‘டிரோன்ஸ்’ திரை விமர்சனம்!
அழகி… சூனியக்காரி… அறிவியல்… நிற அரசியல்! நகைச்சுவையோடு சிந்திக்கவும் வைக்கும் வித்தியாசமான ஃபேன்டஸி!
கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர், ஆர்.ஜே. தீபக் மூவரும், பெற்றோருக்குத் தெரியாமல் வெளியே தங்க முடிவெடுக்கிறார்கள். அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் இடம், சாதாரண ஹாஸ்டலோ நண்பனின் வீடோ அல்ல; ‘பிளாக் ஹோல்’ எனப்படும் அறிவியல் ஆராய்ச்சிக் கூடம்!
உள்ளே போனால் வெளியே வர முடியாத விசித்திரமான இடம் அது. அங்கே மாட்டிக்கொள்ளும் மூவரும், ட்ரோன் மூலம் வெளி உலகத்தை எட்டிப் பார்க்கிறார்கள். அப்போதுதான் அழகுப் பதுமையாக சித்தி இத்னானி கண்ணில் படுகிறார். பார்த்ததும் காதல்! காதல் வந்த வேகத்தில் கதையும் சூடுபிடிக்கிறது.
ஆனால், அந்த அழகியின் பின்னால் நிற்பவர் சாதாரணப் பாட்டி அல்ல… சூனியக்காரி தேவதர்ஷினி! பேத்தியைத் தங்கள் காதல் வலையில் வீழ்த்த நினைக்கும் இளைஞர்களைச் சிறைபிடிக்கிறார். அழகியைப் பார்த்ததும் காதல் வரும்; பாட்டியைப் பார்த்ததும் உயிர் பயம் வரும். இதுதான் இங்கே காதல் கணக்கு!
இதற்கிடையில் காணாமல் போன கல்லூரி மாணவர்களைத் தேடி சிலர் அந்த வீட்டுக்குள் நுழைகிறார்கள். அவர்களில் காவல்துறை அதிகாரியான சினிமாவாலா சதீஷும் ஒருவர். திருமண வயதைக் கடந்தும் தனிமையில் வாடும் அவருக்கும் சித்தி இத்னானி மீது காதல் பற்றிக்கொள்கிறது. இப்படி அந்த அழகியின் பின்னால் ஆண்கள் அணிவகுக்க, கதைக்குள் மர்மங்களும் திருப்பங்களும் வரிசை கட்டுகின்றன.

ஆனால், அந்த அழகுக்குப் பின்னால் ஒரு சோகமான கடந்தகாலம் இருக்கிறது. அதன் மர்மம் என்ன? காதலித்தவர்கள் உண்மையைத் தெரிந்துகொண்ட பிறகு என்ன செய்கிறார்கள்? சூனியக்காரியின் பிடியில் சிக்கியவர்களின் கதி என்ன? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வதுதான் ‘டிரோன்ஸ்’.
அழகி – சூனியக்காரி என்ற சிறுவயதுக் கதை நம் எல்லோருக்கும் பரிச்சயமானதுதான். அந்தப் பழைய கதைக்கு அறிவியல் ஆராய்ச்சி, பறக்கும் தட்டு, ட்ரோன் என நவீன அலங்காரங்களைச் சேர்த்திருக்கிறார் இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத்.
கற்பனையை மட்டும் நம்பாமல், அதன் வழியாக நிற அரசியலையும் பேச முயன்றிருப்பது படத்தின் சிறப்பு. அழகுக்கு அளவுகோல் என்ன, ஒருவரை அவருடைய நிறத்தை வைத்து மதிப்பிடுவது எவ்வளவு அபத்தம் என்பதையும் நகைச்சுவைக்குள் பொதிந்து சொல்லியிருக்கிறார். சிரிப்புக்காக ஆரம்பிக்கும் கதை, ஒரு கட்டத்தில் சிந்திக்கவும் வைக்கிறது.
சித்தி இத்னானி… திரையில் வந்தாலே கவனம் ஈர்க்கும் அழகு. காதல் பார்வையால் இளைஞர்களை மட்டுமல்ல, திரையரங்கில் இருப்பவர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கிறார். அதே நேரத்தில், கதாபாத்திரத்தின் மர்மத்தையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி நடிப்பிலும் தன் இருப்பைப் பதிவு செய்கிறார்.
அஞ்சலி நாயருக்கு இது அழுத்தமான கதாபாத்திரம். நிறத்தைக் கொண்டு ஒருவரின் அழகையும் மதிப்பையும் தீர்மானிப்பவர்களுக்குத் தனது நடிப்பின் மூலம் பதிலடி கொடுக்கிறார். கதாபாத்திரத்தின் வலியையும் ஆழத்தையும் உணர்ந்து நடித்திருப்பது பாராட்டுக்குரியது. அழகு என்பது நிறத்தில் இல்லை; ஆளுமையில்தான் இருக்கிறது என்பதை இவரது பாத்திரம் உணர்த்துகிறது.
நாயகன் டிராவிட் செல்வம், நகைச்சுவைக் களத்தில் தன்னால் முடிந்தவரை கலகலப்பூட்டுகிறார். காதல் மயக்கம், குழப்பம், பயம் எனக் கதாபாத்திரத்துக்குத் தேவையான அம்சங்களை வெளிப்படுத்தி படத்துக்கு வலுசேர்க்கிறார்.
சூனியக்காரி தேவதர்ஷினி வரும்போதெல்லாம் காட்சிகளுக்கு ஒரு தனி கம்பீரம் கிடைக்கிறது. வித்தியாசமான தோற்றமும் அனுபவம் மிக்க நடிப்பும் சேர்ந்து, அந்தப் பாத்திரத்தை நினைவில் நிறுத்துகின்றன. பேத்தியைக் காக்கும் பாட்டியா, ஆபத்தை விளைவிக்கும் சூனியக்காரியா என்ற இரட்டைத் தன்மையைக் கதாபாத்திரத்துக்குள் கொண்டுவந்திருப்பது சுவாரஸ்யம்.
காவல்துறை அதிகாரியாக வரும் சினிமாவாலா சதீஷ், அளவான நடிப்பில் சிரிக்க வைக்கிறார். குரேஷி வரும் காட்சிகளும் கலகலப்புக்குக் குறைவைக்கவில்லை. ஆர்.ஜே. தீபக், சசி செல்வராஜ் ஆகியோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செவ்வனே செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன், பெரும்பாலான காட்சிகள் ஒரே இடத்தில் நிகழ்ந்தாலும், கதை கேட்கும் சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்தியிருக்கிறார். குறைந்த இடங்களுக்குள் மர்மமும் கற்பனையும் கலந்த உலகத்தை உருவாக்குவது எளிதல்ல; அந்த முயற்சியில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
ஹரி எஸ்.ஆர். இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை காட்சிகளின் பரபரப்புக்கும் நகைச்சுவைக்கும் தேவையான துணையை வழங்குகிறது. படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா, கலை இயக்குநர் ஆர். கிஷோர், ஆடை வடிவமைப்பாளர் ஹர்ஷிகா ரமேஷ் ஆகியோரின் பணிகளும் படத்தின் கற்பனை உலகத்துக்கு வண்ணம் சேர்க்கின்றன.
பழக்கமான அழகி – சூனியக்காரி கதையை அறிவியல் ஃபேன்டஸியுடன் இணைத்திருப்பது பிளஸ். தேவதர்ஷினியின் நடிப்பு, சித்தி இத்னானியின் திரை ஈர்ப்பு, அஞ்சலி நாயர் வழியாகப் பேசப்படும் நிற அரசியல், எதிர்பாராத சில திருப்பங்கள் ஆகியவையும் படத்துக்குப் பலம்.
முதல் பாதியில் கதை நகரும் வேகம் சற்றுக் குறைவாக இருப்பதால், சில இடங்களில் பார்வையாளர்களுக்குச் சோர்வு ஏற்படுகிறது. சமூகப் பிரச்னைகளை இன்னும் ஆழமாகப் பேசியிருக்கலாம் என்ற எண்ணமும் எழுகிறது. இரண்டாம் பாதியில் கதையின் வேகம் அதிகரித்து, நகைச்சுவையும் மர்மமும் இணைந்து படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன.
பாட்டி சொன்ன அழகி – சூனியக்காரி கதையை எடுத்துக்கொண்டு, அதில் அறிவியல் ஆராய்ச்சி, பறக்கும் தட்டு, காதல், நகைச்சுவை எனப் பல சரக்குகளைப் போட்டுக் கலக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத். எல்லாமே ஒரே சீராகக் கலக்காவிட்டாலும், சுவாரஸ்யமான தருணங்களுக்குப் பஞ்சமில்லை.
குறிப்பாக, அழகையும் நிறத்தையும் வைத்து மனிதர்களை மதிப்பிடும் சமூகத்தின் பார்வையை நகைச்சுவை வழியாகக் கேள்விக்குள்ளாக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
முதல் பாதியில் கொஞ்சம் பொறுமை தேவைப்பட்டாலும், இரண்டாம் பாதியில் சிரிப்பும் திருப்பங்களும் கைகோக்கின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஃபேன்டஸி காமெடியாக ‘டிரோன்ஸ்’ அமைந்திருக்கிறது.

