தலைப்பு வைப்பதில் தடுமாறும் தமிழ் சினிமா : வைரமுத்து ஆதங்கம்!
“தமிழ்த் திரைப்படங்களின் அண்மைத் தலைப்புகள் கண்களைக் காயப்படுத்துகின்றன.” என்று கவிப்பேரரசு வைரமுத்து ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான ‘ஆநிரை’ படத்தின் இயக்குநர் இ.வி.கணேஷ்பாபுவை அழைத்து பாராட்டிய வைரமுத்து, இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“கோவாவில் நிகழ்ந்த இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் நம் தமிழ்த்தம்பி ஒருவன் தகுதி பெற்றிருக்கிறான் தம்பி கணேஷ்பாபு இயக்கிய ஒரு குறும்படமும் திரையீட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது இல்லம் வந்தார்; சான்றிதழைக் காட்டி வாழ்த்துப் பெற்றார். படத்தின் ஒளிப்பதிவாளர் நெல்லைத் தமிழன் செல்லத்துரையும் உடன் வந்தார் தம்பிமார்கள் இருவரையும் தழுவி வாழ்த்தினேன்.
கணேஷ்பாபுவை நான் பெரிதும் பாராட்டியது தகுதித்தேர்வுக்காக அல்ல; தமிழில் அவர் வைத்த தலைப்புக்காக சங்க இலக்கியத்தின் தெறித்த சொல்லெடுத்துத் தனித்த தலைப்பாக இட்டிருக்கிறார். ‘ஆநிரை’ படத் தலைப்பு சார்ந்து என் கருத்து வருத்தம் இரண்டையும் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். தமிழ்த் திரைப்படங்களின் அண்மைத் தலைப்புகள் கண்களைக் காயப்படுத்துகின்றன. ஒரு தலைப்பு என்பது கதையின் மையத்தை நோக்கி ரசிகனை அழைத்துச் செல்லவேண்டும்; அவனையும் ஒரு கதாசிரியன் ஆக்கவேண்டும் தெரியாத சொல், தெளிவற்ற லிபி ஆங்கில மொழி அல்லது அந்நிய விளி என்று தலைப்பு வைத்தால்தான் இந்தியா முழுக்க வியாபாரம் ஆகும் என்ற மூடக்கணக்கு நிலவுகிறது.
அப்படித் தலைப்பு வைக்கப்பட்ட படங்களெல்லாம் அகண்ட பாரதத்தைத் தொட்டுவிடவில்லை; சிலபடங்கள் உள்ளூரைத் தாண்டவில்லை. படத்தின் ஓட்டம் தலைப்பில் இல்லை. அந்தந்த மொழிப்படங்களுக்குத் தாய்மொழியிலேயே தலைப்பிடுவதே தகும்; அவசியப் பட்டால் மட்டும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டலாம். ஆங்கிலப் படங்கள் எல்லாம் தமிழ்ப் பெயர்களோடு வெளிவரும்போது தமிழ்ப்படங்கள் ஆங்கிலப் பெயர்களோடு வெளிவருவது காலக் கூத்து.
தாய்மொழியில் பெயர்வைத்தால் சந்தை மதிப்பு சரிந்துவிடாது. ‘ஆநிரை’ என்ற தமிழ்த் தலைப்பு சர்வதேசப் படவிழாவில் மரியாதை பெற்றிருக்கிறதே! ஆகவே கலை அன்பர்களே அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள். 1970களில் இந்திப் படங்களையெல்லாம் நாம் இந்தித் தலைப்பில்தானே உச்சரித்தோம்? மற்ற மொழிக்காரர்கள் தமிழ்ப்படங்களின் தலைப்புகளைத் தமிழிலேயே உச்சரிக்கட்டுமே! சிந்திக்க வேண்டும்.”

