எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘வதந்தி’ வெப் தொடர்
அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதளத் தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் – காயத்ரியின் சொந்த பட நிறுவனமான வால்வாட்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘வதந்தி- ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி இருக்கும் தயாராகி இருக்கும் இத்தொடரில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ். ஜே. சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார். அமேசான் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் இரண்டாம் தேதி முதல் வெளியாகவிருக்கிறது ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’.
இத்தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித் பேசுகையில், ” இந்த நாள் எங்களுக்கு சிறப்பான நாள். ‘சுழல்’ எனும் ஒரிஜினல் தமிழ் தொடரை தொடர்ந்து, ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’எனும் வலைதளத் தொடர் தயாராகி இருக்கிறது. இதனை புஷ்கர் காயத்திரி தயாரித்திருக்கிறார்கள். இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் நேர்த்தியாக இயக்கியிருக்கிறார். யூகிக்க முடியாத சுவராசியமான திருப்பங்களை கொண்ட இத்தொடரின் கதைக்களம் தமிழகத்தின் சிறிய நகரம் ஒன்றின் பின்னணியில் அமைந்திருக்கிறது. இந்தத் தொடரில் உண்மையைத் தேடி காவல்துறை அதிகாரி ஒருவர் மேற்கொள்ளும் பயணத்தில், பொய்களை பேசும் மனிதர்கள், உண்மையற்ற விசயங்களை பேசும் மக்கள் என பல சுவாரசியமான அடுக்குகள் இடம் பெற்றுள்ளன. ” என்றார்.
இந்த தொடரின் தயாரிப்பாளர்களான புஷ்கர் – காயத்ரி பேசுகையில், ” பிரைம் வீடியோவுடன் எங்களுக்கு இது இரண்டாவது பயணம். ப்ரைம் வீடியோ, தரமான படைப்புகளை சர்வதேச அளவிலான மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஒப்பற்ற சிறந்த டிஜிட்டல் தளம். ‘வதந்தி’ தொடரின் கதை கருவை சொன்னவுடன், இதன் மீது உள்ளார்ந்த ஈடுபாடுடன் அக்கறையும் செலுத்தி, படைப்பிற்கு தங்களது ஒத்துழைப்பை தொடர்ந்து அளித்து வருகிறார்கள். அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கும் சிறப்பான அனுபவத்தை அளித்திருக்கிறது.”என்றார்.
நடிகர் எஸ். ஜே. சூர்யா பேசுகையில், ” இந்தத் தொடரின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் என்னுடைய உதவியாளர். அவரது இயக்கத்தில் முதன் முதலாக வலைதள தொடரில் நடிப்பதை பெருமிதமாக நினைக்கிறேன். இவர் ஏற்கனவே 2017 ஆம் ஆண்டில் என்னிடம் ஒரு கதையை சொன்னார். அப்போது அவரிடம்,’ நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதனால் வலுவான கதையை எழுதி வா’ என்றேன். இந்த முறை அவர் நல்ல கதையுடன் வந்தார். திரில்லர் என்றாலே அதில் பொழுதுபோக்கு அம்சம் நிறைய இருக்கும். இதில் உணர்வுபூர்வமான கதைகளும் உண்டு. இது பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கும்.”என்றார்.
இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் பேசுகையில், ” வதந்தி – இந்த சமுதாயத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருக்கிறது. பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், மனிதன் தன்னுடைய பொழுதுபோக்கிற்கு கண்டுபிடித்த முதல் விசயமே வதந்திதான் என்று நினைக்கிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன் அமேசான் பிரைம் வீடியோவின் அபர்ணா மேடத்தை மும்பையில் சந்தித்தேன். 20 நிமிடம் வதந்தி தொடரின் கதையை விவரித்தேன். அவர்கள் உடனடியாக கதையின் உள்ளடக்கத்தை துல்லியமாக புரிந்து கொண்டு உற்சாகத்துடன் பணிகளைத் தொடங்குமாறு கூறினார். அத்துடன் படைப்பாளிக்குரிய சுதந்திரத்தையும் வழங்கினார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ”என்றார்.