“ஒளி என்பது எனது தாய்..” TMJA பொங்கல் விழாவில் பி.சி.ஸ்ரீராம் நெகிழ்ச்சி!
இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த ஆளுமை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். ஃபிலிம் (படச்சுருள்), டிஜிட்டல் என சினிமாவில் தொழில் நுட்பம் மாறிக்கொண்டே இருந்தாலும் பிசியின் ஒளிப்பதிவு மட்டும் எப்போதும் மாறாத இளமை ரகம். எந்த நிகழ்வில் பங்கெடுத்தாலும் ஒற்றை வரியோடு தனது ‘சிறப்புரை’யை முடித்துக்கொள்ளும் பழக்கம் கொண்ட பி.சி.ஸ்ரீராம் பக்கம் பக்கமாக பேசினால் ஆச்சர்யம்தானே.. தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர் சங்க நிகழ்வில் அந்த ஆச்சர்யம் நிகழ்ந்தது.
தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் 2026ஆம் ஆண்டு பொங்கல் விழா, சென்னை வடபழனி, அழகிரி நகரில் உள்ள பிஎம்ஆர் திருமண மண்டபத்தில் நடந்தது.

சங்கத் தலைவர் கவிதா தலைமையில், செயலாளர் கோடங்கி ஆபிரகாம் முன்னிலையில் நடந்த விழாவில் ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம்,
வைட் ஆங்கிள் ரவிசங்கர், ‘சிறை’ படத்தின் நாயகன் எல்.கே.அக்ஷய் குமார் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்போது சங்க உறுப்பினர்கள் பி.சி.ஸ்ரீராமிடம் கேள்விகளை எழுப்பியபோது அதற்கு உற்சாகமாக பதில் அளித்தார்.
அதன் சிறு தொகுப்பு இதோ…
“ஒளிப்பதிவு என்பதே வெளிச்சம் எனும்போது நீங்கள் மட்டும் ஏன் இருளை விரும்புகிறீர்கள் என்கிறீர்கள். இருள் என்பது தனி உலகம். தியேட்டரில் அது திரையாகும்போது படம் பார்ப்பவர்களுக்கு வேறுமாதிரியான அனுபவத்தை தரும். எனவே நான் என்ன நினைக்கிறேனோ அதை செய்கிறேன். அதை போற்றினாலும் போற்றாவிட்டாலும் அதைப்பற்றி நான் சிந்திப்பதில்லை. ஏனெனில் ஒளி என்பது எனது தாய். நல்லா எடுக்கவில்லையென்றால் என் வீட்டில் என்னை தொலைத்துவிடுவார்கள்.
மற்ற படங்கள் மாதிரி இல்லாமல் உன் படங்கள் வேறு மாதிரி இருக்கிறது என்று என்னை ஆரோக்கியப்படுத்திய என் தாய் தந்தைதான் என் கடவுள்! இப்போதுள்ள சினிமாவில் குழப்பங்கள் இருக்கிறது. அது எனக்கு புரிவதில்லை. அது புரியவரும் காலகட்டம் வரும்போது நிச்சயமாக படம் இயக்குவேன். இது என் தமிழ்தாய் மீது ஆணை.
என்னிடம் உதவி ஒளிப்பதிவாளர்களாக இருந்த அனைவரையும் எனக்கு பிடிக்கும் என்றாலும் திரு, ஜீவா, கே.வி.ஆனந்தின் திறமை ஆச்சர்யப்படுத்தியது. அவர்கள் என்னுடன் இல்லையென்றாலும் அவர்களின் வாழ்க்கை எனக்கு பாடமாக இருந்தது. எனது வாழ்க்கை வரலாறு பற்றி பதிவு செய்யச் சொன்னால் செய்யமாட்டேன். ஏனெனில் வாழ்க்கை வரலாறு என்பது பொய். பொய் சொல்வதில் எனக்கு விருப்பமில்லை.
எனது வாழ்க்கை தோல்விகளால் நிரம்பியது. திரைப்பட கல்லூரில் படிக்கும்போது “இதிலாவது பாஸ் பண்ணிடு” என்று அம்மா சொன்னார்கள். ஆனால் அப்போதும் ஃபெயில் ஆகிட்டேன். தோல்விக்கு பழக்கப்பட்டவன் என்பதால் தோல்வி என் தோழன். லைட்டிங் வைத்தால் எந்த நடிகர் அழகாக இருப்பார் என்கிறீர்கள். அழகுக்கு அளவுகோல் இலை. அதனால் எல்லோருமே அழகுதான். அழகுதான் இயற்கையின் படைப்பு. இப்போது ஏஐ தொழி நுட்பம் வந்துவிட்டது. இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை. ஏஐ டெக்னாலஜி நன்றாகதான் இருக்கிறது. ஆனால் இதுவும் கடந்துபோகும்” என்றார்.
அதிகம் பேசாத பி.சி.ஸ்ரீராம், குழந்தையாக மாறி கலகலப்பாக கலந்துரையாடிய தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் பொங்கல் விழா சிறப்பாக நடந்து முடிந்தது.

