‘டார்க் ஜியண்ட்’ திரை விமர்சனம்!
கடன் பிரச்சனையில் சிக்கி தவ்க்கும் ஹீரோ ஆதர்ஷ் மதிகாந்திற்கு “உனக்கு நல்ல காலம் பொறந்திடுச்சு” என்பதுபோல் ஒரு போன் வருகிறது. “கோயம்புத்தூரில் உன் தாத்தாவுக்கு சொந்தமான சொத்து இருக்கிறது. அவரை வந்து பார்த்தால் உன் பிரச்சனையெல்லாம் பஞ்சா பறந்திடும்” என்ற அந்த குரல் சொல் கேட்டு தனது மனைவி, தங்கையுடன் கோவை புறப்படுகிறார் ஆதர்ஷ். சொத்து வாங்கப் போன இடத்தில் ஆதர்ஷ் குடும்பம் சந்திப்பதெல்லாம் அமானுஷ்யம், அதிர்ச்சி. ஆபத்து. அது என்ன? தப்பிக்கிறதா ஆதர்ஷ் குடும்பம்? என்பதை மிரட்டலான காட்சிகளுடன் சொல்கிறது ‘டார்க் ஜியண்ட்’ கதை.
தொடர்ந்து திகில் மற்றும் வித்தியாசமான அமானுஷ்ய கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஆதர்ஷ் மதிகாந்த், இந்த முறையும் சுவாரஸ்யமான ஒரு திகில் கதையில் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டுள்ளார். அவரது தலைமுடி அலங்கோலமாக இருந்தாலும், கடன் பிரச்சனையில் சிக்கி தவிப்பது, சாத்தான் தன் உடலில் புகுந்த பிறகு தன்நிலை மறந்து நடப்பது, பிறகு தன்நிலை அறிந்து கலங்குவது, என்று பல உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்.
நாயகனின் மனைவியாக நடித்திருக்கும் ஜோவிதா லிவிங்ஸ்டன், குடும்பபாங்கான கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருக்கிறார். பயமும், பதற்றமும் கலந்த நடிப்பால் பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கிறார்.
கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் அருவி மதன் மற்றும் சோனியா அகர்வால், குறைவான காட்சிகள் வந்தாலும் பார்வையாளர்கள் மனதில் நிற்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் நடிகை கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் அமுதவாணன், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ரபிக் பாட்ஷா, சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.பாக்யராஜ் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சங்கீத் மணிகோபால் திகில் காட்சிகளை அச்சமூட்டும் வகையில் காட்சிப்படுத்தி பார்வையாளர்களை நெஞ்சை படபடக்க வைக்கிறார்.
விக்னேஷ் ராஜாவின் பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் பயங்கரத்தை பார்வையாளர்களிடம் கடத்தில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
படத்தொகுப்பாளர் ஜி.ஜெ.திருச்செல்வம், பி.ஆர்.கிரியேஷன் ஸ்டுடியோஸின் வி.எஃப்.எக்ஸ் பணி, கலை இயக்குநர் பணி ஆகியவை படத்தின் தரத்தை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் கே.எஸ்.கிஷான், திகில் கதைக்களத்தை சரியான முறையில் கையாண்டு பார்வையாளர்களை மிரள வைத்திருக்கிறார். ஒரு வீட்டில் நடக்கும் சம்பவங்கள் என்றாலும் அதை அச்சத்துடன் பார்க்க வைத்து பல காட்சிகளில் சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறார்.
கதை சொல்லலில் சில குளறுபடிகளை செய்திருந்தாலும், திகில் காட்சிகளை தொழில்நுட்ப ரீதியாக தரமாக கொடுத்திருக்கும் இயக்குநர் கே.எஸ்.கிஷான், திகில் பட ரசிகர்களை ஓரளவு திருப்திப்படுத்தியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘டார்க் ஜியண்ட்’ தலைப்பு அளவுக்கு இல்லை என்றாலும், சிறிய அளவில் திகிலடைய வைக்கிறது.

