திரை விமர்சனம்

 ‘கர’ திரை விமர்சனம்!

1991.. திருவெறும்பூர். அடர் இருள், ஆளில்லா வீடு. பூட்டை உடைத்து உள்ளே செல்கிறார்கள் தனுஷ் மற்றும் ப்ருத்விராஜ். நகை, பணம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி எஸ்கேப் ஆகும் நேரத்தில் வீட்டுக்கு சொந்தக்காரர்கள் வந்துவிடுகிறார்கள் ப்ருதிவிராஜ் தப்பித்துக்கொள்ள; மாட்டிக்கொள்கிறார் தனுஷ். காவல் நிலையத்தில் லாடம் கட்டப்படும் தனுஷை பார்த்துக் கதறுகிறார் காதல் மனைவி மமீதா.

இந்த வழக்கை விசாரிக்க சார்ஜ் எடுத்துக்கொளும் சுராஜ் வெஞ்சாரமூடு, மீடியாவில் பெயர் வாங்க, தனுஷ் மீது செய்யாத குற்றத்தையும் சுமத்த ப்ளான் போடுகிறார். அவ்வளவுதான் வீறுகொண்டு எழும் தனுஷ், சுராஜை தாக்கிவிட்டு மனைவியுடன் ஆந்திராவுக்கு தப்பிக்கிறார்.

அங்கே ஓட்டல் ஒன்றில் வேலை. ஆனாலும் அந்த வருமானம் பத்தாமல் வறுமை வாட்டவே, சொந்தமாக தொழில் செய்ய திட்டமிடுகிறார். அதற்கான முதலீட்டுக்காக ஊரில் இருக்கும் நிலத்தை விற்றுவர இராமநாதபுரம் செல்கிறார். சென்ற இடத்தில் கதை மாறுகிறது; காட்சிகளும் மாறுகிறது. அது என்ன என்பதை தெரிந்துகொள்ள காணுங்கள்  ‘கர’.

கதாபாத்திரமாகவே வாழ்தல் என்பது தனுஷுக்கு புதிதல்ல. இதில் கரசாமியாக வாழ்ந்திருக்கிறார். ஏமாற்றம், இயலாமை, ஆற்றாமை, ஆக்ரோஷம், வெறி, குற்ற உணர்வு என இடத்திற்கு தகுந்தாற்போல தன்னை பொருத்திக்கொள்ளும்போது தனுஷின் ஆகச்சிறந்த நடிப்பை பார்க்க முடிகிறது. பாராட்டுகள் தனுஷ்!

எண்ணி எழு காட்சிகள் இருக்கும் மமிதாவுக்கு. ஆனாலும் அந்த செல்லி கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

பெருமைக்காக கடமையாற்ற நினைக்கும் டிஎஸ்பி கேரக்டரில் சுராஜ் வெஞ்சாரமூடு சிறப்பு. தனுஷை பழிவாங்க துடிப்பதும் தனது பொறியிலிருந்து தனுஷ் தப்பிக்கும்போதெல்லாம் எரிச்சலடைவதுமாக தனது கதாபாத்திரத்தை ஆடியன்ஸுக்கு அட்டகாசமாக கடத்துகிறார். வெல்டன் சுராஜ்.

குறுக்கு புத்தியுள்ள திருட்டு வங்கி மேனேஜராக ஜெயராம் அடித்து ஆடியிருக்கிறார். அவரை பார்த்தாலே எரிச்சல் வருமளவிற்கு ஸ்கோர் செய்திருக்கிறார்.

தனுஷின் தந்தையாக கே.எஸ். ரவிக்குமாரின் கேரக்டரும் கெட்டப்பும் இதற்குமுன் பார்த்திராத ஒன்று. சில இடங்களில் மீட்டருக்கு மேலான மிகை நடிப்பையும் கொடுக்கிறார்.

தனுஷின் தாய் மாமனாக  கருணாஸ் குணச்சித்திர நடிப்பில் ஜொலிக்கிறார். மண்ணை முகர்ந்து பார்த்தே அதன் தன்மை சொல்லும் மூத்த விவசாயியாக எம்.எஸ்.பாஸ்கர். சில காட்சிகளுக்கு பிறகே அவர் எம்.எஸ்.பாஸ்கர் என்று அடையாளம் காணக்கூடிய அளவுக்கு கெட்டப் மாற்றம் பிரமாதம்.

தனுஷின் அம்மாவாக ஸ்ரீஜா ரவி, சக திருடனாக ப்ருத்வி என படத்தில் பிற கேரக்டர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

படத்தின் மிகப்பெரிய பலம் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு. 90களின் காலக்கட்டத்தையும் களத்தின் அசல் வண்ணமும் மாறாமல் திரைக்குள் நம் கண்களை சிறைபிடிக்கும் ஆற்றல், ஈஸ்வரின் ஒளிப்பதில் இருக்கிறது.

ஜி.வி.பிரகஷின் இசையில் இதயத்தில் ஈரம் கசிய வைக்கும் பாடல்களும், காட்சிகளுக்கு கச்சிதம் சேர்க்கும் பின்னணி இசையும் மிரட்டல். பீரியட் கதைக்கு பொருத்தமான கலை வடிவமைப்பை செய்திருக்கும் ஆர்ட் டைரக்டர் மாயபாண்டிக்கு வாழ்த்துகள்!

ஆல்ப்ரெட் பிரகாஷுடன் இணைந்து  திரைக்கதை எழுதியிருக்கும் இயக்குநர் விக்னேஷ் ராஜா, மேக்கிங்கை பொறுத்தவரை இன்னொரு வெற்றிமாறனாக உழைத்திருக்கிறார்.

அடுத்து என்ன நடக்கும் என்ற பதற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு எழுத்தில்  திருப்பத்தையும் வேகத்தையும் பற்றவைத்து திரையிலிருந்து கண்களை விலகாமல் பார்த்துக்கொள்கிறார்.

கடன், வட்டி, ஜப்தி என்ற பெயரில் வங்கிகள் செய்யும் அடாவடிகளை தோலுரிப்பதும், பல காட்சிகள் ஏழை விவசாயிகளுக்கான குரலாக ஒலிப்பதும் பாராட்டுக்குரியது.

எனினும் வங்கிகளில் தனுஷ் கொள்ளையடித்த அடுத்த காட்சிகளிலேயே நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு பண பட்டுவாடா செய்வதும், அவர்களின் நில பத்திரத்தை மீட்பதும் லாஜிக் சறுக்கல். ஒரு கட்டத்தில் கதை டிராக் மாறி திரைக்கதையில் தொய்வு ஏற்படுவதும் படத்தின் குறை.

எனினும் இந்த குறைகளை மன்னித்து கொண்டாடும் படமாகவே வந்திருக்கிறது இந்த ‘கர’.

REMARK  : லாஜிக் சறுக்கல்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE