‘இதயம் முரளி ’ திரை விமர்சனம்!
திருமணம் நெருங்கி வரும் நேரத்தில் மனதில் குழப்பத்துடன் இருக்கும் இளைஞன் அதர்வா, தன் மணப்பெண்ணைச் சந்திக்க அவசரமாகச் செல்லும் பயணத்தில், இதற்கு முன் அறிமுகமில்லாத ஃபகத் ஃபாசிலிடம் தன் காதல் கதையைப் பகிர்ந்து கொள்கிறார்.
காதல் கதைகளைச் சொல்லும் வழக்கமான ‘ஃபிளாஷ்பேக்’ பாணியை மீண்டும் பார்க்கிறோம் என்ற எண்ணம் வருவதற்கு முன்பே, இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் அதில் ஒரு சுவாரஸ்யமான திருப்பத்தை கொண்டு வருகிறார்.
1998, 2006, 2011, 2019, 2024 என ஐந்து வெவ்வேறு காலகட்டங்களில் நகரும் கதை, அதர்வாவின் காதல் பயணத்தைப் பதிவு செய்கிறது. அதர்வாவின் சிறுவயது காதல், முதல் காதல் கல்லூரிக் காதல் வருங்கால மனைவி என நான்கு பெண்கள் அவரது வாழ்க்கையில் வந்து செல்கிறார்கள்.
அவர்களிடம் தன் உணர்வுகளை வெளிப்படுத்தத் தயங்கும் அதர்வா, முரளி, உண்மையான காதல் என்றால் என்ன என்பதை உணர்கிறானா? காதலை சொல்லும் தைரியம் அவனுக்கு வருகிறதா? என்பதே படத்தின் கதை.

ஸ்கூல் பையன், இளைஞன் என இரண்டு கெட் அப்பில் மற்றும் நடிப்பில் வெளுத்துவாங்கியிருக்கிறார் அதர்வா. டான்ஸில் முன்பைவிட தேர்ச்சி தெரிகிறது. கயாடுவிடம் காதலை சொல்ல முடியாமல் ரயில்வே ஸ்டேஷனில் தவிக்கிற இடம் செம.
ஹீரோயின்களில் ப்ரீத்தி முகுந்தன் அழகு, அவர் காஸ்ட்யூம், டான்ஸ் இன்னும் அழகு. க்ளைமாக்ஸில் இன்னும் நடிக்க முயற்சி செய்து இருக்கலாம். கயாடு லோகருக்கு படத்தில் அதிக காட்சிகல் இல்லை என்றாலும் ஹோம்லியாக, அழகாக நடித்து இருக்கிறார். தமன் காதலியாக வரும் நிகாரிகா துறுதுறு. டீச்சராக ஜொனிட்டா சில இடங்களில் வந்தாலும் மனதில் நிற்கிறார். இந்தப்படத்தை பொறுத்தவரை நட்டி நடிப்பு அப்படியொன்றும் சிறப்பு இல்லை.
காதல் படங்களுக்கு தேவையான அழகான முகங்கள், காதில் ஒலிக்கும் இசை, கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சிகள், ரசிக்க வைக்கும் உடைகள் என ஒரு இனிமையான காதல் படத்திற்கான அத்தனை அம்சங்களையும் படம் கொண்டிருக்கிறது. தமனின் இசையும் பின்னணி இசையும் படத்தின் உணர்வுகளை உயர்த்தும் முக்கிய பலமாக அமைகிறது. மனோஜ் பரமஹம்சா மற்றும் சி.எச். சாயின் ஒளிப்பதிவு, ஒவ்வொரு காலகட்டத்தையும் அழகாக பதிவு செய்கிறது.
படத்தின் மிகப்பெரிய சுவாரஸ்யம் என்னவென்றால், இது பழைய காதல் படங்களின் வழக்கமான ‘ஒரே காதல், ஒரே வாழ்க்கை’ என்ற பார்வையில் இருந்து சற்று விலகி நிற்கிறது. காதல் தோல்வியடைந்தால் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்ற மனநிலையுடன் நாயகன் இல்லை. ஒரு உறவு முடிந்தால் அடுத்த கட்டத்துக்கு நகரும் இயல்பான மனிதனாக அவர் காட்டப்படுகிறார். 80, 90களின் இளைஞனாக கதாபாத்திரம் இருந்தாலும், காதலை அணுகும் விதத்தில் இன்றைய தலைமுறையின் சிந்தனை பிரதிபலிக்கிறது.

ஆனால் இதுவே படத்தின் பலவீனமாகவும் மாறுகிறது. அதர்வா உண்மையில் யாரை காதலிக்கிறார் என்பதை அறியும் பயணத்தில் பார்வையாளர்களுக்கு பெரிய ஈடுபாடு உருவாகவில்லை. காதல் ஏன் உருவாகிறது என்பதற்கான ஆழமான காரணங்கள் கதாபாத்திரங்களில் போதுமான அளவு பதிவு செய்யப்படவில்லை.
படத்தில் வரும் பெண் கதாபாத்திரங்கள் ஆசிரியர், விண்வெளி வீரர், மருத்துவர் போன்ற வித்தியாசமான பின்னணிகளை கொண்டிருந்தாலும், அவர்களின் தனித்துவமான குணங்கள் இன்னும் வலுவாக எழுதப்பட்டிருக்கலாம். அழகைத் தாண்டி அவர்களின் மன உலகத்தை அறியும் வாய்ப்பு குறைவாக உள்ளது. அதர்வா மற்றும் அவரது நண்பர்களின் கதாபாத்திரங்களிலும் இதே குறை காணப்படுகிறது.
இருப்பினும், நடிகர்களின் பங்களிப்பு இந்த குறைகளை சமநிலைப்படுத்துகிறது. ஃபகத் ஃபாசில், குறுகிய நேரமே வந்தாலும் தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். யூடியூபர் சுதாகர், குறிப்பாக இரண்டாம் பாதியில், சிரிப்பை வரவழைக்கும் சில தருணங்களை வழங்குகிறார்.
ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் சிறிய சுவாரஸ்யங்கள், நகைச்சுவை குறிப்புகள், எதிர்பாராத தருணங்கள் என படம் நம்மை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது. இன்னும் சுருக்கமாகவும், கதாபாத்திரங்களுக்கு அதிக ஆழமும் கொடுத்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றினாலும், பழக்கமான காதல் கதைக்குள் புதிய சுவையை சேர்க்கும் முயற்சியாக இது அமைகிறது.

