திரை விமர்சனம்

‘ஏழு கடல் ஏழு மலை’ – திரை விமர்சனம்!

தமிழின் ஆதியும் அந்தமும் அறிந்த ஒருவன்
சாகா வரம் கொள்கிறான்
தொல்காப்பியமும்
திருக்குறளும் சொல்லித் தந்த அறத்தை
காலம் கடந்தும் தேடும் இதயம்
முதல் நாள் வரை எல்லோரும் நெரிசலாய் திமிறிக்கொண்டு பயணம் செய்து களைத்த அதே இரயில் பெட்டிகள்
மிகச் சரியாக தீபாவளி நாளில் யாருமற்று வெறுமையாக ஓடுகிறது
அந்த ஒரு நாளில்
எட்டாயிரம் ஆண்டுகளாக மரணமற்று வாழும் பெயரற்ற ஒருவன் பயணிக்கும்
அதே பெட்டியில்..
மதுரையிலிருந்து தன்னுடைய மனைவியின் வயிற்றில் ஆறு மாத குழந்தையை விட்டுவிட்டு வெளிநாட்டு வேலைக்கென பிரிந்து துபாய் கட்டிட வேலைக்கு புலம் பெயர்ந்த கணவன் நாடு திரும்பி அதே நாளில் அதே இரயில் பெட்டியில் மதுரைக்குச் செல்லும் கனவோடு தூக்க முடியாமல் இரண்டு சூட்கேஸ்களை ஏற்றியபடி நுழைகிறான்.
காதில் அவனின் அறியாமையை தெளிவுபடுத்தியபடி வழி நடத்தும் நண்பனின் குரல் வேறு உடனிருக்கிறது
காட்சிகள் மெல்ல மெல்ல தீப்பிடித்து
எகிறுகிறது.
எதிரிலிருக்கும் எளியவனின் கேள்வியும்
பதிலுரைக்கும் எட்டாயிரமாண்டு மரணமற்றவனின் வாழ்வுமாக விரியும் திரைக்கதை
மன அவஸ்தைகள் மற்றும் மறக்க முடியாத நினைவுப் பாதைகள்
எல்லா பிறவிகளிலும் எதிர்ப்படும் தேவதை
வளமான வானத்திலிருந்து வனத்திலிருந்து
முழுவதுமாக தொலைந்த பாலை நிலத்தில்
வறட்சியுடன் எஞ்சிய ஊன மனிதர்கள்,
ஆதரவற்ற மனித மிச்சங்கள்
அள்ளி அணைக்கும் தேவதை நெஞ்சு
இரண்டு பெட்டிகளைக் கடந்து போக முடியாத கதை
ஆதித் தமிழின் அறிமுகம்
துபாய்த் தமிழனின் நிர்கதி நிலை
மண்ணில் வேர்கொண்ட முதல் விதைக்கு நீர் வார்த்த தமிழன் குணம்
கொடிக்கு தேர் ஈந்த மரபு
மனிதர்கள் மட்டுமே உயிர்களல்ல
மண்ணில் உயிர்க்கும் அசையும் அனைத்துயிர்களும் பொது
ஜாதி, மதம்,இனம்,சட்டம், எழுதி வைக்கப்பட்டவை, இனியும் எழுதப்படுபவை அனைத்தையும்
ஆதியின் புள்ளியிலிருந்து கண்டுவரும்
ஓருயிர்
ஒற்றை சிறு உயிர்
யாரும் மதிக்காது புறக்கணிக்கும் ஓர் உயிர்
இழிவினும் இழிவாக அதன் மரணத்தை
நிகழ்வேற்றும் ஓர் இனம்
கால மாற்றத்தில் கழன்று கழன்று
மனிதம் தொலைந்த ஓர் இருப்பு
வேட்டையாடி வேட்டையாடி
எறும்புகளையும் நசுக்கும்
ஈவு இரக்கமற்ற குணம்
தமிழின் குணமும் மணமும்
அற்புதக் கவிதையாகும் இடம்
வாழும் எல்லா காலத்திலும்
ஒற்றை முகம் மாறாத அதே மனுசியை
அதே தேவதையை
ஏங்கிக் காத்திருந்து தேடும் அவனுக்கு
ஞாபகங்கள் தொலைவதில்லை
அவளின் முகம் செயல் அசைவுகள்
எதுவும் மறப்பதில்லை
தொலைதூர மலையில் மீச்சிறு புள்ளியாக அவள் முகம் தென்பட்டாலும்
மிக முழுமையாக அவள்தான் என்று அறிந்துவிடும் நுட்பத்தில்
அவன் அவளது வாசனையையும் சேமித்து வைத்திருக்கிறான்
அவளோ எல்லா பிறவியிலும் அதே வாசனையோடும் அதே பூ முகத்தோடும்
அதே பேரன்போடும் பிறக்கிறாள்
ஒவ்வொரு காத்திருப்பிலும் தேடலிலும்
மிகச் சரியாக வந்து சேர்ந்துவிடுகிறாள்
இறுதியின் இறுதியில் எல்லா கதைகளையும் கேட்ட பிறகும்
உன்னோடு இனியும் வர இயலாது
என்கிற உண்மையை பறைசாற்றிவிட்டு கிளம்பிவிடுகிறாள்
தொடர் பிறவிகள்
தொடர் தேடுதல்கள்
யாவும் காலப் பிரகாரம்
என்றபடி ஓடும் இரயிலில்
ஓர் அறச் செயல்பாடு
ஓர் எலியின் வழியே முழு வாழ்வியலையும்
புரிய வைக்கும் மனப் போராட்டம்
எல்லா காலத்திலும் மாறாத ஒன்று
பெய்யும் மாமழை
மாமழை போற்றுதும்
மாமழை போற்றுதும்
என்று உருகி மருகும் குரூர மனத் தெளிவு
தமிழின் வேரையும்
தமிழரின் குணத்தையும்
தோண்டிப் பார்க்கும் ஒருவன்
இன்றையப் பொழுதில் முழுமையான பைத்தியம் என்றே முன் நிறுத்தப் படுவான்
எல்லா உண்மைகளையும் அறிந்தே
தமிழ் பித்தின் உயர் நிலையை
உரித்து வைத்திருக்கும் ராமை
எவ்வளவு பாராட்டினாலும் தகும்
திரையில் காட்சி வழி
நவீன கவிதை எழுத கற்றிருக்கும்
ராமின் படைப்புகளில்
ஏழு கடல் ஏழு மலை
எவரெஸ்ட் உச்சம்
எல்லோரும் தெளிவற்று குழம்பி நிற்கும்
ஓர் இடத்திலிருந்து கண்டெடுத்த கருவை
அதே இடத்தின் குழப்பத்திலிருந்தே அணுகி
மிகத் தெளிவான நிலைக்கு அழைத்துச் செல்லும் திரைக்கதை அற்புதம்
யுவன் ஷங்கர் ராஜா பாடல்களும் பிண்ணனி இசையும்
குழந்தையை தூளியிலிட்டு ஆட்டும்
அம்மாவின் கைகளைப் போன்றது
வசனங்கள் மிக மிக குறைவு
காட்சி வழி விரியும் அர்த்தங்கள் அபாரம்
அஞ்சலி இக் கதைச் சூழலுக்கென்றே அவதரித்த தேவதையாய் உலா வருகிறார்
உயர்தர ஒளிப்பதிவு
அறிவு சார்ந்தவர்கள் அவை
எந்தெந்த படங்களின் வழி வந்தவை
என்பதை ஒப்பிப்பார்கள்
எனக்கு என் பார்வையில் அத்தனையும் புதிது
ராம் இத்திரைப்படத்தின் வழி
ஓர் பறவை இறகென மிதக்கிறார்
எலிக் குஞ்சுகள் மிக பத்திரமாக
மாற்றாந்தாயிடம் மார்பருந்தும் விடைபெறல்
அனைவருக்கும
அன்பை மூட்டைகட்டி தந்தனுப்புகிறது
திரைப்படம்
கிண்டலும் கேலியுமாக இடையிலேயே
புறப்பட்டுவிட்டவர்கள் அன்பற்றவர்கள்
இறுதியில் அடித்து நொறுக்கப்படவேண்டிய
சீருடைக் காவலர்கள்
பாடல் வரிகளில் கெத்து காட்டிய
மதன் கார்க்கியும்
மதி புகழேந்தியும்
அன்பின் புனிதத்தில்
முங்கிக் குளித்தவர்கள்
ராம் கொண்டாடப் பட வேண்டிய இதயம்
பாதுகாப்போம்!
மரபை மறக்காமல்
திரையில் எழுதப்பட்ட நவீன கவிதை!
நன்றி : கவிஞர் : குகை மா.புகழேந்தி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE