கொலையாளி யார்? திக் திக் ஏற்றும் ‘தி டார்க் ஹெவன்’ : திரை விமர்சனம்!
‘ஏழு வருடத்துக்கு ஒருமுறை… ஏழாவது மாதத்தில்… ஆண்கள் மர்மமாக இறக்கிறார்கள்!’ – இப்படியொரு ஊருக்குள் இன்ஸ்பெக்டர் சித்து நுழைந்தால், போலீஸ் விசாரணை எங்கே போகும்? அதைவிட, அந்த விசாரணை நம்மை எங்கே கொண்டு போகும்? இந்தக் கேள்விகளோடு தொடங்குகிறது ‘தி டார்க் ஹெவன்’.
தமிழகம்–கேரள எல்லையில் இருக்கும் மலைக் கிராமம். ஏழு வருடங்களுக்கு ஒருமுறை, ஆண்டின் ஏழாவது மாதத்தில் அங்கு ஆண்கள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் வனதேவதையின் சாபம் என்று நம்பும் கிராம மக்கள், பூஜை, பரிகாரம் என்று தங்கள் பங்குக்கு சாமியாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஊரின் காவல் நிலையத்துக்கு புதிய இன்ஸ்பெக்டராக வருகிறார் சித்து. மனைவி தர்ஷிகா, கைக்குழந்தை என குடும்பத்துடன் வரும் அவர், ‘வனதேவதை சாபம்’ கதையையெல்லாம் நம்பத் தயாராக இல்லை. ஆனால், அந்த ஊரின் மர்மம் அவரை நம்ப வைக்கத் தொடங்குகிறது!
ஓர் இளம் பெண் காணாமல் போகிறார். விசாரணையில், ஒரு இளைஞரைத் தேடிச் சென்றது தெரியவருகிறது. அந்த இளைஞனும் மாயம். அடுத்து அந்தப் பெண்ணின் தோழியும் காணாமல் போகிறார். மூவரும் ஒரே இடத்தில் கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாகக் கிடைக்கிறார்கள்.
“யார் கொன்றது?” என்ற கேள்வியோடு விசாரணையைத் தொடங்கும் சித்துவுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரது மனைவியும், இன்னொரு ஆணும் கொலை செய்யப்படுகிறார்கள். கேரள சிறையில் இருந்து தப்பிய சைக்கோ கொலையாளிதான் இந்தக் கொலைகளுக்குக் காரணம் என்று போலீஸ் வழக்கை முடித்துவிடுகிறது. ஆனால் சித்து மட்டும் அதை ஏற்கவில்லை.
அதற்குப் பிறகுதான் படம் உண்மையான வேகத்தைப் பிடிக்கிறது. கொலைகளுக்குப் பின்னால் இருப்பது யார்? ஏன் இந்தக் கொலைகள்? ‘வனதேவதை சாபம்’ உண்மையா? இல்லை மனிதர்களின் சதியா? – ஒவ்வொரு கேள்விக்கும் பின்னாலும் இன்னொரு கேள்வியை வைத்திருக்கிறது திரைக்கதை.

இதற்கு நடுவில் ‘நடக்கப்போவதை முன்கூட்டியே சொல்லும் புத்தகம்’ ஒன்று வேறு வந்து நிற்கிறது. மர்ம புத்தகம், மர்ம கிராமம், சைக்கோ கொலையாளி, தொடர் கொலைகள் என பல முடிச்சுகளை ஒரே கயிற்றில் கட்டியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி.
இந்த மூன்று அடுக்குகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைதான். ஆனால், அவற்றை அவசரப்பட்டு அவிழ்க்காமல், ஒவ்வொன்றாகத் திறந்து காட்டியிருப்பதுதான் படத்தின் சுவாரஸ்யம். குறிப்பாக, “இதுதான் கொலையாளி!” என்று பார்வையாளர் ஒரு முடிவுக்கு வரும்போது, அந்த முடிவையே கதையின் அடுத்த திருப்பம் வந்து தட்டிவிடுகிறது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் சித்து, இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நன்றாகப் பொருந்தியிருக்கிறார். அதிகம் பேசாமல், முகத்தில் இருக்கும் அமைதிக்குள் சந்தேகம், கோபம், வலி எனப் பல உணர்வுகளை கடத்த வேண்டிய கதாபாத்திரம். அதைச் சரியாகச் செய்திருக்கிறார்.
தர்ஷிகா, ரித்விகா, பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கல் ரவி, ஜெயக்குமார், அருள் டி.சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு உள்ளிட்ட அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். குறிப்பாக, “இவர் சும்மா வந்து போகும் கேரக்டர்” என்று நினைக்கும் சில கதாபாத்திரங்கள்கூட பின்னால் முக்கியத்துவம் பெறும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பி.கே-வுக்கு மலைப்பகுதி நல்ல களம். ஒரே லொக்கேஷனில் பெரும்பாலான காட்சிகள் நடந்தாலும், ஒரே இடத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வு வராமல் கேமராவை நகர்த்தியிருக்கிறார். இருள், மலை, பனி, தனிமை – எல்லாமே சேர்ந்து ஒரு பதற்றமான மனநிலையை உருவாக்குகின்றன.
இசையமைப்பாளர் சக்தி பாலாஜியின் பின்னணி இசை, அந்தப் பதற்றத்துக்கு இன்னொரு அடுக்கு. குறிப்பாக வயலின் பயன்படுத்தியிருக்கும் இடங்களில் “அடுத்து என்ன நடக்கப் போகிறது?” என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.
படத்தொகுப்பாளர் ராஜா ஆறுமுகத்தின் பணி முக்கியமானது. மூன்று கதைகளையும் தனித்தனியாகப் பிரித்துவிடாமல், அவற்றை ஒன்றுக்கொன்று இணைத்தபடி நகர்த்தியிருக்கிறார். அதனால் கதை எங்கே போகிறது என்ற ஆர்வம் இறுதிவரை குறையவில்லை.
தொடர் கொலைகள் பற்றிய போலீஸ் விசாரணை என்ற பழக்கமான க்ரைம் த்ரில்லர் களத்துக்குள், மர்ம புத்தகம், சாபம், மலைக்கிராமம் எனப் புதுப் பொருட்களை சேர்த்திருக்கிறார் பாலாஜி. முக்கியமாக, இவை அனைத்தையும் வெறும் அலங்காரமாக வைத்துவிடாமல், கதையின் முடிச்சுகளோடு இணைத்திருப்பது கவனிக்கத்தக்கது.
கொலையாளி யார்?
இந்தக் கேள்விக்கான விடையை பார்வையாளர் பலமுறை யூகிக்கலாம். ஆனால், ஒவ்வொரு யூகத்தையும் திரைக்கதை அடுத்தடுத்த திருப்பங்களால் திசைமாற்றுகிறது. இறுதிக் காட்சியை நெருங்கும்போதும் சஸ்பென்ஸைத் தக்கவைத்திருப்பது படத்தின் பெரிய பலம்.
இருட்டுக்குள் போனாலும், தடயத்தைத் தேடும் இந்த இன்ஸ்பெக்டரின் பயணம்… பார்வையாளர்களையும் சீட்டின் நுனிக்கு அழைத்துச் செல்கிறது!

