திரை விமர்சனம்

 ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ : திரை விமர்சனம்!

மரண தண்டனை பற்றிய விவாதங்கள் உலகம் முழுக்க காலம் காலமாக நிகழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், இயக்குநர் தயாள் பத்மநாபன், தனது பங்கிற்கு முன்வைத்திருக்கும் விவாதங்களே ‘லட்சுமிகந்தன் கொலை வழக்காக’ மலர்ந்திருக்கிறது.

1972. லட்சுமிகாந்தன் என்ற செல்வந்தரை கொலை செய்த குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட நாயகன் வெற்றி, கடலூர் மத்திய சிறைச்சாலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அமர்ந்திருக்கிறான். வெற்றியை சந்திக்கும் சிறை அதிகாரி ரங்கராஜ் பாண்டே, மரண தண்டனை நிறைவேற்றும் நடைமுறையை வாசிக்கிறார்.  அதைத் தொடர்ந்து, நீதி, குற்றவுணர்ச்சி, வறுமை, மற்றும் குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதால் ஏதேனும் சாதிக்க முடியுமா என்பது பற்றிய ஒரு நீண்ட உரையாடல் நிகழ்கிறது.

உரையாடலின் முன்னும் பின்னும் வெற்றி வறுமையிலிருந்து குற்றச்செயல்களுக்குள் எப்படிச் சரிந்தான் என்ற காட்சிகள் வந்துபோகின்றன. வெற்றியின் இறுதி நிமிடங்களில் நடப்பது என்ன என்பதற்கு விடைசொல்கிறது மீதி கதை.

வெற்றி தனது பாத்திரத்தில் போதுமான அளவு நடித்துள்ளார். மேலும் படத்தைத் தாங்கிச் செல்ல தன்னால் முடிந்ததைச் செய்துள்ளார். வழக்கம்போலவே அலட்டல் இல்லாத நடிப்பையும் கண்களால் உள் உணர்வுகளை கடத்துவதையும் அநாயசமாக வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு!

சிறை அதிகாரியாக வரும் ரங்கராஜ் பாண்டேவுக்கு அவர்து ரியல் கேரக்டர் போலவே விவாதங்களை வைக்கும் அல்லது விவாதங்களுக்கு எதிர்வாதம் செய்யும் ஒரு கேரக்டர். சில இடங்களில் மிகை நடிப்பும் தெரிகிறது.  வெற்றியின் காதல் மனைவியாக பிரிகிடா சாகா அழகு. தன்னால்தான் கணவன் கொலையாளியானான் என்ற குற்ற உணர்வில் வெதும்பி அழும் இடங்களில் சோபிக்கிறார்.

வெற்றியின் திருட்டு தொழிலுக்கு குருவாக வரும்  மாறன், அம்மாவாக நடித்திருக்கும் லிஸி ஆண்டனி, தொழிலதிபர் லக்‌ஷ்மிகாந்தனாக நடித்திருக்கும் கவிதா பாரதி, வெற்றியை தூக்கிலிடும் ஹேங்மேனாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, கன்யா பாரதி, அருவி மதன் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்துள்ளனர்.

சிறிய சிறை அறைதான். அதற்குள் முடிந்தவரை சிறப்பான ஒளிப்பதிவை கொடுத்து காட்சிகளை நேர்த்தியாகியிருக்கும் ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர் செல்வத்தின் பணிக்கு பாராட்டுக்கள்!

தர்புகா சிவாவின் இசை, கலை இயக்குநரின் கைவண்ணம், காட்சிகளை முன்னும் பின்னுமாக கோர்த்ததில் குழப்பமில்லாமல் வேலை செய்திருக்கும் எடிட்டர் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

கொலைக்குப் பின்னணியில் உள்ள சூழ்நிலைகளைத் திரைப்படம் வெளிப்படுத்தும்போது, ​​உண்மையிலேயே பயங்கரமான ஒன்றால் வன்முறைக்குத் தள்ளப்பட்ட ஒருவனாக வெற்றியை மீண்டும் சித்தரிப்பதற்காகவே அந்தத் தருணம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத அளவுக்கு மிகவும் சாதாரணமாக வருகிறது.

மரண தண்டனையைப் பற்றிய ஒரு திரைப்படம், அதன் கருப்பொருளை ஒரு நாடகமாக அல்லாமல் ஒரு விவாதப் போட்டியாகக் கையாண்டால், அது பார்வையாளர்களுடன் எளிதில் ஒன்றிப்போக முடியாது. இயக்குநர் தயாள் பத்மநாபனுக்கு மரண தண்டனை குறித்து வலுவான உணர்வுகள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அந்த உணர்வுகளைக் கூறுவதும், அவற்றை நாடகமாக்குவதும் ஒன்றல்ல.

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைமொழி குறைவான விவாத நாடகம்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE