தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் செம ட்விஸ்ட்!
சினிமாவை காட்டிலும் திடீர் திருப்பங்களை கொண்டதாக சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்.
2026 – 2029 க்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஓர் அணியும் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடப் போவதாக தகவல் பரவிய நிலையில் ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டது. அதாவது லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் தயாரிப்பாளருமான ஜி கே எம் தமிழ்குமரன் தலைமையிலான “தயாரிப்பாளர் நலன் காக்கும் அணி”யில் ராதாகிருஷ்ணனும் சுபாஷ் சந்திர போஸும் இணைய எதிரணியினருக்கு ஏற்பட்டது அதிர்ச்சி.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட படங்களின் தயாரிப்பாளர் கலைப்புலி தானு, திரைப்பட தொழிலாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் தயாரிப்பாளர் நலன் காக்கும் அணிக்கு தங்கள் ஆதரவை தர, தமிழ்குமரன் தலைமையிலான அணியின் வெற்றி பிரகாசமாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. தற்போதைய தலைவர் முரளி, “ராம நாராயணன் அணி” சார்பில் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். தவிர கதிரேசன், மன்னன் ஆகியோர் தனியாக தலைவர் பதவிக்கு போட்டியிட நான்குமுனை போட்டியை சந்தித்துள்ளது தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.
1524 தயாரிப்பாளர்கள் வாக்களிக்கும் தேர்தல், பிப்ரவரி 22 ஆம் தேதி அண்ணா நகரில் உள்ள கந்தசாமி கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் நலன் காக்கும் அணியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
அரசியல் கட்சி கூட்டத்திற்கு நிகராக நடந்த அந்த நிகழ்வில் கலைப்புலி தானு, ஆர்.கே.செல்வமணி, தமிழ்குமரன், லிங்குசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு ஜி.கே.எம்.தமிழ்குமரன் போட்டியிடுகிறார். துணைத்தலைவர்கள் பதவிக்கு ஆர்.கே.சுரேஷ் மற்றும் திரு.எஸ்.கமலக்கண்ணன் போட்டியிடுகிறார்கள். செயலாளர்கள் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் கமீலா நாசர் போட்டியிட, பொருளாளர் பதவிக்கு என்.சுபாஷ் சந்திரபோஸ் போட்டியிடுகிறார். இணைச் செயலாளர் பதவிக்கு சுஜாதா விஜயக்குமார் போட்டியிடுகிறார்.
மூத்த தயாரிப்பாளர்களான அழகன் தமிழ்மணி, சித்ரா லட்சுமணன், எச்.முரளி, எம்.கபார், ஆர்.மாதேஷ் ஆகியோருடன் சேர்ந்து சாலை சகாதேவன், பைஜா டாம், எஸ்.ஜோதி, வி.பழனிவேல், கே.செந்தாமரை கண்ணன், நீல்கிரிஸ் ஏ.முருகன், ஜி.எம்.டேவிட்ராஜ், டி.என்.தாய்சரவணன், கே.முருகன், .வி.ஞானவேல், பிரவின்காந்த், வி.என்.ரஞ்சித் குமார், எஸ்.ஜெயசீலன், ராஜா @ பக்ருதீன் அலி அகமத், எம்.தனசண்முகமணி, பி.ஜி.பாலாஜி, இசக்கிராஜா, பி.மகேந்திரன், எஸ்.பிரப்தீஸ் சாம்ஸ், ஏ.ஏழுமலை, எஸ்.என்.ராஜராஜன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்களை கலைபுலி எஸ்.தாணு அவர்கள் அறிமுகப்படுத்தினார். சிறப்பு விருந்தினர்கள் வேட்பாளர்களை வாழ்த்தி பேசினார்கள்.
ஜி.கே.எம்.தமிழ்குமரன் மற்றும் ஆர்.ராதாகிருஷ்ணன் தங்கள் அணி வெற்றி பெற்று நிர்வாகம் அமைந்தால் சங்க உறுப்பினர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பேசினார்கள். இக் கூட்டத்திற்கு பெருவாரியான உறுப்பினர்கள் கலந்து கொண்டு தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணிக்கு ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

