திரை விமர்சனம்

நான்கு மாநில நண்பர்கள்… ஒரு கடத்தல்… தப்பிக்க வைக்கும் ‘கோல்ட் கால்’ : விமர்சனம்!

ஒரு நிறுவனத்தில் விற்பனையாளர் பணியில் சேர்கிறார்கள் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய். வேலை ஒன்று… பின்னணி நான்கு! இப்படித்தான் ஆரம்பமாகிறது இவர்களின் நட்பு.

விற்பனையாளர் பணி என்றாலே இலக்கை எட்ட வேண்டும், வாடிக்கையாளர்களை சமாளிக்க வேண்டும், மேலதிகாரியின் அழுத்தத்தைத் தாங்க வேண்டும். இந்த நான்கு நண்பர்களும் அந்தக் கஷ்டங்களை எல்லாம் ஜாலியாக எதிர்கொள்கிறார்கள். ஆனால், நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவர்களால் செயல்பட முடியாததால் மேலதிகாரியின் கோபத்துக்கும் ஆளாகிறார்கள்.

இந்த நிலையில், தொழிலதிபர் ஒருவரின் மகன் கடத்தப்படுகிறான். அதிர்ச்சி என்னவென்றால், அந்தக் கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் இந்த நான்கு பேர்தான் என்று காவல்துறை அறிவிக்கிறது!

காவல்துறை தேடுகிறது… நால்வரும் ஓடுகிறார்கள்… ஆனால், ஓடிப் போய் ஒளிந்துகொள்வதற்குப் பதிலாக தங்களுக்குத் தெரிந்த விற்பனைத் தந்திரங்களையும், பயிற்சியையும் பயன்படுத்தி தங்கள் மீதான பழியை எப்படி போக்குவது, கடத்தப்பட்ட சிறுவனை எப்படி மீட்பது என்று திட்டமிடுகிறார்கள். அந்தத் திட்டம் என்ன ஆனது என்பதுதான் ‘கோல்ட் கால்’ படத்தின் காமெடி கலந்த பரபரப்பான பயணம்.

‘Cold Call’ என்பது விற்பனைத் துறையில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். விற்பனையாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை நகர்வதால், தலைப்பும் கதையோடு கச்சிதமாகப் பொருந்துகிறது.

தமிழுக்கு புதிய முகங்களான சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய் ஆகிய நால்வரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். தமிழகம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், கேரளா என நான்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களாகவே கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதால், அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே தேர்வு செய்திருப்பது இயல்புத் தன்மையை கூட்டுகிறது. நால்வரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நன்றாக உள்வாங்கி நடித்திருக்கிறார்கள்.

அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேலி லிட்டி, கீர்த்தனா புல்கி ஆகிய நான்கு நாயகிகளுக்கும் பெரிய அளவில் ஸ்கோர் செய்யும் வாய்ப்பு இல்லையென்றாலும், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

நிறுவன மேலாளர், விற்பனையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்களிலும் பொருத்தமான நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சரவணனின் ஒளிப்பதிவு கதை செல்லும் பாதையிலேயே பயணிக்கிறது. பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாமல், கதைக்குத் தேவையான காட்சிகளை எளிமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

பிரணவ் கிரிதரனின் இசையில் பாடல்கள் கமர்ஷியல் ரகத்தில் அமைந்துள்ளன. கேட்கும்படியான பாடல்களுடன், காட்சிகளுக்கு துணை நிற்கும் பின்னணி இசையும் ஓகே.

சுரேஷ் ஆறுமுகத்தின் படத்தொகுப்பில் பெரிய குறைகள் இல்லை. கதை எந்த இடத்திலும் தேவையில்லாமல் தேங்கி நிற்காமல் நகர்வதற்கு எடிட்டிங் துணை புரிந்திருக்கிறது.

‘விற்பனையாளர் பணி இப்படித்தான் இருக்கும்’ என்று பாடம் நடத்தாமல், அந்தப் பணியில் இருப்பவர்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சின்னச் சின்ன சம்பவங்கள், மறக்க முடியாத தருணங்கள், நண்பர்களுக்கிடையிலான ஜாலியான அனுபவங்கள் எனக் கதையை ரசிக்கும்படி நகர்த்தியிருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் தம்பிதுரை.

கதை பெரிய அளவிலான பட்ஜெட்டைக் கேட்கும் வகையில் இல்லாவிட்டாலும், இருக்கும் வசதிகளுக்குள் ஒரு முழுமையான கமர்ஷியல் படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கம் திரையில் தெரிகிறது. விற்பனையாளர்களின் உலகம், நட்பு, கடத்தல், தப்பித்தல் என வெவ்வேறு அம்சங்களை ஒன்றாக இணைத்து, சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE