‘பாரிஸ் கஃபே’ திரை விமர்சனம்!
அரசு மருத்துவர் குரு சோமசுந்தரமும் கட்டிடக்கலை நிபுணரும் சமூக சேவகியுமான அனுமோலும் காதல் தம்பதிகள். ‘இப்படியும் ஒரு ஜோடியா?’ என்று வியக்கும் அளவுக்கு அன்பும் அன்யோன்யமும் கொண்டவர்கள். அந்த ‘பெர்ஃபெக்ட் கப்பிள்’ வாழ்க்கைக்குள் ஒரு புகைப்படம் நுழைந்ததும் எல்லாமே தலைகீழாகிறது! மருத்துவக் கருத்தரங்குக்காக பாரிஸ் செல்லும் குரு சோமசுந்தரம், அங்குள்ள கஃபே ஒன்றில் சென்னை இளம் காதல் ஜோடியின் புகைப்படத்தைப் பார்க்கிறார். மகிழ்ச்சியாக இருக்கும் அந்த ஜோடியைப் பார்த்ததும் அவருக்கு ஏற்படும் அதிர்ச்சி, அடுத்தடுத்து அவர் கேள்விப்படும் தகவல்களால் பதற்றமாக மாறுகிறது. சென்னை திரும்பியதும் மனைவியிடம் அந்தக் காதல் ஜோடி பற்றிய உண்மையைச் சொல்லும் அவர், ‘அவர்கள் உயிரோடு இல்லை’ என்கிற அதிர்ச்சித் தகவலையும் சொல்கிறார்.

இதைக் கேட்ட அனுமோல், பின்னர் பத்திரிகைச் செய்திகளின் மூலம் அந்தக் காதல் ஜோடியின் பின்னணியைத் தெரிந்துகொள்கிறார். அப்போது கணவன் மீது வரும் கோபம், இருவரையும் பிரிக்கும் அளவுக்குச் செல்கிறது. பெற்றோரின் பிரிவை அறிந்த மகள் அர்ச்சனா, காதலர் விஜய் விஷ்வாவுடன் அமெரிக்காவிலிருந்து சென்னை வருகிறார். பெற்றோரை மீண்டும் சேர்க்கும் முயற்சியில் இறங்குகிறார். அந்த முயற்சி என்ன ஆனது? பாரிஸில் குரு பார்த்த அந்த இளம் ஜோடி யார்? அவர்கள் இறந்ததற்கும் குருவுக்கும் என்ன தொடர்பு? எனப் பல கேள்விகளுக்குப் பதில் தேடும் பயணம்தான் ‘பாரிஸ் கஃபே’.
‘ஆணவப் படுகொலை’ என்கிற தீவிரமான சமூகப் பிரச்சனையை மையமாக வைத்துக்கொண்டு, அதை நேரடியாகப் பிரசாரம் செய்யாமல் காதல், குடும்பம், குற்ற உணர்வு எனப் பல உணர்வுகளோடு கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் சரஜ் சீலன். முதல் படத்திலேயே சமூகப் பிரச்னையைத் துணிச்சலாகத் தொட்டிருப்பது கவனிக்க வைக்கிறது.
குரு சோமசுந்தரமும் அனுமோலும் கணவன்–மனைவியாக இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, கணவன் செய்திருக்கும் தவறின் பின்னணியை அறிந்து அனுமோல் வெடிக்கும் காட்சிகளில், பாதிக்கப்பட்டவர்களின் கோபமும் வலியும் அவரது நடிப்பில் அழுத்தமாக வெளிப்படுகிறது.
குடும்பத்துக்காக ஒரு தவறைச் செய்துவிட்டு, அதே குடும்பத்துக்காக அதன் விளைவுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராகும் மனிதராக குரு சோமசுந்தரம். அளவான நடிப்பு… இயல்பான உடல்மொழி… அவ்வப்போது நகைச்சுவை கலந்த வசன உச்சரிப்பு என தனது பாணியில் கவர்கிறார்.
விஜய் விஷ்வா–அர்ச்சனா ஜோடி திரையில் வந்தாலே கொஞ்சம் துள்ளல். இளமைத் துடிப்புடன் நடித்திருக்கிறார்கள். சாய் விக்கி–நயனா சாய் ஜோடி வரும் காட்சிகளோ, கதையின் உணர்ச்சிப் பக்கத்தை இன்னும் கனமாக்குகின்றன.

சதீஷ்.ஜி-யின் ஒளிப்பதிவு படத்தின் பட்ஜெட்டைத் தாண்டி ‘வெளிநாட்டுப் பயணம்’ அழைத்துச் செல்கிறது. அமெரிக்கா, பாரிஸ் காட்சிகளை கிராபிக்ஸ் துணையுடன் இணைத்த விதம் கச்சிதம். கே-வின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் காட்சிகளின் உணர்வுகளுக்குத் துணையாகப் பயணிக்கிறது.
ஆணவப் படுகொலை என்ற கனமான விஷயத்தைச் சுற்றி கதை நகர்ந்தாலும், படம் முழுவதும் போதனைப் பாடம் எடுக்காமல் இருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் வி.ஜே. சாபு ஜோசப்பின் படத்தொகுப்பு. காதல், குடும்பம், குற்றம், மர்மம் என வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் கதையைத் தொய்வில்லாமல் நகர்த்துகிறது.
காதலுக்கு சாதி, கௌரவம் என வேலி போட நினைப்பவர்களுக்கு எதிரான குரலாகவும், அந்த வேலிக்குள் சிக்கிக் கொள்ளும் குடும்பங்களின் வலியைப் பேசும் படமாகவும் ‘பாரிஸ் கஃபே’ இருக்கிறது.
காதலை வெறும் ரொமான்ஸாக மட்டும் பார்க்காமல், அதன் பின்னால் இருக்கும் சமூகச் சிக்கலையும் பேச முயன்றிருக்கும் இந்தக் ‘கஃபே’… மனதில் கொஞ்சம் கசப்பையும், நிறைய கேள்விகளையும் விட்டுச் செல்கிறது!

