திரை விமர்சனம்

 ‘கொலைச்சேவல்’ திரை விமர்சனம்!

கலையரசனும் தீபா பாலுவும் கலப்பு மணம் செய்துகொண்ட காதல் தம்பதி. தீபா பாலு நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் ஊர் வழக்கப்படி குலதெய்வ வழிபாட்டுக்குச் செல்கிறது கலையரசன் குடும்பம். கூடவே நண்பர்களும். குலதெய்வத்திற்கு பொங்கல் வைக்கும் வேலைகளுக்கிடையே கலையரசன் – தீபாவுக்கிடையே காதல் பூத்த கதையும் பிளாஷ்பேக்காக மலர்கிறது.

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக போய்க்கொண்டிருக்கும் கதையில் வில்லனாக வருகிறது ஆணவக்கொலை. அதன் பின்னணியும், அதன் பின்னால் இருக்கும் சாதி வெறியும் மிச்ச காட்சிகள். அதிலும் அந்த க்ளைமாக்ஸ்.. குலை நடுங்கும் காட்சி.

எளிய கதையாக ஆரம்பிக்கும் படத்தில் கலையரசன் – தீபா பாலு கதாபாத்திரங்களும் எளிதாக மனதில் ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். ஆனால் ஆணவக்கொலை அறங்கேறும் க்ளைமாக்ஸில் அந்த கரடுமுரடு முள் காட்டில் உடம்பெல்லாம் ரணமாகும் அளவிற்கு கேரக்டருக்காக சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக நாயகி தீபா பாலு உயிரை கொடுத்து நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

நாயகியின் தந்தையாக கஜராஜுக்கு வசனமே இல்லையென்றாலும் சாதிவெறியை கண்களில் தேக்கி வைத்து ஆணவக்கொலையாளியாகவே உருமாறிய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கலையரசனின் நண்பராக பாலசரவணன் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார். கலையரசனின் உறவுகளாக வரும் அத்தனை கதாபாத்திரங்களும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளரும் ஒளிப்பதிவாளரும் மனிதர்களின் இன்னொரு முகத்தை போட்டிப்போட்டுக்கொண்டு தோலுரித்திருக்கிறார்கள்.  ஆங்காங்கே ஒளியாலும் ஒலியாலும் மிரட்டவும் செய்கிறார்கள்.

நாட்டில் நடந்ததை நடப்பதைதான் கதையாக சொல்கிறார் இயக்குநர் துதிவாணன். ஆனாலும் 15 நிமிட ஆணவக்கொலைக்காக இரண்டு மணி நேர திரைக்கதையாக இழுத்திருப்பது நெருடல். பதைக்க வைக்கும் வன்முறை காட்சிகளை பார்க்கக்கூட முடியாத அளவிற்கு அதிதமாக இருக்கிறது. உடன் பிறந்த அக்காவை கொல்ல சாதிவெறியுடன் சிறுவன் கத்தியெடுக்கும் காட்சிகள் நிஜத்தில் நடப்பதுதான் என்றாலும் திரைப்படத்திலாவது அதனை தவிர்க்கலாமே என்ற ஆதங்கம் ஏற்படுகிறது.

‘கொலைச்சேவல்’ திரைப்படத்திலும் தவிக்கவேண்டிய ஒன்றே!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE