பது உண்மை. ‘கே.ஜி.எஃப்’ மூலம் அந்த விசில் சத்தத்தை உச்சத்துக்குக் கொண்டு சென்றவர், இப்போது ‘டாக்ஸிக்’ மூலம் அதே சத்தத்தை மீண்டும் கேட்க நினைத்திருக்கிறார். ஆனால், படம் முடிந்து வெளியே வரும்போது ரசிகனுக்குள் எழுவது விசில் அல்ல… “இவ்வளவு நேரம் எதுக்குப்பா?” என்ற கேள்விதான்!
1947-ஆம் ஆண்டு கோவா. சட்டவிரோத வர்த்தகம், அதிகாரம், குடும்பம், காதல், பிரிவு, தந்தை-மகன் மோதல் என ஏகப்பட்ட விஷயங்களை ஒரு பெரிய கதைக்குள் அடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் கீது மோகன்தாஸ். ஆனால், கதை பெரியதாக இல்லை; அதைச் சுற்றி கட்டப்பட்ட அலங்காரம்தான் பெரியது!
ராயா என்ற கதாபாத்திரத்தில் யாஷ். வழக்கம்போல நடந்து வந்தாலே பின்னணி இசை அதிர்கிறது. பார்த்தாலே “ஹீரோ வந்துட்டாரு” என்று சொல்ல வைக்கும் தோற்றம். பேசினால் கம்பீரம். முறைப்பைப் பார்த்தால் ‘கே.ஜி.எஃப்’ நினைவுக்கு வருகிறது. பிரச்சனை என்னவென்றால், யாஷிடம் புதிதாக ஏதாவது காட்ட வேண்டும் என்ற ஆசை படத்துக்குள் இருந்தாலும், திரைக்கதையிடம் அதற்கான பதில் இல்லை.

இன்னொரு பக்கம் டிக்கெட் என்ற கதாபாத்திரத்திலும் யாஷ்தான். தோற்றத்திலும் நடிப்பிலும் வித்தியாசம் காட்ட முயற்சி செய்திருக்கிறார். அதை மறுப்பதற்கில்லை. யாஷின் நடிப்பில் இருக்கும் உழைப்பு தெரிகிறது. ஆனால், நடிகர் கொடுக்கும் உழைப்பை திரைக்கதை வாங்கிப் பயன்படுத்தாமல், அவரைச் சுற்றி பிரம்மாண்டமாக கேமராவை மட்டும் சுற்றவிட்டிருக்கிறது!
கியாரா அத்வானிக்கு கிடைத்திருக்கும் நாடியா கதாபாத்திரம் படத்தின் உணர்ச்சிப் பகுதிகளில் கொஞ்சம் உயிரைக் கொண்டு வருகிறது. குறிப்பாக யாஷுடனான காட்சிகளில் அவரது கண்களும் நடிப்பும் பேசுகின்றன. ஆனால், இந்தக் காதல் கதைக்கும் இன்னும் கொஞ்சம் ஆழம் கொடுத்திருந்தால், பின்னர் வரும் பிரிவும் தந்தை-மகன் உறவும் மனதில் பதிந்திருக்கும்.
நயன்தாராவுக்கு நல்ல கதாபாத்திரம். கங்காவாக அவரது இருப்பில் ஒரு அழுத்தம் இருக்கிறது. ஆனால், நயன்தாரா போன்ற ஒரு நடிகையை வைத்து இவ்வளவுதான் செய்ய முடியுமா? என்று கேட்க வைக்கிறது திரைக்கதை. ஹுமா குரேஷியும் தன்னால் முடிந்ததைச் செய்கிறார். ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா, சுதீவ் நாயர் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டியல் இருந்தும், பலருக்கும் கதைக்குள் வந்து போவதற்கே வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது.
‘டாக்ஸிக்’ படத்தின் மிகப்பெரிய வில்லன் யார் தெரியுமா?
நேரம்..
ஒரு காட்சியை நீட்டித்தால் அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்க வேண்டும். கதையை நகர்த்த வேண்டும். கதாபாத்திரத்தை வளர்க்க வேண்டும். உணர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும். ஆனால் இங்கே பல காட்சிகள் வெறுமனே இருக்கின்றன. ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமையாக உட்காரும் ரசிகன், இடைவேளைக்கு முன்பே கடிகாரத்தைப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்.
முதல் பாதியில் வன்முறை, நெருக்கமான காட்சிகள், நீளமான வசனங்கள் என்று நேரம் செல்கிறது. கதை மட்டும் “நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வர்றேன்” என்று வெளியே போய்விட்டது போல!
இரண்டாம் பாதியிலும் நிலைமை பெரிதாக மாறவில்லை. ஒரு காட்சி முடிந்ததும் இன்னொரு காட்சி. அதுவும் முடிந்ததும் இன்னொரு காட்சி. ஆனால், இத்தனை காட்சிகளுக்கு நடுவிலும் கதை நகரும் வேகம் மட்டும் பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருக்கிறது.
‘டாக்ஸிக்’ பார்ப்பதற்கு நிச்சயம் பிரம்மாண்டமாக இருக்கிறது. பெரிய அரங்குகள், ஆடம்பரமான வீடுகள், சண்டைக் காட்சிகள், தயாரிப்பு வடிவமைப்பு என செலவு செய்த பணம் திரையில் தெரிகிறது. ஆனால், பெரிய செட் போட்டால் பெரிய கதை ஆகிவிடாது.
சில காட்சிகள் பார்க்க அழகாக இருக்கின்றன. சில காட்சிகள் “வாவ்” என்று சொல்ல வைக்கின்றன. ஆனால் அந்த “வாவ்” அடுத்த சில நிமிடங்களில் மறைந்துவிடுகிறது. ஏனென்றால், காட்சியின் அழகுக்குப் பின்னால் கதையின் அழுத்தம் இல்லை.
சில இடங்களில் வேறு சில பிரபலமான படங்களின் சாயல்கள் கண்களில் தட்டுப்படுவதும் உண்டு. புதுமையான யோசனைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை வலுவாக வளர்க்காமல், அடுத்த பிரம்மாண்டக் காட்சிக்குத் தாவிவிடுகிறது திரைக்கதை.

படத்தின் இன்னொரு பெரிய பிரச்சனை வசனங்கள்.
ஒரு கதாபாத்திரம் ஏதாவது செய்கிறது. உடனே இன்னொரு கதாபாத்திரம் அதன் அர்த்தத்தை விளக்குகிறது. ரசிகன் புரிந்துகொள்வதற்குள், திரைக்கதையே வந்து “நான் சொல்லித் தர்றேன்… நீங்க கவலைப்படாதீங்க” என்கிற மாதிரி இருக்கிறது.
கதாபாத்திரங்களை அவர்களுடைய செயல்களால் பேசவிட்டிருந்தால் இன்னும் தாக்கமாக இருந்திருக்கும். அதற்குப் பதிலாக, பல இடங்களில் வசனங்கள் தேவைக்கு அதிகமாக விளக்குகின்றன.
படம் முழுக்க வன்முறை இருக்கிறது. ஆனால் வன்முறை அதிகமாக இருப்பது மட்டும் ஒரு காட்சியை வலிமையானதாக மாற்றாது.
முக்கியமாக ராயா – டிக்கெட் இடையிலான தந்தை-மகன் மோதல். இதுதான் படத்தின் உணர்ச்சி மையமாக மாறியிருக்க வேண்டியது. ஒரே நடிகர் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பதால், அந்த உறவு மிகப்பெரிய பலமாக மாறியிருக்க வேண்டியது.
ஆனால், சண்டை இருக்கிறது… கோபம் இருக்கிறது… முறைப்பு இருக்கிறது… உணர்ச்சி மட்டும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை! அதனால்தான் படத்தின் மிகப்பெரிய திருப்பங்கள்கூட மனதில் பெரிய அதிர்வை ஏற்படுத்தாமல் கடந்து செல்கின்றன.
ரவி பஸ்ரூர் உள்ளிட்ட இசைக்குழுவின் பின்னணி இசை பல இடங்களில் அளவுக்கு அதிகமாகவே ஒலிக்கிறது. சில காட்சிகளில் கதாபாத்திரங்கள் பேசுகிறார்களா, இசை பேசுகிறதா என்ற சந்தேகம் வரும். ஹெவி மெட்டல் இசையை தலைக்கு பக்கத்தில் ஸ்பீக்கர் வைத்து கேட்பது போல ஒரு அனுபவம்!
பாடல்களும் மனதில் நீண்ட நேரம் தங்கும் அளவுக்கு கவரவில்லை.
ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு படத்தின் பிரம்மாண்டத்தைக் காப்பாற்றுகிறது. தயாரிப்பு வடிவமைப்பும் காட்சியமைப்பும் பாராட்டுக்குரியவை. ஆனால், அந்த அழகையெல்லாம் ரசித்துக் கொண்டிருக்கும்போதே, “இந்தக் காட்சியை இன்னும் கொஞ்சம் சுருக்கி இருக்கலாமே!” என்ற எண்ணம் வந்து தொந்தரவு செய்கிறது.
உஜ்வல் குல்கர்னியின் படத்தொகுப்பு இன்னும் கத்தரிக்கோலை நம்பியிருக்க வேண்டும். குறிப்பாக நீளமான காட்சிகளில், எடிட்டரின் கத்தரி வேலை செய்திருந்தால் இந்தப் படம் குறைந்தது அரை மணி நேரமாவது ரசிகர்களுக்கு பரிசாகக் கிடைத்திருக்கும்!
‘டாக்ஸிக்’ ஒரு பெரிய படமாகத் தெரிய வேண்டும் என்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், ஒரு பெரிய படம் என்பது பெரிய செட், பெரிய சண்டை, பெரிய இசை, பெரிய நட்சத்திரங்கள் என்பதல்ல; பெரிய கதையும் வேண்டும்!
திரையில் யாஷ் கம்பீரம் குறையவில்லை. ஆனால், ‘கே.ஜி.எஃப்’ கொடுத்த அதே மாஸ் போதாது என்பதை இந்தப் படம் நிரூபிக்கிறது. அதற்குப் பின்னால் வலுவான கதையும், இறுக்கமான திரைக்கதையும் இருந்தால்தான் அந்த மாஸ் நீண்ட நேரம் வேலை செய்யும்.
இங்கே கதை சின்னது. அதைச் சுற்றி காட்சிகள் பெருசு.
உணர்ச்சி சின்னது. அதைச் சுற்றி சத்தம் பெருசு.
கதாபாத்திரங்கள் நிறைய. அவர்களுக்கான இடம் குறைவு.
திருப்பங்கள் இருக்கின்றன. தாக்கம் குறைவு.
‘டாக்ஸிக்’ — பிரம்மாண்டமான தோற்றத்துக்குள் சிக்கிக்கொண்ட ஒரு மெலிந்த கதை.

