அடிதடி கதைகளில் நடித்த அர்ஜுன் தாஸா இது?.. ‘கான் சிட்டி’ விமர்சனம்!
தமிழ் சினிமாவில் இன்னொரு கருப்பு காமெடி கதை. ஆனால் அது தரும் அதிர்ச்சியும் விழிப்புணர்வும் புதுவகை திரைக்கதை.
கதை என்ன?
மின்வாரியத்தில் பணிபுரியும் அர்ஜுன் தாஸ், வீடு ஒத்திகைக்கு விடும் அன்னா பென், சினிமா கனவில் போராடும் யோகிபாபு மற்றும் அவரது தாய் வடிவுக்கரசி. இவர்கள் அனைவருக்கும் பொருளாதார நெருக்கடி அழுத்தம் தரும்போது கோடிக்கணக்கில் சங்கிலி தொடர்புடைய வருமானத்தை ஈட்ட திட்டமிடுகின்றனர். அதன்படி கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். இந்த நேரத்தில் சிலரால் இவர்கள் ஏமாற்றப்பட சம்பாதித்த பணத்தையெல்லாம் இழந்து தலைமறைவாக வாழும் நிலை. கனவுகள் அனைத்தும் கருக்கிப்போன நிலையிலிருந்து அவர்கள் மீள்கிறார்களா? இல்லையா?.. என்பது மீதி கதை.

அர்ஜுன் தாஸ்
அடிதடி, வெட்டுக்குத்து கதைகளில் இதுவரை தனது ஆட்டத்தை ஆடி வந்த அர்ஜுன் தாஸுக்கு ‘கான் சிட்டி’ கொடுத்த களமும் கதாபாத்திரமும் something different. அதில் சரியாக பொருத்திக்கொண்டு அடித்து ஆடியிருக்கிறார். அம்மாவின் சொந்த வீடு கனவை நிறைவேற்றிய மனநிறைவு; தவறென்று தெரிந்தும் மின்வாரிய அலுவலகத்தில் பண மோசடி செய்யும்போது ஏற்படும் பதற்றம்; ஒருக்கட்டத்தில் எல்லாம் இழந்து நொந்து போகும் தருணம்; அன்னா பென்னின் மகனை தனது சொந்த மகனாய் நினைத்து காட்டும் அன்பு, பாசம் என அத்தனை உணர்வுகளையும் அற்புதமாய் பிரதிபலித்திருக்கும் அர்ஜுன் தாஸுக்கு பாராட்டுக்கள்!
அன்னா பென்
தன்னம்பிக்கை கொண்ட சிங்கிள் மதராக அன்னா பென் வழக்கம் போலவே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும்; யானை பசிக்கு சோளப் பொறி போன்ற சந்தர்ப்பமே உள்ளதால் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் சிறிது ஏமாற்றமே!
யோகிபாபு
சினிமா கனவில் இருக்கும் யோகிபாபுவின் கதாபாத்திரம் அவ்வப்போது திரைக்கதையின் காமெடி ரிலாக்ஸுக்கு தேவைப்படும் மெட்டீரியல். அம்மா செண்டிமெண்ட் ஏரியாவிலும் டச்சிங் செய்கிறார் மனதை. உருவ கேலி வசனம் பேசுவதை இனியாவது யோகி நிறுத்திக்கொள்வது அவருக்கும் நல்லது; சினிமாவுக்கும் நல்லது.
வடிவுக்கரசி
யோகிபாபுவின் தாயாக வரும் வடிவுக்கரசிக்கு அழுத்தம் குறைவான கேரக்டர் என்றாலும் படத்தின் முக்கியமான கட்டங்களில் அடிக்கும் டைமிங் டயலாக் செம மேட்டர்!
விடிவி கணேஷ்
அர்ஜுன் தாஸின் சக ஊழியராக வரும் விடிவி கணேஷ் வழக்கம்போலவே தனது பாணியில் கவுண்டர் கொடுத்து அவர் வரும் காட்சிகளில் எல்லாம் கலகலப்பு குறையாமல் பார்த்துக்கொள்கிறார்.

தொழில் நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாத் ஒளிப்பதிவில் கான் சிட்டியின் கருப்பு உலகம் தத்ரூபம். அந்த அளவிற்கு சிறப்பான லைட்டிங்கால் கதை களத்துடன் நம்மையும் இணைத்து பயணிக்க வைக்கிறார்.
ஷான் ரோல்டனின் பின்னணி இசை, திரைக்கதையின் விறுவிறுப்பிற்கு உதவியுள்ளது. கான் சிட்டியின் புது உலகத்தை ரசிக்க வைக்கும் ஆர்ட் டைரக்டரின் பணியும் பாராட்டுக்குரியது.
இயக்குநர் ஹரிஸ் துரைராஜ்
டார்க் காமெடி வகையறா என்று எளிதாக கடந்துவிடமுடியாதபடி மின் வாரியத்தில் நடக்கும் முறைகேடு; வீடு ஒத்திகை என்ற பெயரில் நடக்கும் மோடி; ஏமாற்றுப் பேர்வழிகள் என்று வாழ்வில் நடக்கும் தில்லுமுல்லுகளை வலுவான திரைக்கதையாக கொடுத்திருக்கும் இயக்குநரின் துணிச்சலுக்காக அடிக்கலாம் சல்யூட்!

