அரசியல்

அச்சத்தில் விவசாயிகள்… அமைதியில் விஜய்!

டெல்டா விவசாயிகளுக்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத்தர த.வெ.க அரசு தவறிவிட்டது. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக முதல்வர் விஜய் ஏன் குரல் கொடுக்கவில்லை? என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற அ.தி.மு.க நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், “குறுவை சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை உரிய நேரத்தில் வழங்காததால் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டதால் சம்பா சாகுபடியும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெற த.வெ.க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதிலும் அரசு தோல்வியடைந்துள்ளது.

மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் கூறி வரும் நிலையில், தமிழக முதல்வர் விஜய் இதுகுறித்து மௌனம் காப்பது ஏன்? விவசாயிகளின் அச்சத்தைப் போக்க முதல்வர் தெளிவான பதிலளிக்க வேண்டும்.

காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்கத் தவறியதால் டெல்டா விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனக் குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE