திரை விமர்சனம்

சிரிக்க வைக்க வந்தவர்கள்… சிக்க வைத்துவிட்டார்கள்! ‘4 இடியட்ஸ்’ விமர்சனம்!

பணம் இருக்கும் இடத்தைத் தேடி நான்கு திருடர்கள் போவது, அங்கே ஒரு காவலாளியிடம் சிக்குவது, அதன்பிறகு அவர்களுக்குள் நடக்கும் ரகசிய ஒப்பந்தம், அந்த பங்களாவுக்குள் ஒளிந்திருக்கும் அதிர்ச்சியான உண்மைகள் என காமெடிக்கு நல்ல தீனி போடும் கதைக்களம்தான் ‘4 இடியட்ஸ்’. ஆனால்..

அதற்கு முன் கதையை கேட்கலாமா?..

டாக்டர் வின்சென்ட் அசோகனுக்குச் சொந்தமான கடற்கரை பங்களாவில் பல கோடி ரூபாய் பணம் இருப்பதாகத் தகவல் கிடைக்கிறது. அதை கொள்ளையடிக்கச் செல்லும் புகழ், கும்கி அஷ்வின், திடியன், இந்திரன் ஆகிய நால்வரும், பங்களாவின் காவலாளி ரவி மரியாவிடம் வசமாகச் சிக்குகிறார்கள். ஆனால், அவர்களை போலீஸிடம் ஒப்படைக்காமல் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்வைக்கிறார் ரவி மரியா. நால்வரும் அதற்கு சம்மதிக்கிறார்கள்.

அதன்பிறகு டாக்டர் வின்சென்ட் அசோகன், காவலாளி ரவி மரியா ஆகியோரின் மர்மப் பின்னணி குறித்த உண்மை இவர்களுக்குத் தெரியவருகிறது. தெரிந்தது தெரியாதது போல தப்பிக்க நினைக்கும் நான்கு பேரின் முயற்சிதான் மீதிக் கதை.

கதை கேட்கும்போதே ‘இது சரியான காமெடி கலாட்டாவாக இருக்குமே!’ என்ற எதிர்பார்ப்பு வருகிறது. ஆனால், அந்த எதிர்பார்ப்புக்குத்தான் படத்தின் காமெடி தொடர்ந்து ‘பூ!’ காட்டுகிறது.

கதையின் நாயகன் என்ற அந்தஸ்துடன் வரும் புகழிடம், அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் காமெடி எங்குமே பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. சின்னத்திரையில் ஒரு காமெடி விழுந்தால் பின்னணியில் நான்கு பேர் சேர்ந்து சிரிப்பார்கள். அதனால், நாமும் சிரித்துவிட்டோமா என்று சந்தேகப்படுவோம். ஆனால், சினிமாவில் அந்த ‘சிரிப்பு டிராக்’ வசதி கிடையாது. காட்சியே நம்மைச் சிரிக்க வைக்க வேண்டும்.

அதற்கு டைமிங் வேண்டும். வசனத்தில் நக்கல் வேண்டும். உடல்மொழியில் நகைச்சுவை வேண்டும். முக்கியமாக, காட்சிக்குள் இருக்கும் சூழ்நிலையே காமெடியாக மாற வேண்டும். ஆனால், இவை எதுவும் போதிய அளவில் கைகூடாததால், புகழின் காமெடி பல இடங்களில் ‘சிரிக்கணுமா… இல்லையா?’ என்ற குழப்பத்திலேயே நின்றுவிடுகிறது.

அவருடன் கூட்டணி அமைத்திருக்கும் கும்கி அஷ்வின், திடியன், இந்திரன் ஆகியோரின் நிலை இன்னும் பரிதாபம். நால்வரும் சேர்ந்து காமெடி செய்யும் காட்சிகளில் சிரிப்பைவிட சத்தம்தான் அதிகம். இவர்களுடன் சேர்ந்து ரவி மரியாவும் தன் பங்குக்கு ஓவர் ஆக்டிங் செய்து, ‘காமெடி’ என்ற பெயரில் பார்வையாளர்களைச் சோதிக்கிறார்.

வின்சென்ட் அசோகன் மட்டும் கொடுக்கப்பட்ட வேலையை அளவோடு செய்து முடித்திருக்கிறார்.

பிரக்யா நயனை வித்தியாசமான முறையில் பயன்படுத்தியிருப்பது படத்தின் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று. அவரது கதாபாத்திரத்தைச் சுற்றி உருவாக்கப்பட்ட சில காட்சிகள் எதிர்பாராத திருப்பத்தைக் கொடுக்கின்றன. அதோடு, கவர்ச்சி பாடல் ஒன்றையும் வைத்து கமர்ஷியல் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார்கள்.

யு.கே. செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு பளபளப்பான கமர்ஷியல் தோற்றத்தைக் கொடுத்திருக்கிறது. குறிப்பாக கடற்கரை பங்களா, அதன் சுற்றுப்புறக் காட்சிகள் என லொக்கேஷனை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். சுபாஷ் முனிரத்னத்தின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கமர்ஷியல் படத்துக்கான தேவையை நிறைவு செய்கின்றன.

ஒரே லொக்கேஷனை மையமாக வைத்து முழுக் கதையையும் நகர்த்தியிருக்கும் இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசனின் முயற்சி பாராட்டுக்குரியது. குறிப்பாக பிரக்யா நயனின் கதாபாத்திரத்தைப் பல்வேறு கோணங்களில் பயன்படுத்தியிருக்கும் விதம் கவனம் ஈர்க்கிறது.

ஆனால், காமெடி செய்ய வேண்டும் என்ற அவசரத்தில் கதாபாத்திரங்கள் செய்யும் ஓவர் ஆக்டிங், கதையின் இயல்பான ஓட்டத்தையே பல இடங்களில் தடுத்து நிறுத்துகிறது. ஒரு காட்சியில் சிரிக்க வைக்க வேண்டியவர்கள், அடுத்த காட்சியில் எரிச்சலை வரவழைக்கிறார்கள்.

கமர்ஷியல் சினிமாவுக்குத் தேவையான கலகலப்பு இருக்கிறது. வித்தியாசமான கதைக்களமும் இருக்கிறது. நல்ல லொக்கேஷனும் இருக்கிறது. நடிகர்களும் இருக்கிறார்கள். ஆனால், இவை அனைத்தையும் ஒரே தாளத்தில் இணைத்து, சரியான காமெடி டைமிங்குடன் திரைக்கதையில் பயணிக்க வைத்திருந்தால்…

‘4 இடியட்ஸ்’ நிச்சயம் ‘சிரிப்பு சரவெடி’யாக வெடித்திருக்கும். இப்போது, திரையில் வெடிப்பதற்குப் பதிலாக… பார்வையாளர்களின் பொறுமையைத்தான் கொஞ்சம் கொஞ்சமாக வெடிக்க வைக்கிறது!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE