‘லாக்டவுன்’ திரை விமர்சனம்!
ஏழை குடும்பத்தை சேர்ந்த அனுபமா பரமேஷ்வரன் படித்துமுடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறார். வேலை விஷயமாக ஒருவரை சந்திக்கப்போகும் இடத்தில் நடக்கும் பார்ட்டியில் கலந்துகொண்டு மது அருந்துகிறார். இது நடந்த சில நாள்களுக்கு பிறகு அனுபமாவின் உடல்நிலையில் மாற்றம் நிகழ்கிறது. மருத்துவ பரிசோதனை செய்பவருக்கு அதிர்ச்சி கொடுக்கிறது ரிர்போர்ட்.
யெஸ்.. அனுபமா வயிற்றில் ஒரு கரு வளர்கிறது. தனக்கு தெரியாமலேயே தான் கற்பழிக்கப்பட்டதை அறிந்து உடைந்துபோகிறார். வீட்டுக்கு தெரிந்தால் பெற்றோர் விபரீத முடிவை எடுக்க நேரிடும் என்ற பயத்தில் கரு கலைப்பு செய்ய முடிவெடுக்கிறார். ஆனால் அந்த நேரம் பார்த்து லாக்டவுன் போடப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலும் சில மனிதர்களும் அனுபமாவுக்கு கொடுக்கும் பிரச்சனைகளே மிச்ச கதை.

அழகு பதுமை அனுபமாவுக்காக இப்படியொரு கதாபாத்திரம் என்று படம் பார்ப்பவர்களை பதற வைக்கும் ஒரு கதாபாத்திரத்தை தேர்வு செய்திருக்கிறார். மொத்த படத்தையும் தூக்கி சுமந்திருக்கிறார். பார்ட்டியில் ஜாலியாக ஆட்டம் போடுபவரை பார்த்து ரசிக்கும் கண்கள், அவர் துயர்படும் காட்சிகளின்போது கலங்குகிறது. அவரது வலியை, வேதனையை, பெற்றவர்களை ஏமாற்றிவிட்டோமே என்ற குற்ற உணர்வை தனது நேர்த்தியான நடிப்பால் கடத்தும் அனுபமா பரமேஷ்வரனுக்கு காத்திருக்கிறது விருதுகள்.
அனுபமாவின் பெற்றோராக வரும் சார்லி, நிரோஷா, சார்லியின் முதலாளியாக வரும் லிவிங்ஸ்டன், அனுபமாவுக்கு உதவும் தோழி என மற்ற கேரக்டருக்கும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட தொழிநுட்ப கலைஞர்களும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

பெண் பிள்ளையாக இருந்தாலும் ஆண் பிள்ளையாக இருந்தாலும் பெற்றோரிடம் உண்மையை மறைக்கக்கூடாது என்ற உளவியலை கருத்தாக சொல்லும் ஒரு கதையை எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயக்குநர் ஏ.ஆர்.ஜீவாவின் முயற்சியை வரவேற்கலாம்.
அதேசமயம் கர்ப்பம், அபாஷன், அழுகை என தொடர்ச்சியான டிராஜடி ஜானர் ஒரு கட்டத்தில் அலுப்பை ஏற்படுத்துகிறது.
இந்த குறைகளை சரி செய்திருந்தால் ‘லாக்டவுன்’ முழுமையாக ரசிக்கவைத்திருக்கும்.

