திரை விமர்சனம்

‘418’ திரை விமர்சனம்!

ஒரு அறைக்குள் அப்படி என்னதான் இருக்கிறது? கதவைத் திறந்தால் என்ன நடக்கும்? என்று நமக்குள் எழும் கேள்விகளே சில நேரங்களில் பயத்தைவிடப் பெரிய திகிலை ஏற்படுத்திவிடும். அப்படியொரு மர்மக் கதவுக்குப் பின்னால் அமானுஷ்யத்தையும், அதிர்ச்சியையும், தாய்மையின் பேரில் நிகழும் கொடூரங்களையும் அடுக்கி வைத்திருக்கிறது ‘418’ திரைப்படம்!

பிரஷாந்த் நீல் வழங்கும் இப்படத்தை ரவிசங்கர் யலமஞ்சிலி, நவீன் யெர்னேனி ஆகியோர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். அக்டோபர் 23 அன்று பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இப்படம், மருத்துவக் கல்லூரி மாணவர்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியிருக்கும் அமானுஷ்யத் திரில்லர்.

கதை என்ன?

வேதகிரி மருத்துவக் கல்லூரி எனப்படும் VIMS-இன் ஆண்கள் விடுதி அது. அங்கே பெண்களுக்கு அனுமதி கிடையாது; மாணவர்களின் பெற்றோரைக்கூட உள்ளே அனுமதிப்பதில் கெடுபிடிகள்! இப்படிப்பட்ட கண்டிப்பான விடுதியின் நான்காவது மாடியில் இருக்கும் 418-ஆம் எண் அறைக்கு மட்டும் தனி ராஜாங்கம். அந்த அறைக்குள் யாரும் செல்லக்கூடாது; எந்தக் காரணத்தைக் கொண்டும் கதவைத் திறக்கக்கூடாது என்று விடுதி நிர்வாகம் எச்சரிக்கிறது. ஏன்? உள்ளே ஏதோ அமானுஷ்ய சக்தி இருக்கிறதாம்! கதவைத் திறந்தால் ஆபத்து நிச்சயமாம்!

இப்படியொரு மர்ம அறைக்கு அருகிலேயே இருக்கும் 417-ஆம் எண் அறையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கிறார்கள். அவர்களில் விவேக் என்ற மாணவனுக்கு வித்தியாசமான கனவுகள் வருகின்றன. கனவு என்றால் காலையில் எழுந்ததும் மறந்துவிடும் சாதாரணக் கனவுகள் அல்ல; நெருங்கியவர்கள் கொல்லப்படுவது, தானே ஆபத்தில் சிக்கிக்கொள்வது என்று அவனைப் பயமுறுத்தும் கனவுகள்!

கனவுக்கும் நிஜத்துக்கும் இடையிலான கோட்டை அவனால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. பயந்து அலறும் அவன், அந்த அறையில் இனியும் இருக்க முடியாது என்று வேறு இடத்திற்குச் சென்றுவிடுகிறான். ஆனால், இடத்தை மாற்றினாலும் பயம் அவனை விடுவதாக இல்லை. இறுதியில் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்படுகிறான். அங்கே மருத்துவர் கேட்கும் கேள்விகளின் வழியாக, இந்த மர்மத்துக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான முன்கதை விரிகிறது.

யட்சகானம் எனும் கூத்துக் கலையில் நடனமாடும் தேவகி என்ற பெண், அந்தக் கலையை விட்டு விலகி, எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒரு வசதியான குடும்பத்து இளைஞனைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறாள். ஆனால், குழந்தை இல்லாததால் அவள் சந்திக்கும் அவமானங்களுக்கும் ஏளனங்களுக்கும் அளவே இல்லை.

நீண்ட காலத்துக்குப் பிறகு கர்ப்பம் தரிக்கும் அவளிடம், அந்தக் கர்ப்பம் நிலைக்க வேண்டுமானால் ஆறு கொலைகளைச் செய்ய வேண்டும் என்று தேவியின் உபாசகன் ஒருவன் கூறுகிறான். தாயாக வேண்டும் என்ற ஏக்கம், அவளை எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக்குகிறது. அதன் விளைவு? ஒவ்வொரு கொலையாகத் தொடங்கும் கொடூர ஆட்டம்!

இதற்கிடையில், 418-ஆம் எண் அறைக்குள் என்னதான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் மாணவர்களையும் ஆட்டிப்படைக்கிறது. மலர் எச்சரித்தும் கேட்காமல் சாயிஷா உள்ளிட்ட சிலர் அந்த அறையைத் திறக்க முயல்கிறார்கள். அடுத்தது என்ன? ஆர்வத்துக்கு இரையாகிறார்களா, அமானுஷ்யத்தின் பிடியில் சிக்குகிறார்களா? அந்த மர்ம அறையின் பின்னணி என்ன? இதற்கான பதில்கள்தான் 148 நிமிடங்கள் 30 விநாடிகள் ஓடும் ‘418’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நடிப்பில் மிரட்டுவது யார்?

படம் தொடங்கியதுமே 417-ஆம் எண் அறையில் விவேக்காக வரும் இளைஞனின் அச்சமும் அலறலும் நம்மைக் கதைக்குள் இழுத்துச் செல்கின்றன. அவன் காணும் கனவுகள் எவ்வளவு கொடூரமானவை என்பதை அவனது நடிப்பு உணர்த்துகிறது. ஆரம்பத்தில் அவனது பயத்தைப் பார்த்து நமக்கே சற்றுப் பரிதாபம் ஏற்படுகிறது. போகப்போக, அந்தப் பயத்தின் பின்னால் இருக்கும் மர்மம் புரியத் தொடங்கும்போது நமது ஆர்வமும் அதிகரிக்கிறது.

மனநல மருத்துவரைச் சந்தித்த பிறகு கதை வேறு பாதையில் பயணிக்கிறது. அதுவரை ஒரு மாணவனின் அச்சத்தை மையமாகக் கொண்ட கதை, திடீரென்று அதிர்ச்சிகரமான முன்கதைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. அதில் வரும் யட்சகானம் அத்தியாயம், படத்திற்குள் இன்னொரு திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது.

தேவகி, தேவிகாவாக உருமாறத் தொடங்கியதும் கதையின் வேகம் அதிகரிக்கிறது. அங்கிருந்து கொலைகளும் பரபரப்பும் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்கின்றன. கிளைமாக்ஸை நெருங்கும்போது அமானுஷ்ய ஆட்டங்கள் பார்வையாளர்களைப் பதற்றத்தில் ஆழ்த்துகின்றன.

தேவகியாகவும், பின்னர் தேவிகாவாகவும் வரும் சைத்ரா ஆச்சார், இப்படத்தின் முக்கியமான பலம். யட்சகானக் கலைஞராக நடனமாடும் இடங்களிலும், குடும்பத் தலைவியாக மாறிய பிறகு தாய்மைக்காக ஏங்கும் தருணங்களிலும் கவனிக்க வைக்கிறார். குழந்தை இல்லாத ஏக்கத்தால் அவமானங்களைச் சந்திக்கும் பெண்ணாக அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் அனுதாபத்தைப் பெற்றுத் தருகின்றன.

ஆனால், அந்த ஏக்கம் கொலைவெறியாக மாறும்போது அவருடைய நடிப்பும் வேறொரு பரிமாணத்தை அடைகிறது. தாய்மையைக் காப்பாற்றப் புறப்படும் அவர், உயிர்ப்பலிகளின் வழியாக விஸ்வரூபம் எடுக்கும் காட்சிகள் அச்சமூட்டுகின்றன. குறிப்பாக, ரம்யாவைக் கொலை செய்யும் காட்சி திரையரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இப்படத்தின் கதையைத் தன் தோளில் சுமந்து நிற்கிறார் சைத்ரா ஆச்சார் என்று சொன்னால் அது மிகையாகாது.

விவேக் பாத்திரத்தில் நடித்திருக்கும் இளம் நடிகரும் தனது உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய நண்பர் ரோஹித்தாக வருபவரின் நடிப்பும் யதார்த்தமாக இருக்கிறது. பதற்றமான சூழல்களிலும் அவ்வப்போது நகைச்சுவையைத் தெளிக்கும் சற்றே பருமனான நடிகர், கதையின் இறுக்கத்துக்கு இடையே சிறிய ஆசுவாசத்தைத் தருகிறார்.

சாயிஷாவாக வரும் இளம்பெண், ஆரம்பத்தில் தைரியத்தின் அடையாளமாகத் தோன்றிப் பின்னர் அமானுஷ்யத்தின் பிடியில் சிக்கிக்கொள்ளும் பாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார். மனநல மருத்துவராக வருபவர் தனது தோற்றத்தாலும் குரலாலும் மனதில் பதிகிறார். கண்டிப்பான காவலாளியாக வரும் வாட்ச்மேனும் தனது பங்களிப்பைப் பதிவு செய்கிறார்.

இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், படத்தில் ஒலிக்கும் சலங்கையின் சத்தம்கூட ஒரு தனிப் பாத்திரம் போலவே செயல்படுகிறது. சலங்கை ஒலித்தாலே அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்கிறது!

தொழில்நுட்பத்தில் திகில்!

அமானுஷ்யத் திரில்லருக்கு இருளும் ஒளியும் மிக முக்கியம். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் இரண்டையும் சரியான விகிதத்தில் கலந்து காட்சிகளை அமைத்திருக்கிறார். கதையின் பெரும்பகுதி இருட்டுக்குள் நகர்வதால், மர்மமும் திகிலும் திரையில் இயல்பாகவே படர்கின்றன.

ஒளிப்பதிவு ஒருபுறம் நம்மை இருளுக்குள் அழைத்துச் சென்றால், ஒலியமைப்பு மறுபுறம் நம் காதுகளுக்குள் புகுந்து பயமுறுத்துகிறது. வெங்கியின் பின்னணி இசையும் அதற்குத் துணை நிற்கிறது. அமைதியாக நகரும் காட்சிகளில்கூட ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என்ற உணர்வை இசை உருவாக்குகிறது.

சில நேரங்களில் திரையில் எதுவும் நடக்காதபோதுகூட, பின்னணி இசை நம்மை இருக்கையின் நுனிக்குக் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. இதுதான் அமானுஷ்யத் திரைப்படங்களின் தொழில்நுட்ப வெற்றி!

தாய்மையா, மூடநம்பிக்கையா?

ஒரு குழந்தையைக் காப்பாற்றுவதற்காக ஆறு கொலைகளைச் செய்யத் துணியும் ஒரு பெண்ணின் கதைதான் இப்படத்தின் மையம். தாய்மைக்கான ஏக்கம் புரிந்துகொள்ளக்கூடியதுதான். குழந்தை வேண்டும் என்ற ஆசைக்காக ஒரு பெண் சந்திக்கும் அவமானங்களும் வேதனைகளும் அனுதாபத்துக்குரியவைதான்.

ஆனால், அந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக உயிர்களைப் பலியிடுவது எந்த வகையில் நியாயமாகும்? தாய்மை என்ற உயர்ந்த உணர்வின் பெயரில் அறமற்ற செயல்களை நியாயப்படுத்த முடியுமா? அதுவும் மூடநம்பிக்கையின் துணையோடு நிகழும் கொடூரங்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இருப்பினும், இதனை ஒரு கற்பனைத் திரில்லராக அணுகினால், அதன் அமானுஷ்ய உலகத்துக்குள் நம்மை அழைத்துச் செல்லும் முயற்சியை ரசிக்க முடியும். படத்தின் கற்பனை உலகையும் நிஜ வாழ்க்கையின் அறநெறிகளையும் தனித்தனியாகப் பார்த்துக்கொள்வது அவசியம்.

‘418’ திரைப்படம், மருத்துவக் கல்லூரி விடுதியில் இருக்கும் ஒரு மர்ம அறையை மையமாகக் கொண்டு தொடங்கி, தாய்மையின் ஏக்கத்தையும் மூடநம்பிக்கையையும் அமானுஷ்யத்தையும் இணைத்துப் பரபரப்பாக நகர்கிறது. சைத்ரா ஆச்சாரின் நடிப்பு, இருளும் ஒளியும் கலந்த ஒளிப்பதிவு, மிரட்டும் ஒலியமைப்பு, பின்னணி இசை ஆகியவை படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.

கதையின் முன்பகுதி மர்மத்தை உருவாக்குவதிலும், முன்கதை விரியும் பகுதி அதிர்ச்சியை ஏற்படுத்துவதிலும் கவனம் பெறுகிறது. அமானுஷ்யக் காட்சிகளும் திகில் தருணங்களும் படத்தின் முக்கிய ஈர்ப்புகளாக இருக்கின்றன. அதே நேரத்தில், சில கருத்துகளைப் பகுத்தறிவுடன் அணுக வேண்டிய அவசியமும் இருக்கிறது.

மொத்தத்தில், பேய், மர்ம அறை, சலங்கைச் சத்தம், கொலைகள், அமானுஷ்யச் சாகசங்கள் எனத் திகில் விருந்தை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு ‘418’ ஒரு சுவாரசியமான தேர்வாக அமையும்.

அமானுஷ்யப் படங்களை ரசிப்பவர்களுக்கு ‘418’ பிடிக்கும்; ஆனால் இருட்டில் சலங்கைச் சத்தம் கேட்டால் மட்டும், அது படத்திலிருந்தா அல்லது பக்கத்து வீட்டிலிருந்தா என்று ஒருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்!

— தஞ்சை அமலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE