அரசியல்

அதிமுக வங்கி கணக்கு விவகாரம் : வங்கிக்கு ஓ.பி.எஸ் கடிதம்

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கட்சி விதிகளுக்கு முரணாக கூட்டத்தை கூட்டி நிர்வாகிகளை நியமிப்பது, நீக்குவது செல்லாது என அவர் தேர்தல் ஆணையத்திற்கும், பாராளுமன்ற சபாநாயகருக்கும் கடிதம் எழுதினார். எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு நகர்வுக்கும் ஒ.பன்னீர் செல்வம் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இந்த நிலையில் கட்சியின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அவரது பெயரில் வங்கி கணக்கை மாற்றம் செய்ய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி கரூர் வைஸ்யா வங்கிக்கு கடிதம் கொடுத்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அ.தி.மு.க. பொருளாளராக தான் நீடிப்பதாகவும், கணக்குகளை தான் நிர்வகிப்பதாகவும், வேறு யாருக்கும் மாற்றம் செய்யக்கூடாது எனவும் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் கொடுத்தார். ஆனால் வங்கி அதிகாரிகள் அதனை ஆய்வு செய்து எடப்பாடி பழனிசாமி கொடுத்த கடிதத்தை ஏற்றுக்கொண்டு வங்கி செயல்பாட்டுக்கு அனுமதித்தனர். இந்த நிலையில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வம் சென்னை ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனருக்கு கடிதம் கொடுத்துள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளராக 15 ஆண்டுகள் இருந்து வங்கி கணக்குகளை கவனித்து வருகிறேன். கட்சி கணக்குகள், கட்சி தலைமை கட்டிட நிதி கணக்கு, அ.தி.மு.க. கட்சி வளர்ச்சி நிதி கணக்கு, நிலையான வைப்பு ஆகிய 7 வங்கி கணக்குகள் கரூர் வைஸ்யா, இந்தியன் வங்கி, பாங்க் ஆப் இந்தியா ஆகியவற்றில் உள்ளன.

கடந்த 11-ந்தேதி அன்று சட்ட விரோத பொதுக்குழு கூட்டத்தின் போது அ.தி.மு.க. பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டு இருப்பதாக அறிந்தேன். இந்த சட்ட விரோத நடவடிக்கையை வங்கி ஏற்றுக்கொள்ளக்கூடாது. நான் தற்போது வரை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறேன். கட்சி விதிகளை மீறி புதிதாக எடுக்கப்பட்ட நிர்வாகிகள் செல்லாது. அது சட்ட விரோதமானது என நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திடமும் விரிவான அறிக்கை கொடுக்கப்பட்டு ஆட்சேபனை தெரிவித்து உள்ளேன். இது தொடர்பாக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் நீதித்துறைக்கு உட்பட்டதாகும். எனவே இந்திய தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் வரை மேற்கண்ட வங்கி கணக்குகளின் செயல்பாட்டை நிறுத்துமாறும் அனைத்து வங்கிகளுக்கும் தகுந்த உத்தரவுகளை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE