வாழ்வின் நிதர்சனம் சொல்லும் கதை : ‘தினசரி’ – விமர்சனம்!
by : jayarani amalan
“பணம் பத்தும் செய்யும்” என்பது பழமொழி. ” பணத்தாசை நிம்மதியை கெடுக்கும்” என்பது ‘தினசரி’ சொல்லும் புதுமொழி!
ஐடி துறையில் வேலை பார்க்கும் ஸ்ரீகாந்துக்கும் அமெரிக்க வாழ் தமிழர் சிந்தியாவுக்கும் திருமணம் நடக்கிறது. கல்யாணத்துக்கு முன்னாடி ஸ்ரீகாந்த் போட்ட கண்டிஷன், தனக்கு மனைவியா வர்ற பொண்ணு தன்னைவிட அதிகம் சம்பாதிக்கிறவரா இருக்கணும் என்பதுதான். ஆனால் சிந்தியா அப்படியல்ல, கல்யாணத்துக்குப்பிறகு கணவன், பிறக்கப்போற குழந்தைகள் என்று குடும்ப வாழ்க்கையில் நிம்மதியா இருக்கணும் என்ற எண்ணம் உடையவர். ரஷ்யா – உக்ரைனாக இருக்கும் கணவன் மனைவியின் கொள்கையும் கருத்தும் எதிரெதிர் மோதிக்கொள்வதும் அந்த குடும்பத்தின் சிக்கல்களை அவிழ்க்கும் தீர்வுமே ‘தினசரி’.
எதிர்வீட்டுக்காரன், பக்கத்து வீட்டுக்காரன், அண்ணனைவிட தம்பி, தம்பியைவிட அண்ணன் ஒருபடி மேலே போகணும் என்பதுதான் பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருக்கிறது. எவ்வளவு வந்தாலும் இது பத்தாது என்று அளவற்ற பணத்தாசை பலரின் நோயாகவே மாறிவிட்டது. ஆனால் இருப்பதை வைத்து நிம்மதி வாழ்க்கை வாழ்வதே பெருஞ்சொத்து என்ற வாழ்வின் நிதர்சனத்தை சொல்லும் ஒரு பாடமாக பின்னப்பட்ட கதை.
இந்தக் கருத்தை மையமாக கொண்ட நூறு படங்கள் வந்திருக்கலாம். ஆனால் திரும்ப திரும்பச் சொல்லவேண்டிய, தினசரி யோசிக்க வேண்டிய அத்தியாவசியம் இந்த கரு. அதனை சிறப்பாகவே கையாண்டிருக்கிறார் இயக்குநர் ஜி.சங்கர். பாராட்டுகள் சார்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘நடித்திருக்கிறார்’ ஸ்ரீகாந்த். அளவுகடந்து சம்பாதிக்கவேண்டும் என்ற தனது கனவு, கல்யாணத்திற்குப் பிறகு கலைந்துபோகும்போது காட்டும் பாவனைகளில் ஜெயித்திருக்கிறார். வாழ்த்துகள் ஸ்ரீகாந்த்!
கணவனின் எண்ணத்திற்கு நேரெதிர் சிந்தனைகொண்டவராக சிந்தியா அருமையான தேர்வு. கேரக்டரின் மீட்டர் அறிந்து நடித்திருப்பது அவரது திறமைக்குச் சான்று!
ஸ்ரீகாந்தின் பெற்றோராக எம்.எஸ்.பாஸ்கர் – மீரா கிருஷ்ணன், அக்காவாக விநோதினி மற்றும் ராதாரவி, பிரேம்ஜி, சாம்ஸ் ஆகியோர் தங்களது பங்கை சரியாக செய்துள்ளனர்!
இரைச்சல் இல்லாத இசையால் இதயம் தொடுகிறார் ராகதேவன் இளையராஜா. மனதை வருடும் பாடல்களும், உறுத்தாத பின்னணியும் கொடுத்து வழக்கம்போலவே படத்தின் பலமாக இருக்கிறார்!
ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு கதை சொல்லவரும் கருத்தை, படம் பார்ப்பவர்களுக்கு கடத்தும் பாலமாக அமைந்திருக்கிறது! பாடல் காட்சிகளில் லைட்டிங் செம ஷார்ப்!
படத்தில் வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வார்த்தை செரிவுகள் இருந்தாலும் உரையாடல்களின் நீட்சி, குறையாகவும் தெரிகிறது. மற்றபடி இந்த ‘தினசரி’ எல்லோருக்கும் தேவையான படம்!