திரை விமர்சனம்

குடியை மறக்கச் சொல்லி குட்டி பாடம் நடத்தும் ‘நல்லபடம்’ : திரை விமர்சனம்!

பார் நடத்துபவர் என்றாலே இரவு வேலை முடிந்ததும் ஒரு ‘பெக்’ போட்டுக்கொள்வார் என்பது பொதுவான கணக்கு. ஆனால், இந்தப் படத்தின் ஹீரோ ஹரிஷோ, பார் திறப்பதற்கு முன்பே ‘ஓப்பனிங்’ செய்துவிடுபவர்! ‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி அதன் தலைவராகவும் இருக்கும் ஹரிஷுக்கு, மறுமலர்ச்சி என்றால்… மறுபடியும் மறுபடியும் மது அருந்துவதுதான்!

எந்நேரமும் போதையில் சுற்றித்திரியும் ஹரிஷை, மருத்துவம் படிக்கும் தனலக்‌ஷ்மி காதலிக்கிறார். ஒருபக்கம் காதல்… இன்னொரு பக்கம் குவாட்டர்… ஹீரோவின் வாழ்க்கை இப்படியே ஜாலியாகப் போய்க்கொண்டிருக்க, அவரது நண்பர்களும் சேர்ந்து குடி பார்ட்டியை களைகட்டச் செய்கிறார்கள்.

ஆனால், இவர்களது குடிப்பழக்கத்தால் குடும்பங்கள் படும் அவஸ்தைதான் படத்தின் இன்னொரு முகம். எத்தனை அறிவுரைகள் சொன்னாலும், எத்தனை முயற்சிகள் செய்தாலும் குடியை விட முடியாமல் தவிக்கும் இவர்களைத் திருத்த குடும்பத்தினர் போராடுகிறார்கள். அப்போது வருகிறது படத்தின் ‘ட்விஸ்ட்’!

இந்தியா முழுவதும் மதுவிலக்கு!

மது கிடைக்காமல் தவிக்கும் குடிமகன்கள், மாற்று வழிகளைத் தேடி அலைகிறார்கள். ஒருகட்டத்தில், ‘எப்படியும் இனி மது கிடைக்கப் போவதில்லை’ என்ற உண்மையைப் புரிந்துகொண்டு, குடியை மறந்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்குகிறார்கள். அதன் பலன்? குடும்பத்தில் மீண்டும் சந்தோஷம். வீட்டில் நிம்மதி. சமூகத்தில் மரியாதை. குடிப்பவர்களாக இருந்தவர்கள், மனிதர்களாக மாறியதைப் போல ஒரு உணர்வு!

‘இனிமேல் எல்லாம் சரியாகிவிட்டது’ என்று நினைக்கும் நேரத்தில்தான் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கான சூழல் உருவாகிறது. அப்படியென்றால்… ஹரிஷும் அவரது நண்பர்களும் மீண்டும் ‘பழைய பாதைக்கே’ திரும்பினார்களா? அல்லது குடியை மறந்த வாழ்க்கையைத் தொடர்ந்தார்களா?

இந்தக் கேள்விக்கான பதில்தான் ‘நல்ல படம்’.

ஹீரோ டாக்டர் ஏ.ஹரிஷ், தோற்றத்தில் கல்லூரி மாணவர் போல இளமையாக இருப்பதால், பார் உரிமையாளர், தீவிர மது பிரியர் என்ற கதாபாத்திரத்துக்கு ஆரம்பத்தில் சற்று பொருந்தாமல் தெரிகிறார். ஆனால், கதாபாத்திரத்தைப் புரிந்துகொண்டு நடித்திருப்பதில் குறை வைக்க முடியாது. குறிப்பாக காமெடி காட்சிகளில் இயல்பாகச் சிரிக்க வைக்கிறார். காதல், பாடல் காட்சிகளிலும் தன்னால் முடிந்த அளவுக்கு கவனம் ஈர்க்கிறார்.

