த்ரில்லர் அனுபவம் தரும் ‘பீப்’ : திரை விமர்சனம்!
ஒரு புகைப்படத்தைப் பார்த்தால் போதும்… அதில் இருப்பதை மட்டும் பார்க்காமல், அதற்குப் பின்னால் என்ன நடந்திருக்கலாம் என்பதையும் அலச ஆரம்பித்துவிடுகிறார் ராகவ் ரங்கநாதன். எதையும் உற்றுநோக்கி, அதன் உள்ளே ஒளிந்திருக்கும் விஷயத்தை கண்டுபிடிப்பது அவரது இயல்பு. அவருடைய நண்பர்களோ, ‘இது மனித சக்தியே இல்லை… தெய்வ சக்தி!’ என்கிறார்கள். ஆனால் ராகவுக்கு அதில் நம்பிக்கை இல்லை. ‘இதெல்லாம் அறிவியல்!’ என்பதுதான் அவரது பதில்.
இப்படிப்பட்ட புத்திசாலியான ராகவ், ஒரு நடிகையின் தீவிர ரசிகர். அவரை ஒருமுறையாவது நேரில் சந்தித்துவிட வேண்டும் என்ற ஆசையில் சுற்றிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாலியல் தொழிலாளியான யாமினியுடன் அவருக்கு நட்பு ஏற்படுகிறது. அந்த நட்பு கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகிறது. எல்லாம் சுமுகமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைக்கும் நேரத்தில், திடீரென்று யாமினி அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து கீழே விழுந்து இறந்துவிடுகிறார்.
விபத்து என்று போலீஸ் சொல்கிறது. ஆனால் ராகவுக்கு மட்டும் அது விபத்தாகத் தெரியவில்லை. ‘இது கொலை!’ என்று அவரது மூளை சொல்லுகிறது. கொலை என்றால் கொலையாளி இருக்க வேண்டும். கொலையாளி இருந்தால் ஆதாரம் இருக்க வேண்டும். ஆனால் யாமினியின் மரணத்தில் ராகவிடம் இருப்பது சந்தேகம் மட்டுமே. ஆதாரம் இல்லை. போலீசும் வழக்கை பெரிதாகக் கண்டுகொள்ளாமல் மந்தமாக விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறது.

அதனால் என்ன? ராகவ் களத்தில் இறங்குகிறார். தனது அறிவு, கவனிக்கும் திறன், யூகிக்கும் ஆற்றல் என எல்லாவற்றையும் பயன்படுத்தி யாமினியின் மரணத்தின் பின்னால் இருக்கும் மர்மத்தைத் துலக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் போலீஸும் வழக்கை சீரியஸாக எடுத்துக்கொள்கிறது. அதன் பிறகு ஆரம்பமாகிறது ஒரு சுவாரஸ்யமான போட்டி.
ஒருபுறம் போலீஸ்… மறுபுறம் ராகவ்! இரண்டு தரப்பும் ஒரே கொலையாளியைத் தேடுகின்றன. யார் முதலில் கண்டுபிடிக்கிறார்கள்? காவல்துறையா?
அல்லது காவல்துறையையே சில இடங்களில் திகைக்க வைக்கும் ராகவா? கொலையாளி யார்? யாமினி ஏன் கொல்லப்பட்டார்? என்பதற்கான விடைதான் ‘பீப்’.
அறிவியல் குற்றவியல் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் முக்கியமான பலம் ராகவின் கதாபாத்திரம்தான். நாயகனாக நடித்திருக்கும் ராகவ், வழக்கமான சினிமா ஹீரோவாக வரவில்லை. அடித்தால் நாலு பேர் பறப்பது, ஓடினால் கார் பின்னால் ஓடுவது போன்ற ஹீரோயிசம் இங்கே இல்லை. அவருடைய ஆயுதம் மூளை! ஒரு சிறிய விஷயத்தைக் கூட கவனித்து, அதிலிருந்து ஒரு பெரிய முடிவுக்கு வரும் விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது. அவர் கேட்கும் கேள்விகள் சில நேரங்களில் நம்மையும் யோசிக்க வைக்கின்றன. ‘அட… இந்த விஷயத்தை இப்படியும் பார்க்கலாமா?’ என்று பார்வையாளர்களை யோசிக்க வைப்பதே இந்தக் கதாபாத்திரத்தின் வெற்றி. குறிப்பாக அடுக்குமாடிக் கட்டடங்களில் ஏறி, இறங்கி, ஆபத்தான இடங்களில் துப்பு துலக்கும் காட்சிகளில் ராகவ் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். அந்தக் காட்சிகளில் பதற்றம் நன்றாகவே தொற்றிக்கொள்கிறது.
யாமினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யாமினி லக்ஷ்மணன், கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தப்படாமல், கதையின் முக்கியமான பாத்திரமாகவும் இருக்கிறார். கவர்ச்சியான தோற்றத்துடன் முக வசீகரமும் இருக்கிறது. நடிப்பிலும் ஓரளவு கவனம் ஈர்க்கிறார். படத்தின் இயக்குநர் எல். சண்முக சுந்தர், பேராசிரியர் சிதம்பரமாகவும் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சாதாரணமாகத் தெரியும் அந்த முகம், போகப்போக அதிர்ச்சி கொடுக்கும் விஷயங்களைச் செய்யும்போது கதாபாத்திரத்தின் தன்மை மாறுகிறது.
நயனா கபூராக வரும் ஐடிஐ ஆச்சார்யா, நாயகனின் நண்பர்களாக வரும் பிரேர்னா கண்ணா, அருண் மோகன், ஷ்ரவண் ராமகிருஷ்ணன், ஜுஹி சர்மா, போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் நித்திஷ், சப் இன்ஸ்பெக்டராக வரும் பாலாஜி உள்ளிட்டவர்களும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை வீணாக்கவில்லை. புதிய முகங்களாகத் தெரிந்தாலும், நடிப்பில் பெரிய குறை சொல்ல முடியாது.
ஒளிப்பதிவாளர் பிரதீப் பத்ம குமார், இசையமைப்பாளர் பிரசாந்த் விஹாரி, படத்தொகுப்பாளர்கள் அபிஷேக் மற்றும் விக்னேஷ் ஆகியோர் இயக்குநரின் திரில்லர் நோக்கத்துக்கு ஒத்துழைத்திருக்கிறார்கள். கதை நடக்கும் இடங்கள் குறைவுதான்.
முதல் பாதியில் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம். இரண்டாம் பாதியில் குற்றம், விசாரணை, கொலையாளி என படம் முழுக்க திரில்லர் பாதைக்குத் திரும்புகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் கொலையாளியைத் தேடும் பயணம் சூடு பிடிக்கிறது. துப்பு கிடைக்கிறதா… கிடைத்த துப்பு சரியா… அடுத்ததாக யார் சிக்கப் போகிறார்கள்… என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. ஆனால் ஒரு குறை இருக்கிறது. பொதுவாக திரில்லர் படங்களில் கதாபாத்திரங்கள் குறைவாகப் பேசினால், காட்சிகள் அதிகமாகப் பேசும். இங்கே ராகவ் சில நேரங்களில் அதிகமாகப் பேசுகிறார்.
தனது ஒவ்வொரு யூகத்தையும் பார்வையாளர்களுக்கு விளக்கிக் கொண்டே செல்வது சில இடங்களில் விசாரணையின் வேகத்தைக் குறைக்கிறது. ‘சரி… புரிந்துவிட்டது… அடுத்து போகலாமே!’ என்று சொல்லத் தோன்றும் தருணங்களும் இருக்கின்றன. ஆனால், கொலையாளியை நெருங்க நெருங்க அந்தக் குறை காணாமல் போய்விடுகிறது. திரைக்கதை இறுக்கமாகிறது. வேகம் கூடுகிறது.
முடிவை நோக்கி படம் நகரும்போது, ‘யார் செய்தது?’ என்ற கேள்விக்கு விடை தெரிந்தாக வேண்டும் என்ற ஆர்வம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.
பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல், குறைந்த கதைக்களங்களைக் கொண்டு, ஒரு புத்திசாலியான கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் குற்றவியல் திரில்லர் இந்த ‘பீப்’. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால், இந்த ‘பீப்’ நம்மை ஏமாற்றாமல் ஒரு திரில்லர் அனுபவத்தைக் கொடுக்கும்.

