‘சிக்னல்’ திரை விமர்சனம்!
இளம் தொழிலதிபரான சந்தோஷ் பிரதாப், இரவு நேரத்தில் காரில் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். சரியாக 11.30 மணிக்கு ஒரு சிக்னலில் காத்திருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்ணைச் சில இளைஞர்கள் துரத்திச் செல்கிறார்கள். இதைப் பார்த்த அவர், அந்தப் பெண்ணுக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்து அவர்களைப் பின்தொடர்கிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணின் வாகனம் மட்டும் தனியாக நிற்பதைப் பார்க்கிறார். ஆனால், பெண்ணைக் காணவில்லை. நடந்த சம்பவத்தை காவல் நிலையத்திலும் தெரிவிக்கிறார்.

இதற்கிடையே, வேலைக்குச் சென்ற மகள் பவ்யா ட்ரிகா இரவு முழுவதும் வீடு திரும்பாததால், அவரது தந்தை ஜெயப்பிரகாஷ் பதற்றமடைகிறார். பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். காணாமல் போன பெண்ணைத் தேடும் காவல்துறையின் விசாரணை ஒருபுறம் இருக்க, அந்தப் பெண் சந்தோஷ் பிரதாப்பின் வீட்டிலேயே அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்ற அதிர்ச்சிகரமான தகவல் கதையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது.
யார் இந்தச் சந்தோஷ் பிரதாப்? எதற்காக அந்தப் பெண்ணைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்? நள்ளிரவில் நடந்த சம்பவத்தின் பின்னணி என்ன? இப்படிப் பல கேள்விகளுக்கு மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்துப் பதில் சொல்கிறது ‘சிக்னல் அட் 11.30’.
மர்மம், உளவியல், குற்றம் என மூன்று அம்சங்களையும் கலந்து கட்டியிருக்கும் கதையில் சந்தோஷ் பிரதாப்பின் நடிப்பு படத்துக்கு மிகப்பெரிய பலம். நள்ளிரவுப் பயணத்தில் எதிர்பாராமல் சிக்கிக்கொள்ளும் பிரச்னைகளால் ஏற்படும் பதற்றம், பயம், குழப்பம் எனப் பல்வேறு உணர்வுகளை முகபாவனைகளிலேயே கடத்துகிறார். அதேபோல், அவரது கதாபாத்திரத்தின் உண்மையான பின்னணி தெரியவரும் இடங்களிலும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
பவ்யா ட்ரிகாவுக்கு வழக்கமான கதாநாயகி வேடம் இல்லை. கதையின் போக்கையே தீர்மானிக்கும் அழுத்தமான கதாபாத்திரம். அந்தப் பொறுப்பை உணர்ந்து, சூழ்நிலைக்கேற்ப உணர்வுகளை மிகையில்லாமல் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
மற்றொரு நாயகியான பூஜிதா பொன்னடா, காதல், டூயட் எனக் கமர்ஷியல் அம்சங்களுக்குத் துணை நிற்பதோடு, திரைக்கதையின் முக்கியமான திருப்பத்துக்கும் காரணமாக இருக்கிறார்.
நாயகியின் தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷ், காவல் அதிகாரியாக வரும் முனிஷ்காந்த் உள்ளிட்டோரின் பங்களிப்பும் கதைக்கு வலு சேர்க்கிறது. குறிப்பாக, காணாமல் போன மகளைத் தேடும் தந்தையின் தவிப்பை வெளிப்படுத்தும் காட்சிகள் உணர்வுப்பூர்வமாக அமைந்துள்ளன.
ராஜா பட்டாச்சார்ஜியின் ஒளிப்பதிவில் இரவு நேரச் சாலைகளின் அமைதி, கொடைக்கானலின் இயற்கை அழகு, கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் காட்சிகள் என அனைத்தும் நேர்த்தியாகப் பதிவாகியுள்ளன.
டி.இமானின் இசையில் தந்தை – மகள் பாசத்தைப் பேசும் ‘ஜோ ஜோ மா…’ பாடலும், காதலின் வலியைச் சொல்லும் ‘போக போக போகாதே…’ பாடலும் மனதை வருடுகின்றன. பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசையும் திரில்லர் காட்சிகளுக்குத் தேவையான பதற்றத்தையும், உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்குத் தேவையான மென்மையையும் சரியான அளவில் வழங்கியிருக்கிறது.

ஒரே ஒரு சம்பவத்தை மையமாக வைத்து, அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் திரைக்கதையைத் தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர். கலைவாணன். காட்சிகளின் வேகமும், தகவல்கள் வெளிப்படும் விதமும் பார்வையாளர்களைக் கதையோடு பயணிக்க வைக்கின்றன.
எழுதி இயக்கியிருக்கும் மலர்விழி நடேசன், இரவு 11.30 மணிக்கு ஒரு சிக்னலில் நடக்கும் சம்பவத்தை எடுத்துக்கொண்டு, அதைச் சுற்றி உளவியல் சார்ந்த குற்றப் பின்னணியை உருவாக்கியிருக்கும் விதம் சுவாரஸ்யம். திருப்பங்களுக்கு மேல் திருப்பங்களை அடுக்காமல், ஒவ்வொரு மர்மத்துக்கும் ஒரு காரணத்தை உருவாக்கி, கதையைத் தெளிவாகக் கொண்டு சென்றிருப்பது சிறப்பு.
திரில்லர் என்றாலே கொலை, குற்றம், துரத்தல், அதிர்ச்சி எனப் பயமுறுத்த வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்த்தும் வகையில், தந்தை – மகள் பாசம், தனிமையின் வலி, வாழ்க்கையில் துணையாக வந்த ஒருவரின் பிரிவால் ஏற்படும் வெறுமை என மென்மையான உணர்வுகளையும் கதைக்குள் அழகாக இணைத்திருக்கிறார் இயக்குநர்.
குறிப்பாக, மர்மமான சம்பவங்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மனித உணர்வுகளைப் பேசும் இடங்களில் படம் தனித்துவம் பெறுகிறது. கதை மாந்தர்களிடம் அளவான நடிப்பைப் பெற்றிருப்பதோடு, சொல்ல வந்த விஷயத்தைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கும் மலர்விழி நடேசனின் கதை சொல்லலும் காட்சியமைப்புகளும் பாராட்டுக்குரியவை.
11.30 மணிக்கு விழுந்த சிக்னல், பார்வையாளர்களின் ஆர்வத்துக்கு மட்டும் பச்சைக்கொடி காட்டுகிறது! மர்மம், திருப்பம், மனித உணர்வுகள் என மூன்றையும் கலந்து ரசிக்க வைக்கும் உளவியல் கிரைம் திரில்லர் – ‘சிக்னல் அட் 11.30’.

