திரை விமர்சனம்

‘ஜி.டி.என்’ விமர்சனம்! : கனவு கண்ட கண்டுபிடிப்பாளனின் கனவுகளைத் துரத்திய அதிகாரத்தின் கதை!

‘ஜி.டி.நாயுடு யார்?’ என்று கேட்டால், பள்ளிப் பாடப்புத்தகத்தின் ஓரிரு பக்கங்களையும், பொது அறிவுக் குறிப்புகளில் வரும் சில வரிகளையும் நினைவுகூர்வோம். ஆனால், அந்தச் சில வரிகளுக்குள் அடங்கிவிடக்கூடிய மனிதரா ஜி.டி.நாயுடு? நிச்சயமாக இல்லை!

கோவையில் பிறந்து, தனது ஆர்வம், அறிவு, விடாமுயற்சி ஆகியவற்றால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கோபால்சாமி துரைசாமி நாயுடுவின் வாழ்க்கையைத் திரையில் பதிவு செய்திருக்கிறது ‘ஜி.டி.என்’.

இது வெறுமனே ஒரு கண்டுபிடிப்பாளரின் வாழ்க்கை வரலாறு அல்ல. ஒரு மனிதன் கனவு காண்கிறான்… அதை நனவாக்கப் போராடுகிறான்… உலகம் அவனைப் பாராட்டுகிறது… ஆனால், அவன் சொந்த நாட்டிலேயே அவனது கனவுகளுக்கு தடைகள் உருவாகின்றன! அந்த முரண்பாடுதான் படத்தின் மையம்.

ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஜி.டி.நாயுடுவின் திறமையை அங்கீகரித்த காலகட்டத்தில், இந்தியாவில் அவருக்கு கிடைத்த அணுகுமுறை என்ன? இந்தக் கேள்வியைத் துணிச்சலுடன் முன்வைக்கிறது படம்.

கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப முயற்சிகள், வெளிநாட்டுப் பயணங்கள் என ஜி.டி.நாயுடுவின் சாதனைப் பாதையைச் சொல்லும் அதே நேரத்தில், அவருடைய முயற்சிகளுக்கு எதிராக உருவான நிர்வாகத் தடைகளையும் கதை பேசுகிறது.

குறிப்பாக, “தவறான வரியைச் செலுத்தி எதிர்கால தலைமுறைக்கு தவறான முன்னுதாரணமாக இருக்க மாட்டேன்” என்ற அவரது கொள்கை, கதாபாத்திரத்தின் பிடிவாதத்தையும் நேர்மையையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்துகிறது.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் மாதவன்! இளம் வயது ஜி.டி.நாயுடுவாகவும், வயது முதிர்ந்த காலகட்டத்தின் ஜி.டி.நாயுடுவாகவும் மாதவன் தோற்றத்திலும் உடல்மொழியிலும் குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் காட்டியிருக்கிறார்.

வெறும் மேக்கப் போட்டு வரலாற்று மனிதரைப் போல நடிப்பதோடு அவர் நின்றுவிடவில்லை. ஜி.டி.நாயுடுவின் தன்னம்பிக்கை, கோபம், பிடிவாதம், அறிவு, தோல்விகளால் ஏற்படும் மன அழுத்தம் என கதாபாத்திரத்தின் பல அடுக்குகளையும் தனது நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில், “ஜி.டி.நாயுடு இப்படித்தான் இருந்திருப்பாரோ?” என்று நம்மையே யோசிக்க வைக்கிறார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் சிவாஜி கணேசன் நினைவுக்கு வருவது போல, இனி ஜி.டி.நாயுடு என்றால் மாதவனின் முகம் நினைவுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை!

ஜி.டி.நாயுடுவுக்குப் பிறகு படத்தில் கவனம் ஈர்க்கும் கதாபாத்திரம் அம்பலவானா கிருஷ்ணன்.வரித்துறை அதிகாரியாக வரும் ஜெயராம், வழக்கமான ஜெயராமை மறக்கச் செய்கிறார். நகைச்சுவை நடிகராக நாம் அதிகம் பார்த்த அவரிடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட நடிப்பு. கோபம், அதிகாரத் தோரணை, நேர்மையின் மீதான பிடிப்பு என அந்தக் கதாபாத்திரத்தை அவர் கையாளும் விதம் ரசிக்க வைக்கிறது. சில இடங்களில் ஜி.டி.நாயுடுவுக்கும் அவருக்கும் நடக்கும் மோதல்கள்தான் படத்தின் உண்மையான ‘கேம்’!

ஜி.டி.நாயுடுவின் நண்பராக வரும் சிதம்பரம் பிள்ளை கதாபாத்திரத்தில் சத்யராஜ் இயல்பாகவே பொருந்துகிறார். அவரது தோற்றமும், அனுபவம் கலந்த நடிப்பும் படத்திற்கு நம்பகத்தன்மையை கூட்டுகின்றன.

துஷாரா விஜயன், பிரியா மணி, அதிதி பாலன், வினய் ராய், கருணாகரன், டீஜே அருணாச்சலம், மோகன் ராமன், தம்பி ராமையா, விஜய் யேசுதாஸ், ஷீலா ராஜ்குமார், பிரிகிடா சாகா, ஷில்பா ஸ்ரீகுமார் உள்ளிட்ட அனைவருமே தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்குள் பொருத்தமாக பயணிக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதனின் கேமரா, படத்தின் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம். ஜி.டி.நாயுடு வாழ்ந்த காலகட்டத்தின் தோற்றத்தை மீண்டும் உருவாக்குவதில் கவனம் செலுத்தியிருக்கிறார். பழைய கால வாகனங்கள், கட்டடங்கள், உடைகள், கருவிகள் என ஒவ்வொரு விஷயமும் அந்தக் காலகட்டத்துக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன. குறிப்பாக ஜெர்மனி பயணம், ஹிட்லரிடம் விருது பெறுவது போன்ற காட்சிகளை கிராபிக்ஸ் மூலம் கையாண்டிருக்கும் விதம் கவனம் ஈர்க்கிறது.

கோவிந்த் வசந்தாவின் இசை படத்தின் காலகட்டத்துக்கு ஏற்ற மனநிலையை உருவாக்குகிறது. பழமையான கருவிகளின் ஒலியையும் நவீன இசை அணுகுமுறையையும் இணைத்திருப்பது சிறப்பு. காட்சியை மூடி மறைக்காமல், காட்சிக்குத் தேவையான இடத்தில் மட்டும் இசை பேசுவது பின்னணி இசையின் பலம். சில நேரங்களில் இசை ஒரு கதாபாத்திரத்தைப் போலவே நம்முடன் பயணிக்கிறது.

தயாரிப்பு வடிவமைப்பாளர் சிரில் குருவில்லா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் சம்சுதீன் ஆகியோரின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது.

பழைய வாகனங்கள் முதல் கதாபாத்திரங்களின் உடைகள் வரை எதையும் ‘சும்மா பழைய மாதிரி’ என்று விட்டுவிடாமல் கவனமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

அதனால்தான் படம் பார்க்கும்போது “இது 2026-ல் எடுக்கப்பட்ட படமா?” என்ற எண்ணம் சில காட்சிகளில் மறைந்து, நாம் அந்தக் காலத்திற்கே சென்று நிற்பது போன்ற உணர்வு வருகிறது.

கிருஷ்ணகுமார் ராம்குமார் மற்றும் ஆர்.மாதவனின் திரைக்கதை, ஜி.டி.நாயுடுவின் நீண்ட வாழ்க்கைப் பயணத்தை எளிமையாகச் சொல்ல முயற்சிக்கிறது.

அவரது கண்டுபிடிப்புகள், தொழில் முயற்சிகள், வெளிநாட்டுப் பயணங்கள், அங்கீகாரங்கள் என பல விஷயங்கள் சுவாரஸ்யமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால், வரித்துறை தொடர்பான சம்பவங்கள் மீண்டும் மீண்டும் வருவது படத்தின் வேகத்தை சில இடங்களில் குறைக்கிறது.

அதேபோல், ஜி.டி.நாயுடுவின் சாதனைகளுக்கு இணையான அளவில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் சில உணர்வுப்பூர்வமான பகுதிகளுக்கு இன்னும் அதிக இடம் கொடுத்திருக்கலாம் என்ற எண்ணமும் வருகிறது.

வாழ்நாள் முழுவதும் தனது கனவுகளுக்காகப் போராடிய ஜி.டி.நாயுடு, இறுதியில் தனது சொத்துக்களைப் பாதுகாக்க எடுக்கும் முடிவு சற்றே நெருடலை ஏற்படுத்துகிறது.

அந்த முடிவு கதாபாத்திரத்தின் முந்தைய பயணத்துடன் ஒப்பிடும்போது சில கேள்விகளை எழுப்புகிறது. ஆனால், அந்தச் சிறிய தடுமாற்றத்தைத் தாண்டி படம் சொல்ல வரும் விஷயம் வலுவானது. வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் உலகத்தில், தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்த ஒருவனின் கதை இது.

ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளை உலகம் கொண்டாடியது. அவரது கனவுகளுக்கு தடைகள் வந்தன.அவரது முயற்சிகள் தடுக்கப்பட்டன.ஆனால், அவரது கனவு மட்டும் அவருக்குள் இறக்கவில்லை. அதுதான் ‘ஜி.டி.என்’ படத்தின் மிகப்பெரிய வெற்றி.

வரலாற்றுப் புத்தகத்தில் சில வரிகளில் முடிந்துவிடும் ஒரு மனிதரை, சுமார் இரண்டு மணி நேர சினிமாவுக்குள் சுவாரஸ்யமான கதாபாத்திரமாக மாற்றியிருப்பதே இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமாரின் முக்கியமான சாதனை.

சில இடங்களில் வேகம் குறைந்தாலும், சில சம்பவங்கள் மீண்டும் மீண்டும் வந்தாலும், மாதவனின் அசத்தலான நடிப்பும், காலகட்டத்தை மீட்டெடுக்கும் காட்சியமைப்பும், ஜி.டி.நாயுடுவின் சாதனைகளுக்குப் பின்னால் இருந்த போராட்டமும் ‘ஜி.டி.என்’ படத்தைப் பார்க்க வைக்கும் முக்கிய காரணங்கள்.

‘ஜி.டி.என்’ – சாதனையை மட்டும் சொல்லாமல், ஒரு சாதனையாளனின் கனவுகளை யார் தடுத்தார்கள் என்ற கேள்வியையும் எழுப்பும் வரலாற்றுப் பயணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE