திரை விமர்சனம்

‘சிறை’ திரை விமர்சனம்!

கதை என்ன?..

கொலை வழக்கில்  வேலூர் சிறையில் இருக்கும் ஒரு கைதி. விசாரணைக்காக அவனை சிவகங்கை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் பணியில் இருக்கும் ஒரு காவலர். போகும் வழியில் சந்திக்கும் ஒரு பிரச்சனையில் துப்பாக்கியுடன் தப்பி ஓடுகிறான் கைதி. அவனை துரத்திப் பிடித்து எப்படியாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பதட்டம் காவல் குழுவினருக்கு. அந்த கைதி ஏன் ஓடினான்? அவனது பிரச்சனை என்ன என்பதை விவரிக்கும் பின்னணி? ஓடியவன் பிடிபட்டானா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பை கிளப்பும் கேள்விகளுக்கு விடை கேட்டால் கிடைக்கிறது ‘சிறை’யின் கதை.

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கிடைத்த சின்ன புள்ளிதான் படத்தின் மையம். அது பிண்ணப்பட்ட விதத்தில் வலுவான திரைக்கதை, பலமான காட்சி அமைப்புகளால் இரண்டு மணி நேரம் கவனம் கலையாமல் ‘சிறை’யில் அடைப்பட்டு போகிறது பார்வையாளர்களின் கண்கள்.

விக்ரம் பிரபு

கதையின் நாயகன் கைதிதான் என்றாலும் மனித நேயம் – மனசாட்சி – நேர்மை –  துணிவுமிக்க காவலரின் கதாபாத்திரம்தான் கதாநாயகன். அந்த கேரக்டரில் தன்னை மிக இயல்பாக பொருத்திக்கொண்டு ரசிக மனங்களை தன் நடிப்பால் சிறை பிடித்திருக்கிறார் விக்ரம் பிரபு.

கைதியின் ஒற்றை செயலால் அவன் நல்லவனாக இருக்க வாய்ப்பிருப்பதாக எண்ணி அவன்  பிரச்சனைக்கு செவி கொடுப்பது, அவனை பற்றிய உண்மை தெரிந்ததும் அவன் மீது காட்டும் கருணை,  அன்பு, அவன் காதலியுடன் வாழ்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிகொடுக்கும் துளி நேயம் என காவலர் கதிரவனாக வாழ்ந்திருக்கும் விக்ரம் பிரபுவுக்கு வாழ்த்துகள்!

 

அக்‌ஷய் குமார்

கைதி அப்துல் ராவூஃப் கதாபாத்திரத்தில்  அறிமுகமாகியிருக்கிறார் அக்‌ஷய் குமார். பத்து படம் நடித்த அனுபவ முதிர்ச்சி முதல் படத்திலேயே தெரிவது அவரது திறமைக்கு சான்று. தனக்கு கிடைக்கவேண்டிய  நீதியும், விடுதலையும் தாமதமாகிக்கொண்டே போனாலும் என்றாவது ஒருநாள் காதலியுடன் சேர்வேன் என்று கண்களின் நம்பிக்கையை தேக்கிவைப்பதும், இழப்புகளை சந்திக்கும்போதெல்லாம் இடிந்துபோவதுமென அக்‌ஷயின் பக்குவ நடிப்புக்கு பாராட்டுகள்!

அனிஷ்மா அனில்குமார்

அக்‌ஷய் குமாரின் காதலி கதாப்பாத்திரத்தில் அனிஷ்மா அனில்குமார் அருமையான தேர்வு. கோபம், காதல், ஆற்றாமை, ஏமாற்றம்  என எல்லா உணர்வுகளையும் உண்மைக்கு நெருக்கமாக கடத்தும் உடல்மொழி அனிஷ்மாவுக்கு கிடைத்த வரம். 5 வருடங்களாக சிறையில் இருக்கும் காதலன் அக்‌ஷய் மீதான உடம்புப்பிடி காதல் குறிஞ்சிப்பூ காட்சிகள்!

அனிஷ்மாவின் அக்காவாக வரும் இஸ்மத் பானுவும் அவரது கொடுமைக்கார கணவராக வருபவர், விக்ரம் பிரபுவின் மனைவியாக வரும் ஆனந்த தம்பிராஜா, அக்‌ஷயின் அம்மாவாக வரும் ரெம்யா சுரேஷ் என மற்ற கதாபாத்திரங்களும் அட்டகாச தேர்வு. ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் மூணாறு ரமேஷ் அசத்தல். “நானும் முஸ்லீம்தாண்டா.. என்னை சுடுவியா?.. தமிழினத்துக்காக முதன் முதலில் தன் உயிரை மாய்த்துக்கொண்டானே அவன் பேரும் அப்துல் ராவூஃப்தான்” என்று வசனம் பேசும் இடத்தில் செம கிளாப்ஸ்!

காவலர்களின் பொறுப்புணர்வு, குற்றவாளிகளிடத்தில் அவர்கள் காட்டவேண்டிய கணிவு, இஸ்லாமியர்களுக்கு இந்த சமூகம் கொடுத்திருக்கும் தவறான அடையாளம் என படத்தில் வசனம் மூலமாகவும் காட்சி வழியாகவும் அலசும்  செய்திகள் படத்தின் பெரும் பலம்.

ஒளிப்பதிவு – இசை

90களின் இறுதியிலும் 2000த்தின் முற்பகுதியிலும் நடப்பதுபோன்ற கதைக்கு பொருத்தமான ஒளிப்பதிவு கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், உணர்வுபூர்வமான பின்னணி இசை கொடுத்திருக்கும் ஜஸ்டின் பிரபாகரன், தமிழ், சுரேஷ் ராஜகுமாரியின் கட்டுக்கோப்பான திரைக்கதை,  விறுவிறுப்பையும், ரசனையையும் தொகுத்திருக்கும் பிலோமின் ராஜின் எடிட்டிங். 25 வருடங்களுக்கு முந்தைய காலக்கட்டத்தை கண்முன் நிறுத்தும் கலை வடிவமைப்பு என தொழில் நுட்ப கலைஞர்கள் அத்தனை பேரின் உழைப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

தான் வெற்றிமாறனின் சிஷ்யன் என்பதை பிசிறு தட்டாமல் நிருபித்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி. தமிழின் அடிப்படை கதையை தனது நேர்த்தியான இயக்கத்தால் தூக்கி நிறுத்தி  ‘சிறை’யை திறம்பட செதுக்கியிருப்பதற்கு வாழ்த்தும் பாராட்டும்!

‘சிறை’ சூப்பர் சக்சஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE