‘ஐமா’ திரை விமர்சனம் : ஹீரோவுக்கு விஜய்யின் சாயல்
முற்றிலும் புதுமுகங்கள், புது முயற்சி; சிறு முதலீட்டுடன் இன்று வெளியாகியிருக்கும் படம் ‘ஐமா’. அதென்ன ஐயமா என்று கேட்பவர்கள்.. அதற்கு கடவுளின் சக்தி என்று பொருள் புரிந்துகொள்க.
சரி படத்தின் கதை என்ன? படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்..
படுத்த படுக்கையாக இருக்கும் தாயின் சிகிச்சை செலவுக்காக தன் உடல் உறுப்புகளை விற்று உயிரை மாய்த்துக்கொண்டு தாயின் உயிரை காப்பாற்ற முடிவெடுக்கும் நாயகன் ஆதாம் (யூன்ஸ்). உயிருக்குயிரான பாசமலர் அண்ணனை விபத்தில் பறிகொடுத்துவிட்டு வாழ்வே இருண்டு போனதாக நினைத்து உயிரை விட முடிவெடுக்கும் நாயகி மரியா (எல்வின் ஜூலியட்). இந்த இருவரையும் கடத்தி ஒரு ரகசிய இடத்தில் அடைத்து வைக்கிறது ஒரு கும்பல். தாங்கள் எதற்காக கடத்தப்பட்டோம் என்ற கேள்விக்கு விடைதெரியாமல் தவிக்கும் இருவரும் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர். அந்த தனிமை சூழலே இருவரையும் காதல் கொள்ள செய்கிறது. இதற்கிடையே வில்லன் கையில் சிக்குகிறார்கள் இருவரும். அவர்கள் அங்கிருந்து தப்பிக்கிறார்களா? சாக முடிவெடுத்தவர்கள் வாழ்கிறார்களா வீழ்கிறார்களா? என்பதே கதை.
கதாநாயகனாக நடித்த யூனஸ் துடிதுடிப்பான இளைஞராக வருகிறார். சிலகோணங்களில் தோற்றத்தில் நடிகர் விஜய்யை நினைவூட்டுகிறார். நடிப்பில் இயக்குநர் சொன்னதைச் செய்துள்ளார். குறை சொல்ல ஒன்றும் இல்லை.கதாநாயகி எவ்லின் ஜூலியட் தப்பிக்கும் காட்சிகளில் நல்ல முக பாவங்களைக் காட்டியுள்ளார். அவரது திரைத் தோற்றம் திருப்தியாக உள்ளது. வில்லனாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி குறையில்லாத நடிப்பைக் கொடுத்து வில்லத்தனம் காட்டுகிறார்.
நாயகன் -நாயகி பாத்திரங்களின் மூலம் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும்போது அதிலிருந்து தப்பித்து உயிர் வாழவே எண்ணுகிறார்கள் என்ற உளவியல் உண்மையைக் காட்டியுள்ளார்கள். அவர்களின் உயிர் தப்பித்தல் முயற்சிகளை அணு அணுவாக ரசிக்கும் வில்லனின் குரூர குணமும் காட்டப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் திரில்லர் படத்தின் சாயலில் தொடங்கி பிறகு பேய் படமாக இருக்குமோ என்று யோசிக்க வைத்து மெல்ல, மெல்ல சைன்ஸ் பிக்ஷனாக மாறுவது படத்தின் சுவாரஷ்யம். தப்பிக்க முயல்வதற்கான க்ளு கண்டுபிடிக்க ஹீரோவை நச்சென்று லிப் டூ லிப் கிஸ் கொடுத்து சடன் கிக் ஏற்றுகிறார் ஜூலியட்.
யாருமே இல்லாத இடம்போல் சஸ்பென்சாக காட்சி செல்லும் போது திடீரென்று வில்லன் என்ட்ரி, அடியாட்கள் என்ட்ரி எல்லாம் சஸ்பென்சை நீர்த்துப் போகச் செய்கிறது. வில்லனாக வரும் சண்முகம் ராமசாமி வித்தியாசமான கெட்டப்பில் வந்து மிரட்டி உள்ளார். “இவன் அவனில்லை அவ இவனில்ல” என்ற பாணியில் ஒரு வசனம் பேசி பொடி வைக்கிறார் வில்லன் சண்முகம்.
கே ஆர்.ராகுல் இசையில் படத்தில் மொத்தம் பத்து பாடல்கள் பெறு கிறது. சஸ்பென்ஸ் த்ரில்லரில் 10 பாடலா என்றால் ஆமாம் 10 பாடல் தான். கிளைமாக்ஸ் முடிந்த பிறகும் திரையில் பாடல் தொடர்கிறது. விஷ்ணு கண்ணன் குறுகிய அறையில் காட்சிகளை சுழன்று படமாக்கியிருக்கிறார்.
ராகுல் ஆர்.கிருஷ்ணா ஹாலிவுட் சைன்ஸ் பிக்ஷன் பாணியில் கதையை சொல்ல முயன்றிருக்கிறார். காட்சிகளில் இன்னும் கூட விறுவிறுப்பு சேர்த்திருக்கலாம். இருந்தாலும் புதிய முயற்சியை பாராட்டலாம்.