நள்ளிரவில் ஆட்டம் போடும் விஜய் – த்ரிஷா; பேய் முழி முழிக்கும் ஹீரோ.. : ‘டார்க்’ விமர்சனம்!
கண்டிஷன் போடாத ஹவுஸ் ஓனர், பட்ஜெட்டிற்கு தகுந்தாற்போல ஒரு வீடு என தேடி அலைகிறார் நாயகன் அஜய் கார்த்தி. கடைசியாக அவர் தேடிச்சென்ற வீடு பாக்யராஜ் வீடு. நோ கண்டிஷன்; வாடகை வெறும் 3000 மட்டும் என்று பாக்யராஜ் சொல்ல, அஜய் கார்த்திக்கு ஆச்சர்யம். ஆனால் இந்த வீட்டில் ஏற்கனவே குடியிருந்த மூன்று இளைஞர்கள் இறந்துள்ளார்கள். அதனால இந்த வீட்டை பேய் வீடுன்னு சொல்வாங்க என்ற உண்மையை பாக்யராஜ் சொல்ல, அடுத்த நிமிடமே அதிர்ச்சி அடைகிறார் அஜய்.
ஆனாலும் “பேயாவது பிசாசாவது.. அதுக்கெல்லாம் பயப்படுறவன் நான் இல்லை..” என்று அடுத்த நாளே குடிவருகிறார். இப்போதான் ஹீரோ சந்திக்கிறார் ஏழரையை. யெஸ்.. மிட் நைட் ஆனதும் ஆஃப் செய்யப்பட்டிருந்த டிவி தானாகனே ஆன் ஆகி ‘அப்படி போடு போடு..” என்று விஜய்யும் த்ரிஷாவும் ஆட்டம் போடுகிறார்கள். கூடவே ஒரு தோசை கல்லும் ஒரு புத்தகமும் தொந்தரவு தருகிறது. எதுக்கும் அஞ்சாதவன் நான் என்று குடிவந்த ஹீரோவின் நாடி நரம்பெல்லாம் இப்போ பயம் பயம் பயம் என பேய் முழி முழிக்கிறார். ஹீரோவை மிரட்டும் பேய் யார்? அதற்கான பின்னணி என்ன? என்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்த காட்சிகள் விடை சொல்வதே ‘டார்க்’ கதை.

தமிழ் சினிமா பார்க்காத பேய் கதைகளா?.. பேய் கதை பண்றதெல்லாம் பெரிய விஷயமில்லை.. ஆடியன்ஸை அலற வைக்கும் மேக்கிங் இருந்தால் அந்த படம் சக்சஸ். அந்த வகையில் தன் பங்குக்கும் மிரட்டும் படமாக வந்திருக்கிறது ‘டார்க்’.
நாயகனாக நடித்திருக்கும் அஜய் கார்த்தி தனது பங்களிப்பை நேர்த்தியாக செய்திருக்கிறார். நள்ளிரவில் சந்திக்கும் அமானுஷ்ய சம்பவங்களால் மிரண்டு போகும் இடங்களில் தனது அச்ச உணர்வுகளை உடல்மொழியில் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருப்பதே அவரது நடிப்பு திறமைக்குச் சான்று.
செத்தப் பிணமாக படுக்கையில் கிடக்கும் அஜய், திடீரென எழுந்து நின்று டயலாக் பேசும்போது படம் பார்க்கும் ஆடியன்ஸ் உடம்பெல்லாம் ‘ஜில்’லாகிவிடுகிறது.
ஹவுஸ் ஓனராக வரும் பாக்யராஜ், மகளை நினைத்து கவலைப்படும் மனிதராக, ”நீ வந்த நேரம்.. இந்த வீட்டை வாங்கறதுக்கு ஆள் கிடைச்சிட்டாங்க” என அஜய்யை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்துவது என உணர்ச்சிப்பொங்க நடித்துள்ளார். ஆனால் படத்திலும் அவர் இறந்த போவதுபோன்ற காட்சி வரும்போது கண்ணீர் வருகிறது.
பாக்யராஜ் வீட்டில் நடந்த சம்பவங்களை விசாரிக்கும் காவல் அதிகாரியாக நட்டி வழக்கம்போலவே தனது காக்கி சட்டை கதாபாத்திரத்தில் கச்சிதம் காட்டியுள்ளார்.
அஞ்சனா நேத்ரன், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி ஆகியோருக்கு தம்மா துண்டு வேடமே என்றாலும் அதனை சரியாக செய்துள்ளனர்.
பேய் கதைக்கு பில்லர்களாக இருக்கவேண்டிய ஒளிப்பதிவும், பின்னணி இசையும் ‘டார்க்’கின் வெறிக்கும் கை கொடுத்துள்ளது. அதேபோல் கலை இயக்கமும் அருமை.
எந்த இடத்திலும் தொய்வடைந்துவிடாத ஒரு திடுக் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையை கச்சிதமாக எழுதி சீட்டு நுனிக்கு திரும்ப திரும்பக் கொண்டு வரும் காட்சியமைப்புகளுடன் படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் கல்யாண் கே.ஜெகனுக்கு பாராட்டுகள்!
‘டார்க்’ பிரைக்ட்!

