ஆர்வத்தை தூண்டும் திரைக்கதை வெற்றியை தீர்மானிக்கிறது! ‘வேடுவன்’ விமர்சனம்!
சினிமாவுக்குள் சினிமா என்ற ஃபார்முலா கதையில் வந்திருக்கும் இணையத் தொடர்தான் ‘வேடுவன்’. டைட்டிலின் இன்னொரு பொருள் வேட்டையன்.
கதை என்ன?
பிரபல நடிகரான கண்ணா ரவி நடிக்கும் படங்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. இதை உடைத்து நொறுக்குவதுபோன்று ஒரு படம் பண்ணிடனும் என்று காத்திருக்கும் கண்ணா ரவிக்கு இயக்குநர் ஒருவர் சொல்லும் கதை ஈர்க்கிறது. அது ஒரு அண்டர் கவர் போலீஸ் கதை. ரவுடிகள் இடத்திற்கே சென்று சைலண்டாக அவர்களை எண்கவுண்டர் செய்வதுதான் கண்ணாரவிக்கு கொடுத்த அசைன்மெண்ட். வெவ்வேறு ரவுடிகள், வெவ்வேறு களம் என்று பயணிப்பவர், கடைசியாக முன்னாள் ரவுடி சஞ்சீவ் ஊருக்குச் சென்று புரோட்டா மாஸ்டர் போல நடித்து சஞ்சீவ் ‘கதையை’ முடிக்க நினைக்கிறார். அதற்கான நேரம் நெருங்கும்போது தனது முன்னாள் காதலியின் கணவர்தான் சஞ்சீவ் என தெரியும்போது ஷாக் ஆகிறார் கண்ணா ரவி. அடுத்து நடப்பது என்ன? என்பதும் நிஜத்தில் இந்த கதையை கேட்கும் கண்ணாரவி எடுக்கும் முடிவு என்ன என்பதுமே ‘வேடுவன்’ கதை.

வித வித கெட்டப், வேறு வேறு களம் என நாயகன் கண்ணா ரவிக்கு நடிப்பில் வேட்டையாட கச்சிதமான கதாபாத்திரம். அதை கெட்டியாக பிடித்துக்கொண்டு போலீஸ் கேரக்டரில் திறம்பட பொருந்தியிருக்கிறார். கடமைக்கும் மனித நேயத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் முடிவெடுக்கமுடியாமல் தடுமாறும் காட்சிகளில் சபாஷ்.
முன்னாள் ரவுடியாக வரும் சஞ்சீவும் தனது கதாபாத்திரம் உணர்ந்து அதனை சரியாக செய்திருக்கிறார். கண்ணா ரவியின் மனைவியாக வரும் ஷ்ரவனிதா ஸ்ரீகாந்த், சஞ்சீவின் மனைவியாக வரும் வினுஷா தேவி கட்டப்பஞ்சாயத்து வக்க்கீலாக சஞ்சீவ் வெங்கட், மீனவ குப்பத்து தாதாவின் மனைவியாக ரேகா நாயர் என அனைத்து கேரக்டர்களும் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது.

சீனிவாசன் தேவராஜின் ஒளிப்பதிவு, விபின் பாஸ்கரின் இசை, சூரஜ் கவியின் எடிட்டிங் உள்ளிட்ட தொழில் நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்புக்கு பாராட்டுகள்!
கதைக்குள் கதை என்ற ஃபார்முலாவெல்லாம் கத்தி மேல் நடப்பது போன்று ரிஸ்க். அதை இலகுவாக செய்திருக்கிறார் இயக்குநர் பவன் குமார். இவரது திரைக்கதை நேர்த்தியே படத்தை அடுத்து என்ன அடுத்து என்ன? என ஆர்வத்தை தூண்டுகிறது. இதுவே ‘வேடுவன்’ வெற்றியை தீர்மானிக்கிறது!