கதாபாத்திரத் தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால், ஹரிஷுக்கு ஹீரோவாக நீண்ட தூரம் செல்ல வாய்ப்பு இருக்கிறது.

தனலக்‌ஷ்மி, ‘இவன் குடிப்பதை நிறுத்த மாட்டான்… ஆனால் இவனை நான் காதலிப்பதை நிறுத்த மாட்டேன்!’ என்ற ரேஞ்சில் ஹீரோவை விரட்டி விரட்டி காதலிக்கும் கதாபாத்திரத்தை ரசிக்கும்படி செய்திருக்கிறார். பாடல் காட்சிகளில் கூடுதல் அழகு சேர்க்கிறார்.

ஹீரோவின் நண்பராக வரும் கல்கி ராஜா, படத்தின் காமெடி டிபார்ட்மென்ட்டில் தனியாக ஒரு ‘பார்’ நடத்துகிறார். அவரது மைண்ட் வாய்ஸ், வசன உச்சரிப்பு, தனித்துவமான உடல்மொழி என பல இடங்களில் சிரிப்புக்கு உத்தரவாதம். மொட்ட ராஜேந்திரன், ரமா, பிரியதர்ஷினி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ.ஹரிஷின் கேமரா, கதைக்கு என்ன தேவையோ அதைச் செய்திருக்கிறது. வசனக் காட்சிகளில் எளிமையான அணுகுமுறை. பாடல் காட்சிகளில் மட்டும் இளமைத் துள்ளல். அந்த வித்தியாசம் ரசிக்க வைக்கிறது.

சஹிஷ்னா சேவியரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் காட்சிகளின் தன்மைக்கேற்ப பயணிக்கிறது. பி.ஆர்.பிரகாஷின் படத்தொகுப்பிலும் பெரிய குறைகள் இல்லை.

எழுதி இயக்கியிருக்கும் பிரபுராம்.சி, இன்றைய சமூகத்தில் அதிகரித்துவரும் மதுப்பழக்கத்தை மையமாக வைத்து ஒரு முக்கியமான கேள்வியை முன்வைக்கிறார்.

‘மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு’ என்று சொல்லிக்கொண்டே மதுவை விற்பனை செய்வதைவிட, மதுக்கடைகளே இல்லாத நிலை உருவானால்தான் குடிப்பழக்கத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்க முடியும் என்ற கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

கருத்து முக்கியமானது. அதை கமர்ஷியல் சினிமா பாணியில் காமெடி, காதல், பாடல்கள் கலந்து சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர்.

சிறு முதலீட்டில் உருவான படம் என்பதால், திரைக்கதை சொல்லும் விதத்திலும், சில காட்சிகளின் உருவாக்கத்திலும் சின்னச் சின்ன தடுமாற்றங்கள் இருக்கின்றன. சில இடங்களில் இன்னும் கொஞ்சம் ‘ஷார்ப்’ செய்திருக்கலாம் என்ற எண்ணமும் வருகிறது.

ஆனாலும், குடியை கொண்டாடாமல், குடியால் ஏற்படும் பாதிப்புகளைப் பேசும் படமாக இருப்பது இதன் முக்கியமான அம்சம்.

படமாக ‘நல்ல படம்’ எல்லோரையும் கவராமல் போகலாம். ஆனால் படம் முடிந்து வெளியே வரும்போது, ‘குடி இல்லாத வாழ்க்கை இப்படித்தானே இருக்க வேண்டும்!’ என்று ஒரு நிமிடம் யோசிக்க வைத்தால்… அதுவே இந்தப் படத்தின் வெற்றி.

ரசிக்க வைப்பதில் சற்று தடுமாறினாலும், யோசிக்க வைப்பதில் ‘பாஸ்’ மார்க் வாங்குகிறது இந்த ‘நல்ல படம்’ !

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE