‘டீசல்’ திரைப்பட விமர்சனம்!
வடசென்னை கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட கச்சா எண்ணெய் குழாய்களில் துளையிட்டு கச்சா எண்ணெய்யைத் திருடி டீசல் மாஃபியாவை உருவாக்குகிறார் சாய்குமார். அதன் வருமானத்தைப் பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்திற்குப் பகிர்ந்தளிக்கிறார். சாய்குமாரின் வளர்ப்பு மகனாக ஹரிஷ் கல்யாண் ஒரு கெமிக்கல் இன்ஜினியர். அப்பாவின் மாஃபியாவை தொழிலைத் தொடரும் ஹரிஷ் கல்யாண், விவேக் பிரசன்னா, வினய் ராயின் தொழில் போட்டியை சந்திக்கிறார். இவர்களுக்குள் ஏற்படும் மோதலில் ஜெயம் யாருக்கு என்பதே ‘டீசல்’ கதை.
ஆக்ஷன் ஹீரோ அவதாரத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு இந்த கதை, களம், கதாபாத்திரம் முற்றிலும் புதிது. முயன்றிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் சிரத்தை, உணர்ச்சிகரமான காட்சிகளில் நல்லதொரு ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ், நடனத்தில் வெளிப்படும் லாகவம் என பிரித்து மேய்ந்திருக்கிறார்.
வளர்ப்புத் தந்தையாக வரும் சாய் குமார், எமோஷனல் காட்சிகளில் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். வஞ்சம், வன்மம் கொண்ட வில்லனாக வரும் விவேக் பிரசன்னாவின் நடிப்பில் குறையேதுமில்லை. மூர்க்கமான அதிகாரியாக வரும் வினய் ராயின் வில்லத்தனம் ஒரு சில இடங்களில் மட்டுமே வேலை செய்கிறது.

நாயகிகளாக அதுல்யா ரவி, அனன்யா ஆகியோருக்கு டெம்பிளேட் கதாபாத்திரங்கள் மட்டுமே. அதிலும் அதுல்யா கதாபாத்திரம் கடல் கன்னியைத் தேடி கடலுக்குள் செல்லும் வைக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் குபீர் ரகம்! அதே போல ரமேஷ் திலக்கின் ‘விக்’கும் துருத்திக்கொண்டே இருக்கிறது. கருணாஸ், போஸ் வெங்கட், காளி வெங்கட் என எக்கச்சக்க துணை கதாபாத்திரங்கள் இருந்தும் கதையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
திபு நினன் தாமஸின் இசையில் ‘எம்மாடி…எம்மாடி…’ பாடல் வைப் மெட்டிரியல். பின்னணி இசையும் படத்திற்குப் பலம் சேர்க்க முயல்கிறது. எம்.எஸ். பிரபு, ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவு கூட்டணி கடலின் பிரமாண்ட காட்சிகளை யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறது. காட்சி கோர்வையைப் பொறுத்தவரையில் சான் லோகேஷின் படத்தொகுப்பு நன்றாக இருந்தாலும், நேர்த்தியாகக் கதைசொல்லும் விதத்தில் கத்தரிக்க வேண்டிய காட்சிகள் ஏராளம்.
முதலாளித்துவத்தின் சுரண்டல், பூர்வகுடி மீனவர்கள் வெளியேற்றம், நில அபகரிப்பு, குற்றவாளிகள் உருவாக்கப்படும் விதம் எனக் காத்திரமான அரசியலோடு ‘கச்சா எண்ணெய் மாஃபியா’ உலகம் பெரும் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.
அருமையான கதை தேர்வு. ஆனால் திரைக்கதையில் கோட்டை விட்டது படத்தின் பெரிய மைனஸ். சொல்லப்போனால் ‘கத்தி’ போல வென்றிருக்கவேண்டிய கான்செப்ட். ஆனால் சொல்லும் விதத்தில் சொதப்பியதால் இந்த ‘டீசல்’ வேகமெடுக்கவில்லை!

