‘சிட்டுக்குறிஞ்சி’ படத்துக்காக 80 ஏக்கரில் உருவான கிராமம்!
கொடைக்கானல் அருகே 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமத்தையே உருவாக்கிப் படப்பிடிப்பு நடத்தியிருப்பது படத்தின் முக்கியச் சிறப்பம்சம். பிரான்சிஸ் ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மாரா இசையமைத்துள்ளார். குறிப்பாக, ஹங்கேரியின் புகழ்பெற்ற புடாபெஸ்ட் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவும் பின்னணி இசையில் பங்களித்துள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டு படத்தின் உருவாக்க அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக ஆர்.வி. உதயகுமார் பங்கேற்றார்.
80 ஏக்கரில் புதிய கிராமம் உருவாக்கிப் பல சவால்களைக் கடந்து படத்தைத் தயாரித்திருப்பதாக தயாரிப்பாளர் டி. ஜூட் ஆனந்த் தெரிவித்தார். சிறிய திரைப்படங்களுக்கும் திரையரங்குகளில் உரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று நடிகர் ஜி.எம். குமார் வலியுறுத்தினார்.
புதுமையான திரைக்கதை, பிரம்மாண்டமான அரங்க அமைப்புகள், சர்வதேச இசைக்குழுவின் பங்களிப்பு எனப் பல சிறப்புகளுடன் உருவாகியுள்ள ‘சிட்டுக்குறிஞ்சி’ வரும் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

