‘கருப்பு’ திரை விமர்சனம்!
நீதி மறுக்கப்படும்போதும் தாமதிக்கப்படும்போதும் பாதிக்கப்படுபவர்களிடமிருந்து எழும் குரல் அநேகமாக ”கடவுளே உனக்கு கண் இல்லையா…” என்பதாகத்தான் இருக்கும். அப்படி நீதி மறுக்கப்படும் ஒரு சாமானியனின் குரலுக்கு கடவுள் இரங்கி வந்து களமாடினால் என்ன நடக்கும்?.. அதுதான் ’கருப்பு’
கதை என்ன?..
ஒரு வயதான தந்தை தனது மகளின் மருத்துவ சிகிச்சைக்காக கேரளாவிலிருந்து சென்னை வருகிறார். மருத்துவ சிகிச்சைக்காக வீட்டிலிருந்து எடுத்துவரும் 60 பவுன் நகையை விற்று பணமாக்கி சிகிச்சைக்காக கொடுப்பது அவர்களது திட்டம். ஆனால் அந்த நகை வழிப்பறி கொள்ளை போகிறது. காவல் நிலையம், கோர்ட் என்று அந்த அலையும் அந்த முதியவர் ஒருக்கட்டத்தில் கோர்ட் வளாகத்தில் இருக்கும் வேட்டை கருப்பு சாமியிடம் வேண்டுதல் வைக்கிறார். விளைவு… கருப்பன் (சூர்யா) களமிறங்கி இரக்கமற்றவர்களை தண்டிப்பதே கதை.

வேட்டை கருப்பு வேடத்தில் வரும் சூர்யா படம் தொடங்கி 30 நிமிடங்கள் கழித்தே எண்ட்ரி ஆவதால் படத்தில் சூர்யா ஹீரோவா? இல்லை கெஸ்ட் ரோலா? கேள்வி படம் பார்ப்பவர்களிடம் பரவலாகிறது. ஏற்கனவே தான் நடித்த ‘சிங்கம்’, ‘கங்குவா’, ஸ்டைலில் இதிலும் ஆக்ஷன் காட்டுகிறார் சூர்யா. மக்களின் துன்பங்களைக் கண்டு துடிப்பவராக எமோஷனல் எல்லையிலும், அவர்களுக்காக நீதி பெற்றுத்தர ஆக்ஷன் எல்லையிலும் சூர்யா பர்பெக்ட்.
காசுக்காக நீதியுடன் விளையாடும் மோசமான வழக்கறிஞர் கதாபாத்திரம் ஆர்.ஜே.பாலாஜிக்கு சூப்பராக பொருந்தியிருக்கிறது. அவ்வப்போது காமெடி செய்தாலும் அவரது வில்லத்தனமே தூக்கலாக நின்று விளையாடுகிறது.
சூர்யாவின் ருத்ர தாண்டவத்திற்கு உதவும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் த்ரிஷா, கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார். ஷூட்டிங்கெல்லாம் முடிந்தபிறகு த்ரிஷா சம்பந்தப்பட்ட டயலாக்குகளை முன்பின் சேர்த்தார்களோ என்னவோ த்ரிஷாவின் உதட்டசைவுகளுக்கும் உரையாடலும் ஒன்றுக்கொன்று பொருத்தமற்று நிற்கிறது.
ஏமாற்றுபவர்கள் குணம் அறியாமல் அனைத்தையும் அப்பாவித்தனத்துடன் கையாள்பவராக தன் அனுபவத்தைக் காட்டியிருக்கிறார் இந்திரன்ஸ். படத்தின் எமோஷனல் கட்டடத்திற்குத் தூணாகவும் இருந்திருக்கிறது இந்திரன்ஸின் நடிப்பு. இதற்கு அனகா ரவியும் உதவியாக இருந்து, கதாபாத்திரம் கோரும் அழுத்தத்தைத் தாராளமாகத் தந்திருக்கிறார். ஊழல் கரை படிந்த கோட் அணிந்து வரும் நீதிபதியாக நடிகர் நட்டி சுப்பிரமணியம் நம் கோபத்தையும், வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்கிறார். இவர்களைத் தாண்டி ஸ்வாசிகா, ஷிவதா, நமோ நாராயணா, மன்சூர் அலி கான், ஜார்ஜ் மரியம், ஆடுகளம் நரேன், தீபா ஷங்கர், லொள்ளு சபா மாறன் ஆகியோர் அவரவர் பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

தனது டிரேட்மார்க் ஸ்லோ மோஷன் ஷாட்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி வேட்டை கருப்பனின் ஆட்டத்தைப் பிரமாண்டத்தோடு திரைக்குள் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு. வேகத்திற்குத் தடையில்லாமல், விறுவிறுப்புடன் காட்சிகளை வெட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர். கலைவாணன். ஆனால், அளவிற்கு அதிகமாக நீளும் க்ளைமாக்ஸை, கருப்பனின் அரிவாளைக் கடன் வாங்கிச் சீவியிருக்கலாம். ‘காட் மோட்’, ‘ராத்து ராசன்’, ‘கருப்பாகூட வா’, ‘வெரப்பா’ எனப் பாடல்களில் கருப்பனுக்குச் சுருட்டு, கிடாக்கறி அடங்கிய படையலைப் பரிமாறியிருக்கிறார் சாய் அபயங்கர்.
கருப்பன் கடவுள் என்றவுடன் நொடியில் பிரச்னைகளைத் தீர்த்துவிட முடியுமே என்ற கேள்வி எழாமலில்லை. அது தொடர்பாகக் கருப்பன் செய்த சத்தியமும் இரண்டாம் பாதியில் காற்றில் பறந்திருப்பது ஏனோ?! இப்படி லாஜிக் விஷயங்களை லாங் ஜம்ப்பில் தாண்டிச் செல்வது, திகட்டச் செய்யும் க்ளைமாக்ஸ் உள்ளிட்டவை இரண்டாம் பாதியின் சில பிரச்னைகள்.
மொத்தத்தில் கான்செப்ட் ஓகே என்றாலும் காட்சியமைப்புகள் லாஜிக் வளையத்தில் சிக்கியதால் பார்டரில் பாஸ் ஆகிறான் இந்த ‘கருப்பன்’.

