இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொள்ளும் கீர்த்தியின் குடும்பம்…‘ரிவால்வர் ரீட்டா’ விமர்சனம்!
டிராகுலா பாண்டியன். பேர கேட்டாலே சும்மா உதறுதில்ல.. பெயருக்கு ஏத்தது மாதிரி பாண்டிச்சேரி ஏரியாவில் பெரிய தாதா அவர் (சூப்பர் சுப்பராயன்). பேக்கரி ஒன்றில் வேலை செய்யும் போல்டான கேரக்டர் கீர்த்தி சுரேஷ். இவரது அம்மா ராதிகா சரத்குமார். பெண்கள் விஷயத்தில் வீக்கான சூப்பர் சுப்பராயன் விலை மாது வீட்டுக்கு போவதற்கு பதிலாக அட்ரஸ் மாறி கீர்த்தி சுரேஷின் வீட்டுக்குள் நுழைகிறார். அதிர்ச்சி ஆகும் கீர்த்தியும் ராதிகாவும் அவரை விரட்டுகின்றனர்.
போதை தலைக்கேறிய சூப்பர் சுப்பராயனோ அதை கேட்பதாயில்லை. சின்ன கைகலப்பில் சூப்பர் சுப்பராயனின் கதை முடிகிறது. பிணத்தை மறைப்பதற்காக கீர்த்தியின் குடும்பம் பிளான் போடுகிறது. அதே சமயம் சூப்பர் சுப்பராயனின் மகன் சுனில் காணாமல் போன தந்தைய தேடுகிறார். இன்னொரு பக்கம் சூப்பர் சுப்பராயனின் தலையை ஒப்படைத்தால் 5 கோடி தருவதாக சொல்கிறான் ஆந்திரா தாதா. அதற்கு ஆசைப்பட்ட கும்பல் சூப்பரின் பிணத்தை கைப்பற்ற துரத்துகிறது.
இன்னொரு பக்கம் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய், கீர்த்தியின் குடும்பத்திற்கு குடைச்சல் கொடுக்கிறார். இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொள்ளும் கீர்த்தியின் குடும்பம் அதிலிருந்து தப்பித்ததா இல்லையா என்பதே ‘ரிவால்வர் ரீட்டா’.

இன்னொரு டார்க் காமெடி ஜானராக வந்திருக்கும் படம். சுறுசுறு விறுவிறு என போயிருக்கவேண்டிய திரைக்கதை, நத்தை வேகத்தில் நகர்வதால் ஆங்காங்கே ஏற்படுகிறது அயர்ச்சி!
வழக்கம்போலவே அடித்து ஆடியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கிடைத்த கேப்பில் கிடா வெட்டினாலும் கதை தொய்வின் தடுமாற்றத்தில் ஆங்காங்கே அலுப்பும் ஏற்படுகிறது.
கொடுத்த ஆறு குண்டுகளையும் இலக்கை நோக்கி அடித்தது போல செல்லம்மாவாக ராதிகா சரத்குமார் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ‘சுடுங்க மாப்பிள்ளை’ என்று கத்தும் காட்சியில் தியேட்டரும் சேர்ந்தே சிரிப்பலைகளில் ஆர்ப்பரிக்கிறது.
சுனில் வருகின்ற காட்சிகளில் எல்லாம் ‘மாஸ்’ பிஜியம்மையும் சேர்த்தே கொண்டுவந்தாலும், டிராகுலா பாபியாக நடிப்பில் அவர் கக்கிய நெருப்பு, இந்த ஜானருக்கான அடுப்பைப் பற்றவைக்கவில்லை.
வித்தியாசமான வாய்ஸ் மாடுலேஷனில் ஜான் விஜய், அதே இரைச்சலான மாடுலேஷனில் ரெடின் கிங்ஸ்லி என இருவருமே நம் பொறுமையைச் சோதிக்கிறார்கள்.
அதீத மிகை நடிப்பு, சிரிப்புக்கு உதவும் எனக் கத்திக்கொண்டே இடம்மாறிச் செல்லும் அஜய் கோஷ், இறுதிக் காட்சியில் சரியான இடத்திற்கு வந்து சேர்வது போலச் சிரிப்பையும் அப்போதே கொண்டு சேர்கிறார்.

இவர்கள் தவிர சென்ட்ராயன், அகஸ்டின் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் ஸ்கோர் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள்.
காட்சிக் கோணங்களிலும், ஒளியுணர்விலும் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.பி. ஆனால், மாஸ் மற்றும் சேஸ் காட்சிகளில் இன்னுமே மெனக்கெட்டிருக்கலாம். உதாரணமாக க்ளைமாக்ஸில் நாற்காலி போட்டு கீர்த்தி உட்காரும் காட்சியைச் சொல்லலாம்.
பன்முனை கதைசொல்லலைக் குழப்பாமல் கொடுக்க முயன்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல். இடைவேளை நெருங்கும் பகுதியில் ஏற்கெனவே புரிந்த விஷயங்களை மீண்டும் மீண்டும் வசனத்தில் மனப்பாடம் செய்ய வைக்கும் முயற்சியைக் கத்தரி போட்டிருக்கலாம்.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் மனதில் நிற்காவிட்டாலும், பின்னணி இசை கதையைத் தொந்தரவு செய்யவில்லை. டிராகுலா பாண்டியன் வீடு, ரீட்டா வீடு ஆகிய இடங்களில் கலை இயக்குநர் MKTயின் உழைப்பு தெரிகிறது.
ஒரு எதிர்பார்க்கும் கொலை, எதிர்பாராத நிகழ்வு ஆகியவற்றை வைத்து டார்க் காமெடி ஸ்டைலோடு என்ட்ரி கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜே.கே சந்துரு.
சிரிப்புக்கு கேரண்டி தரும் என்று நினைத்து எழுதிய திரைக்கதையை சீரியஸ் ஏரியாவில் மடை மாற்றியிருந்தால் ‘ரிவால்வர் ரீட்டா’ சூப்பர் வெற்றியை சுவைத்திருக்கும்.

