‘அன்பே டயானா’ திரை விமர்சனம்!
காதலுக்கு ஏது எல்லை? என்ற கருவை கலகலப்பான திரைக்கதையாக்கினால் ‘அன்பே டயானா’ ரெடி!
கதை
சென்னையின் பெரம்பூர் பின்னணியில் நடக்கும் இந்தக் கதையில், பாரம்பரிய தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கும், ஆங்கிலோ-இந்தியப் பெண் டயானாவுக்கும் காதல் மலர்கிறது. ஆனால் காதல் வந்துவிட்டால் பிரச்சினைகளும் கூடவே வருமே! குடும்பப் பகை, கலாச்சார வேறுபாடு, சாதி மனப்பான்மை என பல சவால்கள் இந்தக் காதல் ஜோடியைச் சோதிக்கின்றன. அவற்றையெல்லாம் தாண்டி அவர்கள் இணைந்தார்களா என்பதே படத்தின் கதை.

இயக்குநர்
‘ஜமா’ மூலம் ஆழமான உணர்வுகளைப் பேசிய இயக்குநர் – ஹீரோவான பாரி இளவழகன், இந்த முறை காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் என எல்லோரையும் கவரும் ஒரு பொழுதுபோக்குப் படத்துடன் வந்திருக்கிறார். அதில் வென்றும் இருக்கிறார்.
படத்தின் முதல் பாதி சற்று நிதானமாக நகர்கிறது. கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி, கதைக்கான அடித்தளத்தை அமைப்பதில் இயக்குநர் நேரம் எடுத்துக்கொள்கிறார். ஆனால் இடைவேளைக்குப் பிறகு படம் வேறு கியருக்கு மாறிவிடுகிறது. நகைச்சுவையும், உணர்ச்சியும் கை கோர்த்து பயணிக்க, ரசிகர்கள் சிரித்தபடியே கதையுடன் ஒன்றிப்போகிறார்கள்.
குறிப்பாக திருமண மண்டபத்தில் நடக்கும் காட்சிகள், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான மோதல்கள், மனதைத் தொடும் உரையாடல்கள், இறுதிக்கட்ட உணர்வுபூர்வமான காட்சிகள் என இரண்டாம் பாதி முழுவதும் ரசிக்க வைக்கிறது. சாதி குறித்த கருத்தை எந்தவித பிரசாரத் தொனியும் இல்லாமல், கதையோடு இயல்பாக இணைத்திருப்பது இயக்குநரின் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
நடிகர்கள்
படத்தை இயக்கி நடித்திருக்கும் பாரி இளவழகன், பக்கத்து வீட்டுப் பையன் போல இயல்பாக மனதில் பதிகிறார். டயானாவாக வரும் ரம்யா ரங்கநாதன் தனது புன்னகையாலும், எளிமையான நடிப்பாலும் ரசிகர்களின் மனதை வெல்கிறார். இருவருக்குமிடையேயான காதல் காட்சிகள் செயற்கைத்தனமின்றி இயல்பாக அமைந்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலம்.

சேத்தன் தனது அனுபவமான நடிப்பால் குடும்பக் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றும் ரோஜா, குறுகிய காட்சிகளிலேயே தனது அனுபவத்தை நிரூபிக்கிறார். ஆனால் படம் முடிந்து வெளியே வரும்போது அதிகம் நினைவில் நிற்பவர் பரிதாபங்கள் கோபிதான். அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் அரங்கில் சிரிப்பலைகளை எழுப்புகிறது. கதையின் ஓட்டத்தைத் தடை செய்யாமல் நகைச்சுவையை இயல்பாகக் கலந்து கொடுத்திருப்பது சிறப்பு.
தொழில் நுட்பம்
பரத் சங்கரின் இசை காதலுக்கும், குடும்ப உணர்வுகளுக்கும் அழகாக துணை நிற்கிறது. ஷெல்லி காலிஸ்ட்டின் ஒளிப்பதிவு பெரம்பூரின் தெருக்களுக்கு தனி உயிர் கொடுத்துள்ளது. பார்த்தாவின் படத்தொகுப்பு, குறிப்பாக இரண்டாம் பாதியில், படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறது. தயாரிப்புத் தரமும் கதைக்கு ஏற்ற வகையில் நேர்த்தியாக அமைந்துள்ளது.
மொத்தத்தில், ‘அன்பே டயானா’ புதிதாக கதையைச் சொல்லவில்லை. ஆனால் பழக்கமான கதையையே சிரிக்கவும், நெகிழவும், குடும்பத்துடன் ரசிக்கவும் ஏற்ற வகையில் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறது. முதல் பாதியின் மெதுவான பயணத்தை மறக்கச் செய்யும் அளவுக்கு இரண்டாம் பாதி கலகலப்பாக அமைகிறது. காதல், குடும்பம், நகைச்சுவை – இந்த மூன்றையும் விரும்புபவர்களுக்கு ‘அன்பே டயானா’ நிச்சயம் மனநிறைவைத் தரும்.

