தொய்வில்லாமல் தொடரும் விறுவிறுப்பு : ‘அதர்ஸ்’ திரை விமர்சனம்!
நள்ளிரவில் நடுங்கவைக்கும் ஒரு சாலை விபத்து. அதில் பார்வையற்ற மூன்று பெண்களும் ஒரு ஆணும் அநியாயமாக தீயில் கருகி பலியாகின்றனர். இந்த விபத்தை விசாரிக்க களமிறங்குகிறார் போலீஸ் அதிகாரியான (நாயகன்} ஆதித்யா மாதவன். குற்றவாளி தேடுதல் வேட்டையில் சிக்குவதெல்லாம் ஏமாற்றமே?
குற்றவாளி யார்? பிடிபட்டானா இல்லையா? என்று ஒரு பக்க திரைக்கதை விறுவிறுப்பை கொடுக்க இன்னொரு பக்கம் வேறொரு அத்தியாயமாக விரிகிறது ஒரு கிளைக் கதை. அது… மருத்துவமனை ஒன்றில் செயற்கை கருத்தரிப்பு நடக்கிறது? இந்த சட்ட விரோத செயலை கண்டுபிடிக்கிறார் மருத்துவரான கெளரி கிஷன். இந்த இரண்டு சம்பவங்களையும் சம்பந்தபடுத்தினால் சுடச்சுட‘அதர்ஸ்’ ரெடி.

காவல் அதுகாரியாக மிடுக்கும் துடுக்குமாக ஆதித்யா மாஅதவன் அட்டகாசமாக பொருந்தி இருக்கிறார். கேரக்டரை உள்வாங்கி ரியாக்ட் பண்ணும் நடிப்பு லாவகம் நன்றாகவே வருகிறது. இன்னொரு போலீஸ் அதிகாரியாக வரும் அஞ்சு குரியனும் அட்டகாசம்.
கொடுமை கண்டு பொங்கும் மருத்துவராக கெளரி கிஷன் வழக்கம்போலவே பிரமாதமாக நடித்துள்ளார். எதிர்மறை கதாபாத்திரத்தில் நண்டு ஜெகன் நச்சென்று பொருந்தியுள்ளார். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பது போல இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனுக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதனை சிறப்பாக செய்துள்ளார்.

க்ரைம் கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவில் கவனிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங்! குறிப்பாக சேஸிங் மற்றும் க்ளைமாக்ஸ் காட்சி அட்டகாசம்! ஜிப்ரானின் பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலமாய் அமைந்திருக்கிறது!
படத்தின் இயக்குநர் அபின் ஹரிஹரன். கதைக்கு பொருத்தமான தலைப்பில் தொடங்கி திரைமொழி நேர்த்தி. ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை தொய்வில்லாமல் தொடரும் விறுவிறுப்பு என ‘அதர்ஸை’ ரசிக்கவைக்கிறார்.

