திரை விமர்சனம்

 ‘பனி விழும் இரவு’ திரை விமர்சனம்!

கொடைக்கானல். திருமணம் செய்துகொள்ளப்போகும் ஒரு காதல் ஜோடி காட்டேஜ் ஒன்றில் தங்குகிறது. ரம்மியம் நிறைந்த லோகேஷனை ரசிக்கலாம்.. காதலில் கரைந்து களிக்கலாம் என்று கனவுகளையும் ஆசைகளையும் சுமந்துகொண்டிருந்த நாயகனுக்கு அந்த நள்ளிரவு அள்ளித்தந்ததெல்லாம் அதிர்ச்சி. யெஸ்.. உடன் இருந்த காதலி மர்மமான முறையில் காணாமல் போக, காவல் நிலையத்தில் கண்ணீரும் கவலையுமாக புகார் கொடுக்கிறார் நாயகன். களத்தில் இறங்கும் காவல் துறை காணாமல் போன நாயகியை தேடும் படலத்திலும் காத்திருக்கிறது அடுத்தடுத்த அதிர்ச்சிகள். அது என்ன என்பதை அறிய ‘பனி விழும் இரவு’ பார்க்கலாம்.

‘ஜே.கே’ என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் அருண் கார்த்திக். ஆரம்பமே அழுக்காச்சி முகமாக அறிமுகமானாலும் அடுத்தடுத்த காட்சிகளில் பதற்றம், ஏமாற்றம், அதிர்ச்சி, ரொமான்ஸ் என பவ்வேறு பாவனைகளால் மனம் நிறைகிறார். ஒல்லி குச்சி உடம்புக்காரியாக வரும் நாயகி என்ஆக்ஷி கங்குலி கொஞ்சம் கிளாமர், கொஞ்சம் காதல், கொஞ்சம் நடிப்பு என கொடுத்த வேலையை செவ்வனே செய்திருக்கிறார்

இந்தப் படத்தின் முக்கியமான பலமே அதன் கிளைமாக்ஸ்! அதைப் பற்றி வாயைத் திறந்தால், படத்தின் சுவாரசியத்துக்கே ஆப்பு வைத்ததுபோலாகிவிடும். இருந்தாலும், ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பரபரப்பாகப் பேசப்படும் அதிநவீன தொழில்நுட்பம் ஒன்றைக் கதையின் மையத்தில் வைத்து, அதனைச் சுற்றி திரைக்கதையைப் பின்னியிருக்கிறார் இயக்குநர். அதன் விளைவாகக் கிடைக்கும் திருப்பம், வழக்கமான த்ரில்லர் படங்களில் வரும் ‘அடையாளம் தெரியாத ஆசாமி’, ‘திடீரென்று வரும் வில்லன்’ ரகத்தில் இல்லை. அதனால், அந்த மாஸ் ட்விஸ்ட்டைத் திரையில் பார்த்து ரசிப்பதில்தான் உண்மையான சுவாரசியம் இருக்கிறது. முன்கூட்டியே தெரிந்துகொண்டால், பிரியாணியில் கடைசியாகக் கிடைக்கும் கறித்துண்டை வேறொருவர் எடுத்துச் சாப்பிட்டது போல வருத்தம்தான் மிஞ்சும்!

இன்ஸ்பெக்டராக வரும் சேரன்ராஜ், வாட்ச்மேனாக வரும் சரவண சக்தி மற்றும் கருப்பு நம்பியார் ஆகியோர் கதையின் திருப்புமுனைகளுக்குத் தேவையான பங்களிப்பை வழங்குவதுடன் படத்துக்குப் பலம் சேர்க்கிறார்கள். டாக்டராக வரும் கஜராஜ், கதையின் முக்கியமான ரகசியம் வெளிப்படும் இடத்தில் கம்பீரமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.

எனினும் சஸ்பென்ஸ் என்ற சரக்கை இன்னும் கொஞ்சம் நேரம் ஊறவைத்துத் திரைக்கதையில் பரிமாறியிருந்தால், இந்தப் படம் வேறொரு உயரத்தைத் தொட்டிருக்கும். த்ரில்லர் படங்களில் திருப்பம் என்பது வெறும் அதிர்ச்சிக்காக மட்டும் இருக்கக் கூடாது; அது வெளிப்படும் கணத்தில் ரசிகர்கள் தன்னையறியாமல் கைதட்ட வேண்டும். அந்த அளவுக்கு ஒவ்வொரு முடிச்சையும் இறுக்கமாகப் போட்டிருந்தால், ‘பனி விழும் இரவு’ இன்னும் அதிகமாகப் பேசப்பட்டிருக்கும். இருந்தாலும், இறுதிக்கட்டத்தில் கிடைக்கும் திருப்பம் ரசிகர்களை ஓரளவுக்குத் திருப்திப்படுத்துகிறது.

அழகான கொடைக்கானல் ஒளிப்பதிவு குறைபாட்டால் டல்லடிக்கிறது. அடிக்கடி பயன்படுத்தப்படும் ட்ரோன் ஷாட்டும் அலுப்பூட்டுகிறது. பின்னணி இசையில் எந்த மெனக்கெடலும் இல்லாமல் கடமைக்கு கடம் வாசித்திருக்கிறார்கள்.

கொடைக்கானல் குளிரில் காதல் கதையாகத் தொடங்கி, போலீஸ் விசாரணையாக மாறி, தொழில்நுட்ப மர்மத்துக்குள் நம்மை அழைத்துச் செல்லும் இந்த ‘பனி விழும் இரவு’, த்ரில்லர் ரசிகர்களுக்கு ஒரு சுவாரசியமான வார இறுதி விருந்து! கொஞ்சம் கூடுதல் இறுக்கமான திரைக்கதை இருந்திருந்தால், இந்த இரவு இன்னும் நீண்ட நேரம் நினைவில் நின்றிருக்கும்!

மொத்தத்தில்… திருப்பங்கள் இருக்கின்றன… திகைப்பும் இருக்கிறது!
கொஞ்சம் வேகம் கூட்டியிருந்தால் இன்னும் சூப்பர்!
த்ரில்லர் ரசிகர்கள் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்!

 

படக்குழுவினர்
  • இயக்கம்: செ. ரா. ராஜேஷ்

  • நாயகன்: அருண் கார்த்தி (ஜெகே கதாபாத்திரத்தில்)

  • நாயகி: எனாக்ஷி கங்குலி (சபிதா கதாபாத்திரத்தில்)

  • மற்ற நடிகர்கள்: கருப்பு நம்பியார், சேரன்ராஜ், சரவணசக்தி, கஜராஜ் மற்றும் பலர்

  • ஒளிப்பதிவு: ஜெயக்குமார் தங்கவேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE