திரை விமர்சனம்

‘அன்பில் அவன்’ திரை விமர்சனம்!

குடும்ப எதிர்ப்பை மீறிக் காதலித்து கரம்பிடித்த அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன்  தம்பதிக்கு, திருமணம் முடிந்தும் வாழ்க்கை மட்டும் வசமாகவில்லை. நட்சத்திர விடுதியில் வேலை; ஓய்வற்ற வாழ்க்கை, காதலுக்கு அவகாசமில்லை!

காதல் மனைவியின் நீண்டநாள் கனவான ஹோம் ஸ்டேவைத் தொடங்கித் தர வேண்டும் என்ற திருமணத்துக்கு முந்தைய வாக்குறுதியை நிறைவேற்ற, மலைப்பகுதியில் அழகான வீட்டை வாங்குகிறார் அசோக் செல்வன். ஆனால் கனவு வாழ்க்கைக்காக அவர்கள் எடுத்து வைக்கும் அந்த அடி, எதிர்பாராத விதமாக உயிர் பிழைப்பதற்கான போராட்டமாக மாறுகிறது. அது என்ன? ப்ரீத்தி முகுந்தனின் கனவு நனவாகிறதா இல்லையா என்பதற்கு விடை தருகிறது ‘அன்பில் அவன்’.

காதல் திருமணம் செய்துகொண்ட சூர்யா (அசோக் செல்வன்) – இயல் (ப்ரீத்தி முகுந்தன்) தம்பதியின் வாழ்க்கைதான் படத்தின் ஆரம்பம். நட்சத்திர ஓட்டலில் வேலை, வேலைப்பளு, பொருளாதார நெருக்கடி, கணவன் – மனைவிக்குள் இருக்கும் அன்பு, தங்களுக்கென்று ஒரு ஹோம்ஸ்டே ஓட்டல் தொடங்க வேண்டும் என்ற கனவு என முதல் பாதி அழகான குடும்பக் கதையாக நகர்கிறது.

இருவரும் ஒரே ஓட்டலில் வேலை பார்ப்பதால் ஏற்படும் பிரச்னைகள், ஒருவரின் கஷ்டத்தை இன்னொருவர் புரிந்துகொள்ளும் தருணங்கள், தங்களுக்கான வாழ்க்கையை உருவாக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள் என ஆரம்பப் பகுதிகள் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கின்றன. குறிப்பாக, ஹோம்ஸ்டே தொடங்குவதற்காக இடம் தேடுவது, பர்மிஷனுக்காக அலையும் காட்சிகள் என இயக்குநர் கார்த்திகேயன் கதையை இயல்பாக நகர்த்துகிறார்.

ஆனால், ஓட்டலைத் திறக்க முயற்சிக்கும் நேரத்தில் கதை திடீரென வேறு பாதைக்குத் திரும்புகிறது. அரசியல்வாதி, போலீஸ், அரசு அதிகாரிகள், வில்லன் ஆட்கள் என பிரச்னைகள் பெரிதாகின்றன. இடைவேளைக்குப் பிறகு காதல் கதையின் இடத்தை ஆக்‌ஷன் பிடித்துக்கொள்கிறது. ஃப்ளாஷ்பேக்கில் வரும் கியூட்டான காதல் காட்சிகள் மட்டும் மீண்டும் அந்த முதல் பாதையின் ஃபீலைக் கொண்டு வருகின்றன.

அசோக் செல்வனுக்கு இது இரண்டு வேறுபட்ட முகங்களைக் காட்டும் படம். மனைவியின் கஷ்டத்தைப் பார்த்து பீல் செய்யும் கணவனாகவும், தன் கனவை நிறைவேற்றப் போராடும் இளைஞனாகவும் இயல்பாக நடித்திருக்கிறார். ஓட்டல் பர்மிஷன் வாங்க முடியாமல் போலீஸ், அரசியல்வாதி, வில்லன் கும்பல் என அடுத்தடுத்து பிரச்னைகள் வரும்போது அவர் காட்டும் பதற்றமும் துடிப்பும் கதைக்கு பிளஸ்.

காதல் மற்றும் குடும்பக் காட்சிகளில் நிதானமாக நடிக்கும் அவர், ஆக்‌ஷன் காட்சிகளில் வேறு வேகத்தைக் காட்டுகிறார். குறிப்பாக இடைவேளைக்குப் பிறகான ஆக்‌ஷன் பிளாக்களில் முத்திரை பதிக்கிறார். ஆனால், சில இடங்களில் ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷன்கள் வந்து போவது மைனஸ்.

ப்ரீத்தி முகுந்தனுக்கு இது நல்ல ஸ்கோப் உள்ள படம். வழக்கமான ஹீரோயின் கேரக்டரைத் தாண்டி நடிப்பதற்கு நிறைய இடம் கிடைத்திருக்கிறது. ஓட்டலில் அதிகாரிகளால் அவமானப்படுவது, போலீஸ் கையில் சிக்கித் தவிப்பது, தங்கள் ஓட்டலுக்கு எதிராகத் தடைகள் வரும்போது கொதிப்பது என பல காட்சிகளில் தன் நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, இடைவேளைக்கு முன் அசோக் செல்வனுடன் வரும் எமோஷனல் காட்சி சிறப்பு. பாடல் காட்சிகளில் வழக்கம்போல அழகு. ஆனால், இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் அதிகரிக்க அதிகரிக்க அவரது கேரக்டரும், நடிப்புக்கான இடமும் குறைந்துவிடுகிறது.

ஓட்டலுக்கான இடத்தை வழங்கும் ராணியாக வரும் ரேவதிக்கு ஆரம்பத்தில் முக்கியத்துவம் இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால், சில காட்சிகளுக்குப் பிறகு அவர் காணாமல் போய்விடுகிறார். கிளைமாக்ஸில் மீண்டும் வரும்போது ஏதாவது முக்கியமான திருப்பம் இருக்குமோ என்று எதிர்பார்த்தால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அந்த கேரக்டரை இன்னும் கொஞ்சம் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

அரசியல்வாதி, எம்.எல்.ஏவாக வரும் கதிர்பாலு வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். வக்கீலாக வரும் சாபு தன் பங்குக்கு மிரட்டுகிறார். மறைந்த டெல்லி கணேஷின் மகன் மகா, சபலமான போலீஸ் இன்ஸ்பெக்டராக வித்தியாசமான பாத்திரத்தில் வருகிறார். அவருக்கும் ப்ரீத்தி முகுந்தனுக்கும் இடையிலான காட்சிகள் படத்தின் பரபரப்பைக் கூட்டுகின்றன.

சென்னை மற்றும் ஊட்டி என இரண்டு களங்களிலும் கதையை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கவுதம். குறிப்பாக, இடைவேளைக்குப் பிறகான ஆக்‌ஷன் காட்சிகள் விஷுவலாக கவர்கின்றன. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும் பாடல்களும் காதல் காட்சிகளுக்கு நல்ல ஃபீல் கொடுக்கின்றன.

ஆனால், பிரச்னை இரண்டாம் பாதியில்தான்.

ஒரே ஓட்டல். அதே பிரச்னை. அதே வில்லன் கும்பல். மீண்டும் சண்டை. மீண்டும் ஹீரோ – ஹீரோயின் போராட்டம். இப்படியே கதை சுற்றிச் சுற்றி வர ஆரம்பிக்கிறது. வீட்டுக்குள் இருக்கும் இரண்டு பேர் நூற்றுக்கணக்கான வில்லன் ஆட்களை அடிப்பதும், தொடர்ந்து அடிவாங்குவதும் ஒரு கட்டத்துக்கு மேல் நம்ப முடியாததாகிறது.

‘எப்படா இந்த ஓட்டலைத் திறப்பீங்க… இந்தச் சண்டை எப்போதுதான் முடியும்?’ என்று பார்வையாளர்களே கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள்!

முதற்பாதியில் இருந்த இயல்பான காதல், குடும்ப உணர்வு, கனவு, போராட்டம் ஆகியவை இரண்டாம் பாதியில் காணாமல் போய், வழக்கமான சினிமா வில்லன் – அரசியல்வாதி – போலீஸ் – ஆக்‌ஷன் பாதைக்குள் படம் சிக்கிக்கொள்கிறது. ஓட்டல் பிரச்னையும் சண்டையும் மட்டுமே மீண்டும் மீண்டும் சுற்றி வருவது திரைக்கதையின் வேகத்தை குறைக்கிறது.

அந்த நீண்ட ஆக்‌ஷன் பிளாக்கை பாதிக்கும் குறைவாகக் குறைத்திருந்தால், இரண்டாம் பாதியின் விறுவிறுப்பு கூடியிருக்கும்.

காதலைச் சொல்லும்போது மென்மையாகவும், இளம் தம்பதிகளின் அன்பைச் சொல்லும்போது இயல்பாகவும் இருக்கும் படம், ஆக்‌ஷனுக்குள் நுழைந்ததும் எதார்த்தத்தை விட்டு விலகுகிறது.

காதல் கலந்த குடும்பக் கதையாக ஆரம்பித்து, ஆக்‌ஷன் படமாக முடிகிறது. முதல் பாதியின் அழகும் இயல்பும் இரண்டாம் பாதியில் கொஞ்சம் இருந்திருந்தால்… இந்த ஓட்டல் இன்னும் ருசியாக இருந்திருக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE