‘லெனின் பாண்டியன்’ திரை விமர்சனம்!
மணல் மாஃபியா, அதிகாரத்தைத் தங்களுக்குச் சாதகமாக வளைத்துக்கொள்ளும் காவல்துறை உயரதிகாரிகள், அதற்குள் சிக்கிக்கொள்ளும் ஓர் அப்பாவி விவசாயி, அவரைக் காப்பாற்ற வேண்டிய இளம் காவலர்… இத்தனை பேரையும் வைத்து அதிகாரத்தின் முகத்திரையைக் கிழிக்க முயல்கிறது ‘லெனின் பாண்டியன்’.
மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடும் விவசாயி கங்கை அமரன், தனது புகாரின் பேரில் விசாரணை நடத்தும் வி.ஏ.ஓ அர்ச்சனா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றத்தை நாடுகிறார். வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுவதுடன், கங்கை அமரனுக்கு ஆயுதம் ஏந்திய காவலர் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.
அந்தப் பொறுப்பு, உயர் அதிகாரிகளால் பெரிதாக மதிக்கப்படாத காவலர் தர்ஷனிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் சாதாரண பணியாக நினைக்கும் தர்ஷன், மணல் கொள்ளையின் பின்னணியில் இருக்கும் ஆபத்தை உணர்ந்ததும், கங்கை அமரனைப் பாதுகாக்க களமிறங்குகிறார்.

மணல் கொள்ளை கும்பலை சட்டத்தின் முன் நிறுத்த கங்கை அமரன் நடத்தும் போராட்டமும், அவரை உயிருடன் காப்பாற்ற தர்ஷன் நடத்தும் போராட்டமும் இணையும் பரபரப்பான கதைதான் ‘லெனின் பாண்டியன்’.
‘மக்களைக் காப்பாற்ற வேண்டிய அமைப்பே, மக்களுக்கு எதிராக நின்றால் என்ன ஆகும்?’ என்ற கேள்விதான் படத்தின் அடிநாதம்.
முதல் படத்திலேயே இவ்வளவு கனமான விஷயத்தை எடுத்துக்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. திரைக்கதையிலும் பல இடங்களில் நல்ல கூர்மை இருக்கிறது. ஆனால், அந்தக் கூர்மைக்கு இணையான நேர்த்தி எல்லா இடங்களிலும் கைகொடுக்கவில்லை.
கங்கை அமரனின் துரைராசு கதாபாத்திரம் படத்தின் முக்கிய பலம். கிராமத்து மனிதருக்கே உரிய அப்பாவித்தனத்தையும், அவ்வப்போது வெளிப்படும் நகைச்சுவையையும் அவர் நன்றாகக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால், சில காட்சிகளில் ஓவர் டோஸாகவும் இருக்கிறது. ‘கடைசி விவசாயி’ படத்தில் நல்லாண்டி காட்டிய அந்த மண்ணின் மனிதனைப் போன்ற நுணுக்கமான நடிப்பு இன்னும் கொஞ்சம் கிடைத்திருந்தால் துரைராசு நம் மனதில் இன்னும் ஆழமாகப் பதிந்திருப்பார்.
தர்ஷன் கணேசன் மெலிந்த உடல்வாகு கொண்ட காவலராகப் பொருத்தமாக இருக்கிறார். ஆனால், நடிப்பில் இன்னும் சில படிகள் ஏற வேண்டியிருக்கிறது. குறிப்பாக கதாபாத்திரத்தின் உள்ளுக்குள் இருக்கும் கோபத்தையும் தயக்கத்தையும் இன்னும் அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கலாம்.
ரோஜாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் டப்பிங் குரல் மட்டும் அந்தக் கிராமத்து மண்ணோடு ஒட்டாமல், சற்று ‘பளபளப்பாக’ இருக்கிறது. அந்தக் குரல் காதில் விழும்போது, கிராமத்தைவிட டப்பிங் ஸ்டுடியோதான் நினைவுக்கு வருகிறது! ஆனால், படம் திடீரென உயரம் தொடும் இடம் நீதிபதி பீமாராவ் வரும் காட்சிகள்.
ஜார்ஜ் மரியான் அந்தக் கதாபாத்திரத்தை அசத்தலாகக் கையாண்டிருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகப் பின்னணியில் இருந்து மேலே வந்த ஒருவர், இப்போது அதே வலியை அனுபவிக்கும் மக்களுக்காக நிற்பது — கதாபாத்திரத்திற்கு நல்ல ஆழம் கொடுக்கிறது.
அவரது உதவியாளரிடம், ஒருவரை அவருடைய தோற்றத்தை வைத்து மதிப்பிடக் கூடாது என்று சொல்லும் காட்சி… சிரிக்கவும் வைக்கிறது; அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கிறது. இதுபோன்ற வசனங்கள்தான் படத்தின் அரசியலைப் பார்வையாளருக்குப் புரிய வைக்கின்றன.
இடைவேளைக்கு முந்தைய காட்சியில் இயக்குநர் பாலச்சந்திரன் காட்டும் ‘சர்ப்ரைஸ்’ நடிப்பும் கவனம் ஈர்க்கிறது. அதற்கு இளையராஜாவின் பின்னணி இசை சேர்ந்ததும் காட்சி இன்னும் ‘கெத்து’ ஆகிறது. கங்கை அமரன் சம்பந்தப்பட்ட சில காட்சிகளில் வரும் இயல்பான நகைச்சுவையும் ரசிக்க வைக்கிறது.
இளையராஜா என்ற பெயர் வந்துவிட்டாலே 80-களின் நினைவுகள் தானாகவே கதவைத் திறந்து உள்ளே வந்துவிடுகின்றன. துரைராசு – சந்தனம் உறவில் ‘முதல் மரியாதை’ படத்துக்கு மரியாதை செலுத்த இயக்குநர் முயன்றிருக்கிறார். அதற்காக ‘பூங்காற்று திரும்புமா’ பாடலின் இசைத் தன்மையையும் இளையராஜா மூலம் மீண்டும் பயன்படுத்தியிருக்கிறார். யோசனை அழகுதான். ஆனால், திரையில் அந்த உணர்வு முழுமையாகப் பூத்திருக்க வேண்டிய இடத்தில், பாதியிலேயே நின்றுவிடுகிறது.

மறவர்மன் – பிரியா காதலும் அதே ரகம். இருவருக்குமான முரண்பாடுகளுக்கு இன்னும் கொஞ்சம் திரைக்கதை வேலை பார்த்திருந்தால், அந்த உறவு நம்மை இன்னும் நெருக்கமாகத் தொட்டிருக்கும். முக்கியமாக படத்தின் கிளைமாக்ஸ்.
இவ்வளவு நேரம் மெதுவாக நம்மை அழைத்துக்கொண்டு வந்த படம், கடைசியில் நம்மை ஒரு பெரிய அதிர்ச்சிக்குள் தள்ளும் என்று எதிர்பார்க்க வைக்கிறது. ஆனால், அந்த அதிர்ச்சி ‘மைனா’, ‘விசாரணை’ போன்ற படங்களின் இறுதிக்காட்சிகளைப் போல நெஞ்சில் பதியவில்லை.
காரணம், கதை இயல்பாக அங்கே வந்து சேர்வதைவிட, இயக்குநர் முதலில் முடிவைத் தீர்மானித்துவிட்டு, அதற்கான பாதையை பின்னர் அமைத்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
ஆக, ‘லெனின் பாண்டியன்’ — அதிகாரம், அரசியல், காவல்துறை, மணல் மாஃபியா என சமூகத்தின் பல அடுக்குகளைத் தொட்டுப் பார்க்கும் துணிச்சலான முதல் முயற்சி.
திரைக்கதையில் இருக்கும் கூர்மை, ஜார்ஜ் மரியானின் நடிப்பு, இளையராஜாவின் இசை, சில இயல்பான நகைச்சுவைக் காட்சிகள் ஆகியவை படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன.
அதே நேரத்தில், நடிப்பில் இருக்கும் ஏற்ற இறக்கம், காதல் காட்சிகளின் பலவீனம், இறுதிக்கட்டத்தின் செயற்கைத்தன்மை ஆகியவை படத்தின் தாக்கத்தைக் குறைக்கின்றன.
அதிகாரம் யாருடைய கையில் இருக்கிறது என்பது முக்கியமல்ல… அதை அவர்கள் எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் முக்கியம்!
அந்தக் கேள்வியை எழுப்பிய விதத்தில் ‘லெனின் பாண்டியன்’ கவனிக்க வைக்கிறது. இன்னும் கொஞ்சம் திரைக்கதை நேர்த்தியும், காட்சிகளுக்கான கட்டுப்பாடும் இருந்திருந்தால்… இந்தப் பாண்டியன் இன்னும் பலமாகச் சீறியிருப்பான்!

