திரை விமர்சனம்

‘அந்தரன்’ திரை விமர்சனம்!

நாயகி இவானா வருணை காதலிக்கும் நபர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு பெற்றோர்களின் வற்புறுத்தலால் அவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. நிச்சயம் முடிந்த நிலையில் இவானாவின் வருங்கால கணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். அவரை தொடர்ந்து இவானா வருணுக்கு மீண்டும் திருமண ஏற்பாடு நடக்க, அவரும் விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார்.

இந்த தொடர் மரணங்கள் எதேச்சையாக நடப்பவை என்று இவானா குடும்பத்தார் நினைக்கும் போது, காவல்துறையின் விசாரணையில் இவை அனைத்தும் யாரோ திட்டமிட்டு செய்யும் கொலைகள் என தெரிய வருகிறது. இருப்பினும், குற்றவாளி குறித்தோ அல்லது மரணங்களின் மர்மம் குறித்தோ எந்தவிதமான தடயங்களும் கிடைக்காமல் போக, இந்த வழக்கு காவல்துறை அதிகாரியான நாயகன் பிரஜினிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இவானா வருணிடம் இருந்து தனது விசாரணையை தொடங்கும் பிரஜின், நாளடைவில் அவர் மீது காதல் கொண்டு, அவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார். இவானா வருணை திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு ஏற்பட்ட நிலை பிரஜினுக்கும் ஏற்பட்டதா ? அல்லது கொலைகளின் பின்னணியில் இருக்கும் மர்மத்தையும், கொலையாளியையும் அவர் கண்டுபிடித்தாரா ? என்பதை பல திடுக்கிடும் திருப்பங்களோடு சொல்வதே ‘அந்தரன்’.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரஜின், கம்பீரமான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாகவும், காதலராகவும் தனது உணர்வுப்பூர்வமான நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் இவானா வருண், பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை தன்னால் முடிந்தவரை குறையில்லாமல் கையாண்டு கவனம் ஈர்க்கிறார்.

நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் எம்.கே.சாம்பசிவம், அம்மாவாக நடித்திருக்கும் செந்தி குமாரி, அனுபமா குமார், அதிரன், ரமேஷ்பாபு கீதா, பத்மன், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கிஷோர் ராமச்சந்திரன், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லருக்கான பரபரப்புடன் காட்சிகளை படமாக்கினாலும், காதல் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை கலர்புல்லாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

ஹரி.எஸ்.ஆர் இசையமைப்பில் காதல் பாடல்கள் நெஞ்சை வருடும் விதத்தில் அமைந்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்கிறது.

படத்தொகுப்பாளர்கள் இக்னேஷியஸ் அஸ்வின் மற்றுய்ம் சதீஷ் குரோசாவா, காட்சிகளை நேர்த்தியாக தொகுத்து படத்தை தொய்வின்றி நகர்த்தி சென்றிருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கும் சந்தோஷ் ராவணன், தொடர் கொலைகள் என்ற வழக்கமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியிலான கதைக்கருவுக்கு, மிக சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து, யூகிக்க முடியாத திருப்பங்கள் மூலம் படத்தை பரபரப்பாக நகர்த்தி செல்கிறார்.

பார்வையாளர்களுக்கு சில கதாபாத்திரங்கள் மீது சந்தேகம் ஏற்படும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் சந்தோஷ் ராவணன், கிளைமாக்ஸ் நெருங்கும் போது, எதிர்பார்க்காத திருப்பம் மூலம் யூகங்களை உடைத்தெறிந்து வியக்க வைக்கிறார்.

நாயகியின் வீட்டில் இருக்கும் இளைஞர் யார் ? என்பதை விவரிக்காதது லாஜிக் மீறலாக இருந்தாலும், படத்தின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் சந்தோஷ் ராவணன், கிளைமாக்ஸ் வரை அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்புடனும், விறுவிறுப்புடனும் படத்தை நகர்த்தி சென்று, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பட விரும்பிகளை முழுமையாக திருப்திப்படுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில், ‘அந்தரன்’ அமர்க்களமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர்.

நன்றி : சினிமா இன்பாக்ஸ் சுகுமார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE