திரை விமர்சனம்

பிரம்மாண்டம் இருக்கு… பிரமாதமா இருக்கா?: ‘தி பாரடைஸ்’ விமர்சனம்!

‘தசரா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா, ‘நேச்சுரல் ஸ்டார்’ நானியுடன் கைகோத்திருக்கிறார். பெயர் ‘தி பாரடைஸ்’. டைட்டிலைக் கேட்டால் சொர்க்கத்துக்கே அழைத்துச் செல்வார்கள் போலத் தோன்றுகிறது. ஆனால், படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இது சொர்க்கப் பயணம் இல்லை… ரத்தமும் வன்முறையும் நிறைந்த ஒரு பயணம் என்பது புரிந்துவிடுகிறது!

‘சவாரி’ என்று அழைக்கப்படும் ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்கள், சுதந்திர இந்தியாவிலும் அடையாளமின்றி வாழ்கிறார்கள். அவர்களைத் தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கும் கொடுங்கோல் ஷிகஞ்சா மாலிக்குக்கு எதிராக ஜடலாக நானி எப்படி கிளர்ந்தெழுகிறார் என்பதுதான் கதை.

கதையின் அடிப்படை ஒன்றும் புதிதல்ல. ஒடுக்கப்பட்டவர்கள்… அதிகாரம் படைத்தவன்… அடக்குமுறைக்கு எதிரான போராட்டம்… மக்களுக்கான அடையாள மீட்பு. தமிழ், தெலுங்கு சினிமாக்களில் பலமுறை பார்த்துப் பழகிய அதே பாதைதான். குறைந்தபட்சம் அதை வித்தியாசமாகச் சொல்லியிருக்கலாமே என்ற எதிர்பார்ப்புதான் படம் பார்க்கும்போது அதிகமாகிறது.

படத்தின் தொடக்கமே அதிரடியாக இருக்கிறது. நாயகனின் பிறப்பைச் சுற்றி அமைக்கப்பட்ட அந்தக் காட்சி, ‘அடுத்து என்ன நடக்கப் போகிறது?’ என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. முதல் பாதியிலும் சில காட்சிகள் நன்றாகவே வேலை செய்கின்றன. குறிப்பாக கஃபே சண்டைக் காட்சி, இடைவேளைக்கு முன்பான காட்சிகள் ஆகியவை ரசிகர்களுக்கு விசில் போட வைக்கும் வகையில் உள்ளன.

நானி தனது கதாபாத்திரத்துக்காக உடலமைப்பை மாற்றியிருப்பது திரையில் தெரிகிறது. ‘மாஸ்’ கதாபாத்திரம் என்றாலே ஓவராகச் செய்யாமல், தனக்கே உரிய பாணியில் நடிப்பை வழங்கியிருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் உடல் உழைப்பைக் கொட்டியிருக்கிறார்.

ஆனால், நானி ஒருவரை மட்டும் வைத்து சொர்க்கத்தைக் கட்ட முடியுமா?

இங்குதான் படம் தடுமாறுகிறது.

ரத்தம், வெட்டு, சண்டை, துரத்தல் என்று காட்சிகள் நகர்கின்றன. ஒரு கட்டத்துக்கு மேல், ‘சரி… அடுத்ததாக என்ன?’ என்று பார்வையாளரே இயக்குநரிடம் கேட்க வேண்டிய நிலை. கதையை முன்னோக்கி நகர்த்துவதற்குப் பதிலாக வன்முறையையே மீண்டும் மீண்டும் முன்னிலைப்படுத்தியிருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.

படத்தின் பல கதாபாத்திரங்களும் வலுவாக எழுதப்படவில்லை. நானியைத் தவிர மற்றவர்கள் திரையில் வந்து போகிறார்கள். சோனாலி குல்கர்னியின் கதாபாத்திரமும் ஆரம்பத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பின்னர் இழந்துவிடுகிறது. மோகன் பாபு போன்ற அனுபவம் வாய்ந்த நடிகருக்கும் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் அளவுக்கு இடம் கிடைக்கவில்லை.

சம்பூர்ணேஷ் பாபு, ராகவ் ஜூயல் என திறமையான நடிகர்கள் இருந்தும், அவர்களைச் சரியாகப் பயன்படுத்தாதது ஏமாற்றம்.

படம் அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு சொல்லப்படுகிறது. ஆனால், படம் முடிந்ததும் அந்த அத்தியாயங்களில் எது மனதில் நிற்கிறது என்று யோசித்தால்… பதில் தேட வேண்டியிருக்கிறது!

இரண்டாம் பாதிதான் படத்தின் மிகப்பெரிய சோதனை. விறுவிறுப்பு குறைந்து, காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக நகர்கின்றன. நானி – மோகன் பாபு இடையிலான மோதல் படத்தின் உச்சமாக அமையும் என்று எதிர்பார்த்தால், வழக்கமான போலீஸ் – தாதா மோதலுக்குள் படம் சென்று விடுகிறது.

கதாநாயகியைச் சுற்றியுள்ள சில காட்சிகள் கதையோடு ஒட்டாமல் தனியாக நிற்பதுபோல் தெரிகின்றன. அவை படத்தின் உணர்வோட்டத்தையே பாதிக்கின்றன.

அனிருத் இசையில் பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன. ஆனால், திரைக்கதை அந்த இசைக்கு போதிய இடம் கொடுக்காததால் பின்னணி இசையும் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஒலிக்கலவையில் சில இடங்களில் வசனங்கள் தெளிவாகக் கேட்கவில்லை. எடிட்டிங் இன்னும் கொஞ்சம் பொறுமையாக நடந்திருக்கலாம். ஒரு காட்சியை ரசித்து முடிப்பதற்குள் அடுத்த காட்சி வந்து நிற்கிறது. சில இடங்களில் ‘கட்’ என்ற கத்தரி கொஞ்சம் வேகமாகவே வேலை செய்திருக்கிறது!

சி.எச். சாயின் ஒளிப்பதிவு படத்தின் பலம். பிரம்மாண்டமான காட்சிகள், செட் அமைப்புகள், தயாரிப்பு மதிப்பு என தொழில்நுட்ப ரீதியாக படம் பணம் செலவழித்திருப்பது திரையில் தெரிகிறது.

ஆனால், ஒரு பிரம்மாண்டமான வீட்டைக் கட்டிவிட்டு அதற்குள் சுவாரஸ்யமான மனிதர்களை குடியமர்த்த மறந்துவிட்டால் என்ன ஆகுமோ… அதுதான் ‘தி பாரடைஸ்’

நானியின் நடிப்பு, சண்டைக் காட்சிகள், இடைவேளைக்கு முந்தைய பரபரப்பு, அனிருத் பாடல்கள், பிரம்மாண்டமான தயாரிப்பு ஆகியவை படத்துக்குப் பலம்.

ஆனால், பழக்கமான கதைக்களத்துக்கு புதுமையான திரைக்கதை கிடைக்கவில்லை. குறிப்பாக இரண்டாம் பாதி பொறுமையைச் சோதிக்கிறது. முதல் முன்னோட்டம் வெளியானபோது உருவான எதிர்பார்ப்புக்கு இணையான தாக்கத்தை முழுப் படம் ஏற்படுத்தவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE