திரை விமர்சனம்

‘சிக்மா’ திரை விமர்சனம்!

ரூ.1000 கோடி மாஃபியா பணம்! வெளிநாட்டில் ஒரு ரகசிய லாக்கர்! அதைத் திறக்க இரண்டு சாவிகள்! ஒரு சாவி வில்லன் ரெட்டியிடம்… இன்னொரு சாவி எழிலிடம்!

இப்படி ஆரம்பிக்கும்போதே ‘அடடே… ஆட்டம் பெருசா இருக்கே!’ என்று நிமிர்ந்து உட்கார வைக்கிறது ‘சிக்மா’. ஆனால், அந்த நிமிர்ந்த உட்கார்வு கொஞ்ச நேரத்திலேயே சாய்ந்து… கடைசியில் ‘சரி, போதும்!’ என்று ஆகிவிடுகிறது!

சந்தீப் கிஷன், தந்தை வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கிறார். இருந்தாலும் தாயின் நினைவாக இருக்கும் நூலகத்தை விடாமல் நடத்திக்கொண்டே, கடனை எப்படியாவது அடைத்துவிட வேண்டும் என்று போராடுகிறார். பணத்துக்கு வழியில்லாமல் கேசினோவுக்குப் போகிறார். ஆரம்பத்தில் அதிர்ஷ்டம் அடிக்கிறது. ‘இன்று நம்ம நாளு!’ என்று நினைக்கும் நேரத்தில், ஆட்டம் தலைகீழாகி கையில் இருந்த மொத்த பணத்தையும் இழக்கிறார்.

அதன்பிறகுதான் கதைக்கு வேகம் வரும் என்று பார்த்தால்… பலரும் தேடும் ஒரு பென் டிரைவ், லாக்கரைத் திறக்கக்கூடிய சாவி என இரண்டும் சந்தீப் கிஷன் கையில் வந்து சேர்கின்றன. ‘இதை வைத்து பணம் சம்பாதித்துவிடலாம்!’ என்று முடிவு செய்கிறார். அந்தச் சாவி சந்தீப்பிடம் எப்படி வந்தது? பென் டிரைவுக்குள் என்ன இருக்கிறது? ரூ.1000 கோடி பணம் யாருக்குப் போகிறது? சந்தீப் தனது கடனை அடைத்தாரா? என்பதுதான் மீதிக் கதை.

அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய் எடுத்துக்கொண்ட கதைக்களத்தில் நல்ல சுவாரஸ்யம் இருக்கிறது. சாவி, லாக்கர், பென் டிரைவ், மாஃபியா பணம் என ஹெய்ஸ்ட் திரில்லருக்குத் தேவையான அத்தனை சரக்குகளும் இருக்கின்றன. ஆனால், அந்தச் சரக்குகளை வைத்து பரபரப்பான திரைக்கதையை உருவாக்கியிருக்க வேண்டாமா? அதுதான் இங்கே பெரிய குறை.

ஹெய்ஸ்ட் படம் என்றாலே நாற்காலியின் நுனியில் உட்கார வைக்க வேண்டும். ஆனால், ‘சிக்மா’வில் நாற்காலியிலேயே சாய்ந்து உட்காரும் அளவுக்குத்தான் பரபரப்பு இருக்கிறது! முதல் பாதியிலும் பெரிய அளவில் திரில்லர் வேலை செய்யவில்லை. இரண்டாம் பாதியில் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்த்தால், படம் மீண்டும் ஆறிப்போய்விடுகிறது. இடைவேளைக்கு முன் வரும் ஆக்ஷன் காட்சி மட்டும் கொஞ்சம் ‘சரி… இப்போ ஆரம்பிக்குது!’ என்று நம்பிக்கை கொடுக்கிறது. ஆனால் அதன்பிறகு அந்த வேகம் தொடர்ந்து பயணிக்கவில்லை.

ஒரு ஹீரோவுக்கு மாஸ் வர வேண்டுமென்றால், எதிரில் நிற்கும் வில்லனுக்கும் அந்த மாஸ் இருக்க வேண்டும். ஆனால் இங்கே வில்லன் கதாபாத்திரம் எதிர்பார்த்த அளவுக்கு அழுத்தமாக இல்லை. வில்லன் வெயிட்டாக இல்லாததால், ஹீரோவின் வெற்றியும் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. இதுதான் படத்தின் மிகப்பெரிய மைனஸ்.

அதேபோல், கதாபாத்திரங்களோடு நமக்கு பெரிய அளவில் எமோஷனல் கனெக்ட் ஏற்படவில்லை. சந்தீப் கிஷன் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் தனது பங்களிப்பை அழுத்தமாகக் கொடுத்திருக்கிறார். ஆனால், அவரது கதாபாத்திரத்தோடு சென்டிமெண்ட் அளவில் நம்மை இணைக்க முடியாதது திரைக்கதையின் குறை.

சம்பத், ஃபரினா அப்துல்லா, அன்புதாசன், ஷிவ் பண்டிட் என மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள். இதுதான் படத்தின் ப்ளஸ் பாயிண்ட்களில் முக்கியமானது. குறிப்பாக நடிகர்களின் பங்களிப்பும், கதைக்களத்தின் அடிப்படை ஐடியாவும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. தமனின் பின்னணி இசையும் பாடல்களும் ஓகே ரகம். ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம். டெக்னிக்கல் அம்சங்களும் முழுமையான திருப்தியைத் தரவில்லை.

ரூ.1000 கோடி பணம் இருக்கும் லாக்கர்… இரண்டு சாவிகள்… அதைச் சுற்றி ஓடும் மாஃபியா… இத்தனை இருந்தும், படம் நம்மை ‘பணம் எங்கே?’ என்று கேட்க வைப்பதற்குப் பதிலாக, ‘திரில்லர் எங்கே?’ என்று தேட வைக்கிறது!

மொத்தத்தில், கதைக்களம், நடிகர்களின் பங்களிப்பு, இடைவேளைக்கு முன் வரும் ஆக்ஷன் காட்சி ஆகியவை ப்ளஸ் என்றால், வலுவில்லாத திரைக்கதை, ஒர்க் அவுட் ஆகாத எமோஷன், அழுத்தம் இல்லாத வில்லன், சுவாரஸ்யம் குறைந்த திரைக்கதை நகர்வு ஆகியவை மைனஸ்.

சாவி இருக்கிறது… லாக்கர் இருக்கிறது… ரூ.1000 கோடி இருக்கிறது… ஆனால் அந்தப் பணத்துக்கு இணையான ‘திரில்லர்’ மட்டும் இல்லை!

‘சிக்மா’ போரடிக்குதுமா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE